அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 1 : நபிகள் நாயகம்!

என்னோடு பணிபுரியும் நண்பர் தங்கராசு கேட்டார் : என்ன சார் பிரச்சினை ? எங்கே பார்த்தாலும் முஸ்லிம்களின் போராட்டமா இருக்கு!

எனது அன்புக்குரிய நண்பர் அவர். மிகவும் வருத்ததோடு அன்பு நபி மீது அபாண்ட
ம் சுமத்தி எடுக்கப்பட்ட படம் பற்றி அவரிடம் விளக்க வேண்டி இருந்தது. இப்படி நிறைய கேள்விகள்.

எல்லா விஷயங்கள் போலத்தான் கருத்து சுதந்திரமும். அதற்கும் ஒரு வரம்புண்டு. அதை யாரும் மீறக்கூடாது. கொடுக்கப்பட்ட கருத்து சுதந்திரத்தை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது. அதை பொறுப்போடு பயன்படுத்த வேண்டும்.

சர்ச்சைக்குரிய திரைப்படத்தை விட்டுவிடுங்கள். இஸ்லாத்தையும் மறந்துவிடுங்கள். நீங்கள் உயிருக்கு உயிராய் நேசிக்கும் ஒருவரை யாராவது திட்டினால் அல்லது அவர் மீது அபாண்டம் சுமத்தினால் கோபம் வருமா? வராதா? எந்த கோபத்தின் வெளிபாடுதான் உலகம் முழுவதும் நடந்து வரும் ஆர்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

திரு நபி மீதான நேசம் இறைவனுக்கு அடுத்தபடியான நேசமாகும்! ஒவ்வொரு முஸ்லிமின் இறை நம்பிக்கையோடு பிண்ணி பிணைந்தது. நபிகளாரின் ஒப்பற்ற மானுட விழுமியங்கள், ஒழுக்க மாண்புகள் மனித மனங்களில் ஏற்படுத்திய ஈர்ப்பு இது. இந்த ஈர்ப்பால்தான் தமது எதிரிகளையும் அன்பு நபிகளார் வென்றெடுத்தார்கள்.

அண்ணலாரின் வாழ்வில் நடந்த ஓரிரு சம்பவங்களை பாருங்களேன்.

நபிகளாரால் மிகவும் நேசிக்கப்பட்ட இருவரின் மரணம், ஒருவர் அபு தாலிப்; நபிகளாரை வளர்த்து ஆளாக்கி மக்காவாசிகளிடமிருந்து பாதுகாத்த சிறிய தந்தை.

அடுத்தவர் அன்புக்குரிய மனைவியும், அன்பு நபியின் இயக்கத்தை தோளோடு தோள் நின்று முன்னெடுத்து சென்றவருமான அன்னை கதிஜா நாச்சியார்.

இந்த இருவரின் மரணமும் நபிகளாரை மிகவும் பாதித்தது. துயர ஆண்டாக எண்ணி உருக வைத்து.

மூன்றவதாக மற்றொரு சம்பவமும் நடந்தது. அது வரலாற்றில் தாயிப் துயரம் என்றழைக்கப்படுகிறது.

மக்காவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த மலைவாசத்தலம் தாயிப். குளு குளு பிரதேசம். 10 ஆண்டுகள் மக்காவில் தொடர் அழைப்பியல் பணிகளில் ஈடுபட்டு அந்த திருச் செய்தியை யாரும் ஏற்காததால் அன்பு நபி இன்னொரு களத்தை தேர்வு செய்கிறார்கள்; அது தாயிப்.

ஒரு முறை நபிகளாரின் அருமைத் துணைவியார் அன்னை ஆயிஷா கேட்கிறார்கள்: "இறைவனின் திருத்தூதரே, உஹத் நாளைவிட மிகவும் நெருக்கடியான நாளொன்றை தாங்கள் சந்தித்திருக்கிறீர்களா?"

உஹத் போர்க்களம் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்துக்கு உயிர்-உடமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அறைகூவலாக அமைந்த ஒரு யுத்தக்களம். அதில் நபிகளார் படுகாயமுற்றார்கள். அன்பு நபிகளாரின் திருமுகம் குருதி மயமானது. அண்ணலாரின் புனித பல்லொன்றும் உடைந்து போனது. எதிரிகளின் அம்பொன்று அன்பு நபியின் தலைக்கவசத்தையும் துளைத்துச் சென்றது.

அத்தகைய பேராபத்து மிக்க போர்க்களத்தைவிட கொடிய அனுபவம் கொண்ட நாள் ஒன்றை கண்டதுண்டா? என்றறியவே அன்னை ஆயிஷா அவர்களின் அவா.

அந்தக் கேள்விக்கு திருநபிகளார் இப்படி பதில் அளித்தார்கள்: "ஆம், உஹதைவிட கொடிய நாளொன்று எதிர்படவே செய்தது; அது தாயிப் ஆயிஷா!" என்கிறார்கள்.

தாயிப் நகரின் சகீப் கோத்திரத்து பெருந்தலைவர்களை நபிகளார் சந்திக்க திட்டமிட்டு அவர்களை அணுகவும் செய்தார்கள். தங்களது திருச்செய்தியை அவர்கள் முன் சமர்பிக்கும்போது அவர்களில் ஒருவன் சொன்னான்: "உம்மைவிட்டால் வேறு யாரும் இறைவனுக்குத் தூதராக கிடைக்கவில்லையோ?" அடுத்தவனோ, "நீர் உண்மையிலேயே இறைத்தூதராக இருப்பின் எனக்கு உம்மோடு பேசத்தகுதியில்லை! அப்படி இல்லையென்றால்.. என்னோடு பேச உமக்குத் தகுதி இல்லை!"- என்றான் கிண்டலுடன். மூன்றாமவன் இவர்களுக்குச் சற்றும் சளைத்தவனாக இல்லை. சொன்னான்: "உம்மை இறைத்தூதராக ஏற்றுக் கொள்வதைவிட அந்த கஅபாவின் திரைச்சீலையை கிழித்தெறிந்துவிடுவேன்!"

அவமானங்களின் மொத்த உருவமாக அவர்கள் இருந்ததோடு மட்டுமல்லாமல் மக்கள் ஈடேற்றம் பெறுவதற்காக தன்னலம் கருதாமல் அவர்களை நேர்வழிப்படுத்த சென்ற நபிகளார் மீது வன்முறையாளர்களை ஏவிவிட்டார்கள்; மன காயங்களோடு உடல் காயங்களை, ஏற்படுத்துவதற்காக.

கேலி, கிண்டல்கள், கூச்சல் ஆர்ப்பாட்டங்களோடு வெறி கொண்ட அந்த கூட்டம் நபிகளாரை தாயிப் நகரின் தெருக்களில் ஓட விட்டார்கள். சொல்லடியுடன், கல்லடியும் சேர அன்பு நபியின் திரு உடலெங்கும் குருதிமயம். கால் செருப்புகள் குருதியின் ஈரத்தால் அன்பு நபியை சறுக்கிவிட அண்ணலார் விழுவதும், எழுவதுமாய் அங்கிருந்து சென்றார்கள். வன்முறைப் போக்கு ஊர் எல்லைவரைத் தொடர்ந்தது.

இந்தக் காட்சிகளை அன்னை ஆயிஷாவிடம் விளக்கிக் கொண்டிருந்த நபிகளார், "அந்த சூழலில் நான் எங்கே சென்று தப்பித்துக் கொள்வது என்று திசைத் தெரியாமல் ஊருக்கு வெளியே இருந்த ஒரு திராட்சைத் தோப்புக்குள் தஞ்சம் புக வேண்டி வந்தது ஆயிஷா!"என்றார்கள் அன்பு நபி.

உடலெல்லாம் வலிக்க மனம் அதைவிட வலியெடுக்க.. அன்பு நபியின் இருகரங்கள் வானத்தை நோக்கி விரிந்தன. உதடுகள் முணுமுணுத்தன. அந்த முணுமுணுப்பு ... பெரும் பிரார்த்தனையாய் காலச்சுவட்டில் காற்றோடு தென்றல் காற்றாய் புண்பட்ட ஒவ்வொரு மனதையும் வருடிவிடுவதை கொஞ்சம் கேளுங்கள்:

"ஓ! இறைவா! எனது பலவீனத்தை, நாதியற்ற நிலையை, மக்கள் முன் எனக்குள்ள இழிநிலையை உன்னிடமே நான் முறையிடுகின்றேன். நீயே எனது எஜமானன்.

என்னை யாருடைய கையில் நீ ஒப்படைக்க போகிறாய்? என்னைத் துன்புறுத்தக்கூடிய தூரத்து அந்நியன் ஒருவனிடமா? அல்லது என்னை எதிர்க்கவென நீ நாடியுள்ள ஒரு பகைவரிடமா?

அதெற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. நீ மட்டும் என்னிடம் கோபம் கொண்டுவிடாதே!

உனது உதவியை அகன்றதொரு பாதையாக மாற்றிவிடு! உன் பேரருள் பிழம்பின் ஒளியிலேயே நான் அடைக்கலம் தேடுகின்றேன். அதன் மூலமே அனைத்து இருள்களிலிருந்தும் ஒளி கிட்டுகின்றது. அதன் மூலமே இம்மை-மறுமை அம்சங்கள் யாவும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

உனது கோபத்தை என் மீது இறக்கிவிடாதே! உன் சோதனை என்னைப் பீடிக்கச் செய்துவிடாதே! நீ திருப்தி அடையும்வரை என்னை நீ கடிந்து கொள்வாய்! உன் மூலமே அன்றி எந்தவொரு அதிகாரமும் சக்தியும் எனக்கில்லை!"

இந்த சம்பவம் நிகழ்ந்ததும், தமது தலைக்கு மேலாக கருமேகம் கருத்து வருவதை அன்பு நபிகளார் கண்டார்கள்.

வானவர் தலைவர் நபிகளார் முன் தோன்றுகிறார்.

"முஹம்மதுவே! (ஸல்) உமதிறைவன் உமது மக்கள் உம்மிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை கண்டான். அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதையும் கேட்டுக் கொண்டான். உமக்கு உதவியாக என்னை அனுப்பிவைத்துள்ளான்.

இதோ! இந்த மலைக்கு பொறுப்பு வகிக்கும் வானவர்கள் என்னோடு இருக்கிறார்கள். நீங்கள் ஒரே ஒரு ஆணையிடுங்கள், இரு மலைகளுக்கு இடையுள்ள இந்த தாயிப் நகர மக்களை நாங்கள் நசுக்கிவிடுகின்றோம்!"

நபிகளாரின் திருமேனியிலிருந்து வழிந்து கொண்டிருந்த உதிரப்போக்கு இன்னும் நிற்கவில்லை. கல்லடிப்பட்ட இடங்களின் வலியும்-வேதனையும் இன்னும் குறையவில்லை.

இந்நிலையில் பதறியவாறு அன்பு நபிகளார் சொல்கிறார்கள்: " வேண்டாம்..! வேண்டாம்! இவர்களை விட்டு விடுங்கள். இவர்களின் சந்ததிகளாவது எனது செய்தியை ஏற்கலாம். வேண்டாம்! வேண்டாம்..! இவர்களை விட்டுவிடுங்கள்!"

எதிரிகளை பழிவாங்கும் உணர்வில்லை. எதிரிகள் மீது எந்தவிதமான காழ்புணர்ச்சிகளும் இல்லை. ஒரு தாயின் பேரன்போடு, சகிப்புத்தன்மை, தொலைநோக்கிலான பெரும் லட்சியம், அந்த இலக்கை எட்டுவதற்கான அர்ப்பணிப்பு என்று இமயமாய் நபிகளார் விண்ணுயர நிற்கிறார்கள்.

1400 ஆண்டுகள், எல்லைகள் கடந்து, மொழிகள் கடந்து, காணாத முகங்களைத் தாண்டி பெளர்ணமி நிலவாய் என்னையும், என்னைத்தாண்டி வரவிருக்கும் உலக முடிவு நாள்வரையிலான உலக மக்களை ஈர்க்க இருக்கும் ஒரு தேனடையின் ஒரு சொட்டு தேனாய்தான் இந்த வரலாற்று சம்பவத்தை , அன்பு நபியின் உயரிய ஒழுக்கவியலின் ஒரு சிறு பகுதியை நான் தங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

உலக மக்களுக்கோர் அருட்கொடை என்றுதான் அன்பு நபியை திருக்குர்ஆன் பட்டப் பெயர் சூட்டி விளிக்கிறது.

அன்பு நபிகளாரின் ஒரு அறுபது ஆண்டு கால வாழ்வியல், தெள்ளத் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் மனித குலத்துக்கு வழிகாட்டக்கூடியது.

அண்ணலாரின் ஒழுக்கவிழுமியங்கள் இமயங்களை மிஞ்சும் ஒப்பில்லாதவை என்றால்.. அன்பு நபி உலக மக்கள் மீது கொண்டிருந்த நேசமோ அளவிடமுடியாதது.

தங்கள் திரு அதரங்களாலேயே அன்பு நபிகளார் சொல்வதைக் கேளுங்கள்: "ஒரு மனிதர் இரவில், காட்டில் தீ மூட்டினார். அந்த தீயின் ஒளியால் ஈர்க்கப்பட்ட விட்டில் புச்சிகள் தங்களை மாய்த்துக் கொள்ள நெருப்பருகே வருகின்றன. அதைக் கண்ட அவர் பதறியவராய் இரு கரங்களால் ஓடி ஓடி தடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த உவமைக்கு சற்றும் குறைந்தல்ல என்னுடைய உதாரணமும்! இந்த மக்கள், நரக நெருப்பை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களின் இடுப்பை பிடித்திழுத்து தடுத்துக் கொண்டிருக்கின்றேன்!"

இத்தகைய ஒரு உன்னத நோக்கத்தைக் கொண்டவரைதான் இன்று தூற்றலுக்கு ஆளாக்கி இருக்கிறது ஒரு திரைப்படம்.

விமர்சனங்கள் வேறு. தூற்றல்கள் வேறு என்பதை என் நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவனின் திருச்செய்தியை - திருக்குர்ஆனை, அதை சிரமேற்கொண்டு சிரத்தையுடன் பணியாற்றிய அன்பு நபிகளாரின் வாழ்வியலை படித்துப் பார்க்க எனது முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் விருப்பம் கொள்ள வேண்டும்.

இந்த விருப்பத்தை நிறைவேற்ற தேவையான உதவிகளை முஸ்லிம் சகோதரர்கள் செய்ய வேண்டும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 2376748946815568545

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress