'அந்த வலிமையின் ரகசியம்!'

இஸ்லாமிய சிந்தனையாளர், மூதறிஞர் மௌலான ஜமீல் அஹ்மது சாஹிப் அவர்களின் அழைப்பியல் உண்மைச் சம்பவங்களிலிருந்து..

மௌலானா எம்.ஏ.ஜமீல் அஹ்மது


இறுதியாக நான் மற்றொரு முக்கிய விஷயத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அதுதான் பிரார்த்தனை! அதில் மாபெரும் வலிமை இருக்கின்றது. இறைவனின் உதவியை நாடி நாம் பணிபுரியும்போது, வியக்கத்தக்க விளைவுகளை அது ஏற்படுத்தும்.

அவசரநிலை பிரகடன காலமான எமெர்ஜென்ஸி நேரத்தில் மிஸா கைதியாக நான் சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தேன். அப்போது, ஜமாஅத்தே இஸ்லாமி தமிழக தலைவராக மௌலானா அப்துல் அஜீஸ் சாஹிப் இருந்தார். அவரும் மத்திய சிறையில்தான் இருந்தார். இன்றைய தமிழ் மாநில தலைவராக இருக்கும் மெளலானா எஃஜாஸ் அஹ்மது அஸ்லாம் சாஹிப் அப்போது வடஆற்காடு மாவட்ட அமைப்பாளராக இருந்தார். அவரும் சிறையில் எங்களோடு இருந்தார். இயக்கத்தைச் சேர்ந்த சிலரும் இருந்தனர். மேலும், ஆர்.எஸ்.எஸ், அனந்த மார்க், கம்யூனிஸ்ட் மற்றும் பல கட்சிகளைச் சார்ந்தவர்கள் எங்களுடன் இருந்தனர். 

தடை செய்யப்பட்ட இந்த கட்சிகள் ஒவ்வொன்றும் தம்மைப் பற்றி சிறைச்சாலைக்குள்ளேயே தினம் ஒரு கட்சி வீதம் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தினமும் அனைவரும் கூடுவோம். அறிவிக்கப்பட்ட கட்சியின் சார்பாக ஒருவர் அங்கு உரையாற்றுவார். ஜமாஅத்தே இஸ்லாமியின் முறை அடுத்த நாள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

அப்போது எங்கள் நிலை என்ன தெரியுமா? 



தமிழக தலைவர் - அமீரே  ஹல்கா மௌலானா அப்துல் அஜீஸ் சாஹிப் ஆங்கிலத்தில் எப்பொழுதும் உரை நிகழ்த்தியதே இல்லை. ஆனால், அடுத்த நாள் அவர் ஆங்கிலத்தில் உரையாற்ற வேண்டும். அவரது ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய பொறுப்பு என்னுடையது. நான் தமிழில் உரையாற்றுவது ஒருபுறமிருக்கட்டும் தாய் மொழியான உருதுவில் அதுவரையிலும் ஒரு மேடையில்கூட உரையாற்றியது இல்லை. ஆனால், நான் ஆங்கில உரையை எல்லோர் முன்னிலையிலும் தமிழில் மொழிபெயர்த்து உரையாற்ற வேண்டும். 

ஆக, ஆங்கிலத்தில் உரையாற்றிப் பழகாத ஒருவர் ஆங்கிலத்தில் உரையாற்ற வேண்டிய நிலை! மறுபுறம் எந்த மேடையிலும், எந்த மொழியிலும் பேசி அறியாதவனுக்கு மொழிபெயர்க்க வேண்டிய நிலை!

எங்கள் இருவரது நிலையும் எப்படி இருந்திருக்கும்? என்பதை சற்று கற்பனைச் செய்து பாருங்கள். கடைசியில், நாங்களும், எங்கள் தோழர்களும் எங்கள் பிரச்னையை இறைவனின் திருமுன் வைத்து பிரார்த்தனை செய்தோம்.

அடுத்த நாள் பொழுது விடிந்தது. நிகழ்ச்சி தொடங்கியது. மெளாலான அஜீஸ் சாஹிப் தெளிவாக, அழுத்தமாக,  ஆணித்தரமாக ஆங்கிலத்தில் உரையாற்றினார். நானும் சரளமாக தமிழில் மொழிபெயர்த்தேன். 

