பாலை மலர் -14, 'நில்லென்று சொல்லி நிறுத்தி வழி போனீரே..!'




“மாமி..! மாமி..!” மேல் மூச்சு-கீழ் மூச்சு வாங்க ஓடிவந்த ஒரு சிறுமி,

“யத்ரிபிலிருந்து பயணக்குழு திரும்பிவிட்டது. அப்துல் முத்தலிப் தாத்தா அந்த பயணக் குழுவினரை சந்தித்துவிட்டு திரும்பிக் கொண்டிருக்கிறார்!”-என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

“என்ன..! பயணக்குழு திரும்பிவிட்டதா?”-ஆமினாவின் முகம் சந்திரனைக் கண்ட அல்லியாய் மலர்ந்தது.

“அவர் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே!” – கூடவே கவலையும் சூழ்ந்து கொண்டது.

அதற்குள் அப்துல் முத்தலிப் அங்கு வந்து விட்டார். இறுகிய முகம். சிவந்த கண்கள். கலைந்த கேசம். துடிக்கும் உதடுகள். வியர்த்த நெற்றி. உடலில் நடுக்கம். 

அப்துல் முத்தலிப் ஜின் தீண்டியவர் போல (பேயறைந்தவர் போல) காணப்பட்டார். அவருடைய தோற்றத்தைக் கண்டதும் ஆமினாவுக்கு “பகீர்” என்றது. உள்ளத்தில் படபடப்புது அதிகரித்தது. அவரிடம், “என்ன? ஏது?” – என்று கேட்கவும் துணிவில்லை.

நீண்ட நேரத்துக்குபின், “ஆமினா! மகளே! மனதை திடப்படுத்திக் கொள்! அப்துல்லாஹ் இனி திரும்பி வரமாட்டார். முஹம்மதை அனாதையாக்கி விட்டு போய்விட்டார். ஆம்..! அப்துல்லாஹ் ... அப்துல்லாஹ்.. எனதருமை அப்துல்லாஹ் இறந்துவிட்டான்!.” 

அதற்குமேல் அப்துல் முத்தலிபால் பேச முடியவில்லை. 

“அப்துல்லாஹ் இறந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டதாம்! என்ன கொடுமை! இறப்பதற்கு முன் ஒரே ஒருமுறை குழந்தையின் முகத்தை.. என் பேரக் குழநதையின் முகத்தைப் பார்க்கவும் கொடுத்து வைக்கவில்லையே! இதுதான் விதிபோலும்!” – என்றார் விம்மலின் இடையே.
ஆமினாவின் தலையில் இடி விழுந்ததைப் போலிருந்தது. அவரது விழிகள் காட்டாற்று வெள்ளமாய் பிரவாகமெடுத்தன. நெஞ்சு வெடித்துவிடும் போல வேதனை. 

அப்துல் முத்தலிப் எதிரே இருக்கும்வரை சிரமப்பட்டு அழுகையை கட்டுப்படுத்திய ஆமினா அவர் அங்கிருந்து சென்றதும் தேம்பி.. தேம்பி அழலானார். 

அப்துல்லாஹ்வின் மரணச் செய்தி நகரெங்கும் பரவிவிட்டது. 

மரணச் செய்தியை அக்காலத்து வழக்கப்படி அறிவிப்பாளர் ஒட்டகத்தின் மீது ஏறிக் கொண்டு முச்சந்திதோறும்.. மக்கள் புழங்கும் இடம் தோறும் .. உரத்து அறிவித்தவாறு சென்றார். அவருடைய நோக்கம் ஈமச் சடங்கில் முடிந்தவரை மக்களைத் திரட்டுவதுதான். அப்துல் முத்தலிபின் பாரம்பர்யம்..  குலப்பெருமைகள்.. சிறப்புகள் என்று அவர் விலாவாரியாக அறிவித்தார்.

அன்றைய மரணச சடங்குகள் அரபு நாட்டு மக்களின் அறியாமை காலத்து வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே இருந்தன. 

மரணமுற்றவரின் வீட்டில் ஒப்பாரி வைத்த அழுவதற்கு என்று பெண்களின் கூட்டம் தனியாக இருந்தது. தலைமுடியை விரித்துவிட்டு .. ஆடைகளைக் கிழித்துக் கொண்டு .. அவர்கள் ஒப்பாரி வைத்து அழுவார்கள். 

ஈமச் சடங்கில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை வைத்துதான் குடும்பத்தின் மதிப்பும், கண்ணியமும் போற்றப்படும் என்று பெருமையில் மூழ்கியிருந்த சமூக கட்டமைப்பு.

“கல்லாலே கப்பல் செய்து..

கடலிலே விட்டேனடா!

கல்லிலே செய்த கப்பல்

கரை வந்து சேர்ந்ததெப்போ?

மரத்தாலே கப்பல் செய்து

மடுவிலே விட்டேனடா!

மரத்தாலே செய்த கப்பல்

மறுபடியும் வாராதெப்போ?

கப்பல் கவிழ்ந்ததென்று

கன்னத்தில் கை வைத்தேன்!”

- என்றழும் மகனைப் பிரிந்த தமிழ்த்தாயின் உணர்வுகள் அங்கே வேறாரு வழக்கத்தில் ஒப்பாரியாய் வெளிப்பட்டது இப்படி:

“அப்துல்லாஹ்..

எங்கள் ராசா..!

உன் பெயர் இங்கே..

எல்லோர் நாவிலுமிருக்கு.. ஆங்.. ஆங்..!

உன் சௌந்தர்ய முகம்..

மக்காவின் தெருதோறும்

நெஞ்சில் பதிந்திருக்கு..ஆங்.. ஆங்..

கருணையின் வடிவமே!

அன்பின் உறைவிடமே! ஆங்.. ஆங்..!”

- ஒப்பாரியின் உச்சக் கட்டம். 

அங்கிருந்தவர்கள் மார்பில் அடித்து அழுது கொண்டிருந்தனர். 


ஆமினா பதுமையாய் அமர்ந்திருந்தார். இனி அழுவதற்கு கண்களில் கண்ணீர் இல்லை. பேசவும் உடலில் தெம்பில்லை. உணர்வுகளை வெளிக் கொட்ட உள்ளத்தில் வார்த்தைகளுமில்லை.

“ஒரு போக வேளாண்மைக்கு

ஊர் வானைப் பார்ப்பதுபோல

இரு கண்ணும் சேரா – எந்தன்
இராசாவைப் பார்த்திருந்தேனே!”

- தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் நிலையை ஒத்து அப்துல்லாஹ்வை எதிர்பார்த்து காத்திருந்த ஆமினாவுக்கு ஏற்பட்டதோ பேரிழப்பு!

“சில்லென்று பூத்த

சிறு நெருஞ்சிக் காட்டோடே

நில்லென்று சொல்லி

நிறுத்தி வழி போனீரே..!

கட்டிய சேலை இன்னும்

கசங்கி மடியவில்லை..

வச்ச பூ இன்னும்

வாசங் குயைவில்லை!

..........................................

...................... .......................

பிஞ்சு வயதென்றேன்

மட்ட வயதென்றேன்!

மன்னர்தனைப் பிரிந்து

வாழ்ந்திருக்க மாட்டேனென்றேன்..

வாழ்ந்திருக்க மாட்டேனென்றேன்..

மாய்க்க வந்தான் கேட்கலியே!”

இளம் விதவையின் ஓலமாக உள்ளம் துடித்துக் கொண்டிருக்க ஆமினா பதுமையாய் அமர்ந்திருந்தார்.


- பூக்கும்.

Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 5397867308980895393

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress