அழைப்பது நம் கடமை - 20,'கடைநிலைக் காவலராய் ஒரு ஜனாதிபதி!'



உண்மையில், அரசியல் அமைப்பு என்பது என்ன? அரசியல் அமைப்பின் நோக்கம் எதுவாக இருக்க வேண்டும்? ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும்? 

அழைப்பாளர்கள் தங்கள் அழைப்பியல் களங்களில் பயன்படுத்த வேண்டிய உயிர்துடிப்புள்ள அந்த வரலாற்று நிஜங்கள் இதோ!

ஒருமுறை. ஜனாதிபதி உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!)  மதீனத்துத் தெருவில் நண்பர்கள் சூழ நடந்து  சென்று கொண்டிருந்தார்கள். உடன் அவருடைய மகன் அப்துல்லாஹ் பின் உமரும் (இறையருள் பொழிவதாக!) இருந்தார். 

தெருவில் ஒரு சிறுமி தென்பட்டாள். வறுமையின் மொத்த வடிவமாய் அவள் திகழ்ந்தாள்.

பரட்டைத் தலை. ஒட்டுப் போட்ட சட்டை. இடுங்கிய கண்கள்.

சிறுமியிடம் இரக்கம் கொண்ட ஜனாதிபதி உமர் அவர்கள், "யாரிந்த ஏழைப் பெண்?"-என்று அவளைப் பற்றி விசாரித்தார்கள்.

பக்கத்தில் வந்து கொண்டிருந்த மகன் அதற்கு நேரிடையாக பதில் சொல்லாமல் திருப்பி கேள்வி கேட்டார்:

"இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! தங்களுக்கு இந்தப்  பெண் யாரென்று தெரியவில்லையா?"

"இல்லை. இந்தப் பெண் யாரென்று எனக்குத் தெரியவில்லை. யார் இவள்?"

அரபுலகையும் தாண்டி அகண்டு விரிந்திருந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர் உமர் அவர்களின் மகனார் பதில் தந்தார்:

"இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இவள் என் மகள்!"

"என்ன! அப்துல்லாஹ்..! இவள் உமது மகளா? இவ்வளவு வறிய நிலையில்..?"

நம்ப முடியாமல் கேட்டார்கள்.

"ஆமாம்! தந்தையே! இவள் எனது மகளேதான்! அரசு பொது நிதியகமான பைத்துல்மாலிருந்து உங்கள் குடும்பத்தாராகிய எங்களுக்கு அதிகப்படியாக ஒரு பைசாவையும் தருவதில்லை. எனது வறுமை.. என் மகளை இப்படியாக்கி விட்டது!" - அப்துல்லாஹ் பின் உமரின் குரல் உடைந்து வெளிப்பட்டது. 

ஆனால், ஜனாதிபதி உமர் அவர்கள் இறைநம்பிக்கையின் உறுதியுடன் சொன்னார்கள்:

"மகனே! இறைவனை சாட்சியாக்கிக் கூறுகின்றேன்! மற்றவர்களுக்கு பொதுவாக எதைத் தருகின்றேனோ அதைவிட அதிகமாக என் குடும்பத்தாருக்குத் தர என்னிடம் ஏதுமில்லை! இது குறித்து இறைவனின் வேதம் நம்மிடையே தீர்ப்பு வழங்கட்டும்!"

தனது மகனின் கண்களிலிருந்து பெருக்கெடுக்கும் கண்ணீரையும் உமர் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.



இன்னொரு முறை. ஒட்டகக் கூட்டம் ஒன்று மதீனாவுக்கு வந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள்.

இதனை ஜனாதிபதி உமர் அவர்கள் கண்டார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு தமது நண்பரான நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபிடம் சொன்னார்கள்:

"கொஞ்சம் இந்த பரிவாரங்களுக்கு என்னோடு சேர்ந்து காவல் நிற்க முடியுமா?"

இதற்கு அந்த நபித்தோழரும் ஒப்புக் கொண்டார்கள்.

இருவரும் சேர்ந்து இரவு முழுவதும் அந்தக் குழுவினருக்குக் காவலாய் நின்றார்கள். பிந்தைய இரவான தஹஜ்ஜுத் நேரத்தில் இருவருமாய் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது.

ஜனாதிபதி உமர் அவர்கள் கூட்டத்தினரை நெருங்கி குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்கள்.

கொஞ்ச நேரம் சென்றது. மீண்டும் அதே இடத்திலிருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது.

ஜனாதிபதி உமர் அவர்கள் தாயிடம் விரைந்து சென்றார்கள். "அம்மா! இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அழாமல் கவனித்துக் கொள்ளுங்கள்!" - என்றார்கள்.

மீண்டும் அதே குழந்தை அழும் சத்தம் கேட்டது.

ஜனாதிபதி அவர்கள் குழந்தையின் தாயிடம் சென்று குழந்தை அழாமல் பார்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார்கள்.

 இப்படி மூன்று முறை நடந்தது.

கடைசியாக, குழந்தை அழும் குரல் கேட்டு தாயாரிடம் சென்ற ஜனாதிபதி அவர்கள், "அம்மா! நீங்கள் நல்ல தாய் போல நடந்து கொள்ளமாட்டேன் என்கிறீர்கள். இந்தக் குழந்தை இரவு முழுவதும் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது!" - என்றார்கள்.

தான் ஜனாதிபதி உமர் அவர்களிடம் பேசுகிறோம் என்று தெரியாமல் அந்தத் தாய் சொன்னாள்:

"இறைவனின் அருள் உங்கள் மீது பொழிவதாக! இரவு பல முறை நீங்கள் தேவையில்லாமல் எனக்கு அறிவுரை என்றப் பெயரில் தொந்திரவு செய்துவிட்டீர்கள். நான் இந்தக் குழந்தைத் தாய்ப்பால் குடிப்பதை மறக்கடிக்க முயன்று வருகின்றேன். இந்தக் குழந்தையும் தாய்ப்பால் குடிப்பதை விடமாட்டேன் என்கிறது!" - என்று சலித்துக் கொண்டாள். 

இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஜனாதிபதி உமர் அவர்கள், "அம்மா, குழந்தையைக் கட்டாயப்படுத்தி பால்குடி மறக்கடிக்கும் அவசியம்தான் என்ன?" - என்று கேட்டார்கள்.


"காரணமில்லாமல் செய்ய நான் என்ன கல் நெஞ்சம் கொண்டவளா? எங்கள் ஜனாதிபதி உமர் அவர்கள் பால்குடி நிறுத்திய குழந்தைகளுக்குத்தான் பைத்துல்மாலிலிருந்து (அரசு பொது நிதியகம்) நிதி உதவி செய்கிறார்கள்!"

"சரி..இந்த குழந்தைக்கு வயதென்ன?"

"குழந்தை பிறந்து சிலமாதங்கள்தான் ஆகின்றன!"

"குழந்தையைப் பால்குடி மறக்கடிக்க அவசரம் காட்ட வேண்டாமம்மா!" - என்றவாறு ஜனாதிபதி அங்கிருந்து சென்றார்கள்.

அதிகாலைத் தொழுகையை முன்நின்று நடத்திக் கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி உமர் அவர்கள் அழுதுவிட்டார்கள். மேற்கொண்டு திருக்குர்ஆன் வசனங்களை ஓத முடியாமல் நா தழு தழுத்தது. தொழுகையின் முடிவில் சொன்னார்கள்:

"உமர் அழிந்தான்! அவன் இறைநம்பிக்கையாளர்களின் குழந்தைகளைக் கொன்று விட்டான்!"

அத்தோடு நில்லாமல் தமது ஆட்சிக்குட்பட்ட எல்லா பகுதிகளுக்கும் இப்படி ஆணை பிறப்பித்தார்கள்:

"குழந்தைகளுக்கான நிதி உதவி பெறும் பொருட்டு எந்தத் தாயும் குழந்தையைக் கட்டாயப் படுத்தி பால் குடியை நிறுத்தக் கூடாது! இனி, பால்குடிக்கும் குழந்தைகளுக்கும் அரசின் நிதி உதவி உண்டு!"

சிறப்பு மிக்க இந்த வரலாற்று நிகழ்ச்சிகளை இதுவரை உலகம் கண்டதில்லை. 

ஓர் அகண்ட பேரரசின் ஜனாதிபதியின் குடும்பத்தார் வறுமையில் உழன்றார்கள்.

சர்வ வல்லமைக் கொண்ட ஜனாதிபதி தமது குடிமக்களின் பரிவாரத்துக்கு காவலனாய் நின்றார்கள்.

அந்த பரிவாரத்தின் கால்நடைகளும், மனிதர்களும் நன்றாக ஓய்வெடுக்க உதவினார்கள்.

ஜனாதிபதி உமர் அவர்கள் (இறையருள் பொழிவதாக!) ஒரு சாமான்ய கடைநிலைக் காவலனைப் போல தங்களின் பொறுப்பை நிறைவேற்றுவதில் எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

Related

அழைப்பியல் 3316532808567464662

Post a Comment

  1. யா அல்லாஹ் உமருக்கு அருள்புரிவாயாக....!

    ReplyDelete

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress