அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 34: 'மறுமை விசாரணையின் முதல் வழக்கு!'




நடு நிசி..

திடீரென்று ஒலித்த குரலைத் தொடர்ந்து அந்தத் தெருவே விழித்துக் கொண்டது.

பர்வீனுக்குப் பிரசவ வலி ஆரம்பித்துவிட்டது.

பங்கஜம் மாமி பரபரத்தாள்.

அப்துர் ரவூப்புக்கு நைட்ஷிப்ட். அவரது ஆபிஸீக்குப் போன் செய்து தகவல் சொல்லிடுங்க.

போன் செய்ய.. எதிர்வீட்டு அந்தோணி ஓடினார்.

பர்வீன்-அப்துர் ரவூப் தம்பதியரின் இரண்டு குழந்தைகள் என்ன ஏது என்று தெரியாமல் பயந்து விட்டிருந்தன.

பக்கத்து வீட்டு விசாலாட்சி அம்மாள் குழந்தைகளை அணைத்துக் கொண்டார்.

அதற்குள் யாரோ ஓடி ஆட்டோவைப் பிடித்து வந்துவிட்டார்கள்.

மருத்துவமனையில் பர்வீன் சேர்க்கப்பட்டு.. கணவன் வருவதற்குள் அழகான பெண் குழந்தைய ஈன்றெடுத்தாள். 

அன்றைய இரவு ஓடிவந்து உதவி செய்தவர்கள்..

பர்வீனின் சொந்தபந்தங்களோ அல்லது அப்துர் ரபூப்பின் உறவினரோ அல்ல. எல்லாம் அண்டை, அயலார்தான். நல்லது-கெட்டது எது நடந்தாலும், முதலில் ஓடிவருவது, உதவி செய்வது அண்டை வீட்டார்கள்தான். அதனால், அவர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளும்படி நபிகளார் வலியுறுத்துகிறார்கள். அவர்களது உரிமைகளைப் பேணும்படி அறிவுறுத்துகிறார்கள்.


"ஜீப்ரீல் அவர்கள் (காப்ரியல்) அண்டை வீட்டாருடன் நன்னடத்தையை மேற்கொள்ளும்படித் தொடர்ந்து வலியுறுத்தியவண்ணமே இருந்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர் அண்டை வீட்டாரைச் சொத்தில் கூட வாரிசாகிவிடுவாரோ என்று நான் நினைத்துவிட்டேன்!" (புகாரி, முஸ்லிம்) என்கிறார்கள் நபிகளார்.

இன்னொரு இடத்தில் நபிகளார் கூறுகிறார்கள்: "ஒரு முஸ்லிமின் நற்பேற்றுக்கு அடையாளங்கள் மூன்று:

  • விசாலமான இல்லம், 
  • நல்ல அண்டை வீட்டார், 
  • சிறந்த வாகனம் (அல் அதபுல் முஃப்ரத்)

மறுமை நாளில் இறைவனின் சந்நிதியில் தொடங்கும் வழக்கு விசாரணையில் மனித உறவுகள் சம்பந்தமான வழக்கு தொடங்கும்.

அப்போது இரு மனிதர்கள் இறைவனின் திருமுன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் உலகில் அண்டைவீட்டாராய் வாழ்ந்திருப்பார்கள். ஒருவர் மற்றொருவருக்கு ஏதாவது தொல்லைத் தந்து அநீதி இழைத்திருப்பார்.

அதைத்தான் நபிகளார் சொல்லி எச்சரிக்கிறார்கள்:

"இறுதித் தீர்ப்பு நாளில் எல்லாவற்றுக்கும் முதலாவதாக விசாரணைக்கு வரும் வழக்கு அண்டைவீட்டார் சம்பந்தப்பட்டதாகும்!" (மிஷ்காத்)

அண்டை வீட்டாருடன் இணக்கமாக இருப்போம்.

நல்லிணக்கம் வளர்ப்போம்.

இறையன்பைப் பெறுவோம்.

  இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 4132236926733249081

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress