ஒரு சொல்: 'நம்பிக்கைத் துரோகியா நீங்கள்?'
https://udayathaaragai.blogspot.com/2013/12/blog-post_2677.html
இறை விருப்பத்திற்கு ஏற்றாற் போல நடப்பதால் ஏதேனும் தீங்கு ஏற்படுவதானால் ஏற்படட்டும்! உயிர் பிரிவதாயினும் பிரியட்டும்! கை, கால்கள் முறியுமென்றாலும் முறியட்டும்! உங்கள் அன்பு குழந்தைகளுக்கு தீங்கு ஏற்படுகிறது என்றாலும் ஏற்படட்டும். பொருளும், உடமைகளும் அழிகிறதென்றாலும் அழியட்டும்..! நாம் கவலைப்பட்டு என்ன பயன்? இவற்றுக்கு உரிமையாளனான இறைவனே அந்த உடமைகளுக்கு இழப்புகள் ஏற்படுத்த விரும்பினால் நாம் என்ன செய்ய முடியும்? அந்த உரிமை அவனுக்கு உண்டுதானே?
ஆனால், இறைவனின் விருப்பத்திற்கு மாறாக நீங்கள் செயலாற்றும் போது, உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உடமைகளை விரயம் செய்தால் நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளாவீர்கள் எச்சரிக்கை! ஏனென்றால், அடுத்தவருக்கு சொந்தமான பொருளை நீங்கள் பாழ்படுத்தி விட்டீர்கள்; தவறாக பயன்படுத்தினீர்கள். அதனால் நீங்கள் குற்றவாளியானீர்கள்.
இறைவனால் அளிக்கப்பட்டிருக்கும் உங்களது உயிரோ அல்லது பிற உடமைகளோ அவற்றை இறைவனின் விருப்பப்படியே பயன்படுத்தினீர்கள், அவனது பாதையிலே அர்ப்பணித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் இறைவனின் விருப்பப்படியே செயல்பட்டவர்களின் பட்டியலில் இடம் பெற்று விடுவீர்கள்.
ஆனால், இறை விருப்பத்திற்கு மாற்றமாக அவற்றைப் பயன்படுத்தும் போது, நீங்கள் நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களின் பட்டியலில் இடம் பெற்று விடுவீர்கள் எச்சரிக்கை!
- மௌலானா மௌதூதி (ரஹ்)