கூட்டம் முடிந்ததும் அஜீஸ் சாஹிப் கூறினார்: "என் வாழ்நாளில், இத்தகையதொரு உரையை நான் நிகழ்த்தியதே இல்லை!"

அனந்தமார்க் இயக்கத்தைச் சேர்ந்த நண்பர் கூறினார்: "அனைத்துக் கட்சிகளின் அறிமுகங்கள் இங்கு நடைபெற்றன. ஆனால், இன்று ஓர் அலாதியான சூழ்நிலையை உணர்ந்தோம். ஒருவித ஈர்க்கும் தன்மை கொண்ட சிறப்பான உரையாக இது அமைந்துவிட்டது"

அவரிடம் நான், "என்ன பெரிய வித்யாசத்தை உணர்ந்தீர்கள்?" - என்றேன்.

"அதை வார்த்தைகளில் சொல்ல என்னால் இயலவில்லை. ஆனால், என் மனதையும் பிறரது உள்ளங்களையும் இனந்தெரியாமல் கவரும் ஒரு நிலை இந்த அவையில் இருந்தது உண்மை!" - என்று பதிலளித்தார். 



சகோதரர்களே! அன்று ஏற்பட்ட அந்த சாதனை எங்கள் பேச்சாற்றலால் ஏற்பட்டதா? இல்லை.. இல்லவே இல்லை! மாறாக,  நாங்களும், எங்கள் தோழர்களும் அன்று செய்த பிரார்த்தனையின் விளைவே அந்த தாக்கமாகும். எனவே இறைவனின் பால் அழைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தம் ஆற்றல்கள் குறித்து அகந்தை கொள்ளக் கூடாது! மாறாக, தங்களின் முயற்சிகளுடன் இறைவனின் உதவியையும் நாட வேண்டும். 

இறுதியாக ஒரு நபி மொழியை உங்கள் முன் சமர்பித்துவிட்டு விடைபெறுகின்றேன்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமையில் ஒருவர் கொண்டுவரப்படுவார். வானவர்களை நோக்கி இறைவன் கூறுவான்: 'இவரை சுவனத்தில் நுழையச் செய்யுங்கள்!' இதைக் கேட்ட அந்த மனிதர் கூறுவார்: 'இது இறைவனின் அருளால் வழங்கப்பட்டதாகும். ஆனால், இம்மையில் நான் செய்த நற்செயல்களுக்குப் பகரமாக எனக்குச் சேர வேண்டிய வெகுமதியையையும் எதிர்பார்க்கின்றேன்'. இறைவன் வானவர்களுக்கு ஆணையிடுவான்: 'உலகில் இவர் புரிந்த நற்செயல்கள் அனைத்தையும் ஒரு தட்டில் வையுங்கள்! பிறகு அவரது கண்ணைப் பெயர்த்து மறு தட்டில் வையுங்கள்' வானவர்கள் அவ்வாறே செய்வார்கள். அந்த நன்மைக்குரிய தட்டு இலேசாகிவிடும். கண்ணிற்குரிய தட்டோ கனமாகி கீழிறங்கிவிடும். 

இதிலிருந்து தெளிவாக நாம் தெரிந்து கொள்வது இதுவே: "நாம் வாழ்நாள் முழுவதும் நன்மைகள் புரிந்தாலும் இறைவன் மனிதனுக்கு அளித்துள்ள பார்வைக் கொடைக்கு பகரமாக அது ஈடாகாது! அதுவும் ஒரு கண்ணுக்கே ஈடாகாது. அவ்வாறிருக்க அவன் வழங்கியுள்ள ஆயுள், அறிவு, நன்மை - தீமை பிரித்தறியும் ஆற்றல் மற்றும் இதர வாழ்க்கை வசதிகளுக்கெல்லாம் எந்தளவுக்கு நற்செயல்கள் புரிந்தாலும் அது ஈடாகுமா என்ன?"

நன்றி: சமரசம்.

Related

அழைப்பியல் 8163121420885487366

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress