அழைப்பது நம் கடமை - 13, 'கடல் பிளந்தது! நெருப்பு குளிர்ந்தது!!'



இறைவனின் பாதையில், மக்களை அழைப்பவர்களின் இறைநம்பிக்கை எஃகு போல உறுதியாக இருந்தால்... இறையருளால்... கடல்களும் பிளந்து வழி பிறக்கும்! சுடு  நெருப்பும் குளிர்ந்து பூஞ்சோலையாக மாறும்! ஒரு சாதாரணமான கைத்தடி கடலைப் பிளந்திருக்கிறது. ஒரு இளைஞரை நெருப்புத் தீண்டாமல் பூஞ்சோலையாய் மாறி நின்றது. நீரின் இயல்பு இணைந்திருப்பது. ஆனால், தனது இயல்புக்கும் எதிராக பிளந்தது எப்படி? நெருப்பின் இயல்பு சுட்டெரிப்பது.  அது தனது இயல்புக்கு எதிராக சுடாமல் குளிர்ந்த சோலையாக மாறியது எப்படி? இறைவனின் நியதியில் சில படைப்புகள் அவற்றுக்கான இயல்பான குணங்கள் கொண்டுள்ளன. இந்த இயல்பு நிலையில் இறைவன் நாடும்போது, மாற்றங்கள் நிகழும் என்பதற்கு இந்த உதாரணங்களே சான்று!

இப்ராஹீம் நபி, மூஸா நபி ஆகியோரின் வரலாறு இறைநம்பிக்கையாளர்களுக்கு படிப்பினை மிக்கது. அதுவும் இறைவனின் பாதையில் மக்களை அழைக்கும் அழைப்பாளர்களுக்கு உற்சாகமூட்டும்  வரலாற்றுச் சான்றுகளாகும். இறைவனின் பேரருள்! தனது மார்க்கத்தின் பக்கம் யார் முழு நம்பிக்கையோடு அழைப்புக் கொடுக்கிறார்களோ அவர்களை காத்துக் கொள்வது இறைவனின் பொறுப்பில் வந்துவிடுகிறது.

இப்ராஹீம் நபியவர்கள் இளமையின் உச்சத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு இறைவன் பக்குவத்தையும் - முதிர்ச்சியையும் அளித்திருந்தான். அந்தப் பருவத்தில் தந்தை பெரியார்கூட செய்யத் துணியாத ஒரு செயலை அவர்கள் செய்தார்கள். தமது வாதத்திறமையாலும், சத்தியத்தை எடுத்துரைப்பதற்கு கொழுந்துவிட்டெரியும் பேராவலாலும் தங்கள் அழைப்புப் பணியில் சாதனைப் புரிந்தார்கள்.

 
இப்ராஹீம் நபியவர்களின் தந்தை தலைமைப் பூசாரியாக விளங்கியவர். அரசனின் பிரதம ஆலோசகராக, ராஜகுருவாக.. ஜோதிடராக இருந்தவர். கற்சிலைகளை வடிவமைப்பதில் தேர்ந்த வல்லமைப் படைத்தவர். தமது சமுதாயத்தவரின் மூடநம்பிக்கைகளின் தலையாய வாசலாக விளங்கியவர். விக்கிரங்களை உருவாக்கி விற்பதில் தொழில் நுட்பம் நிறைந்தவர். அத்தகையவரின் வயிற்றில் பிறந்த இப்ராஹீம் நபியவர்கள் தந்தையைப் பகுத்தறிவின் பக்கம் அழைக்கிறார். இளமையிலேயே சத்தியத்துக்கான அவர்களது 'பகுத்தறிவு தேடல்' ... 'சத்தியத்துக்கான தேடல்' ஆரம்பித்துவிடுகிறது.


"என் அன்பு தநதையே! கேட்கவும், பார்க்கவும், பேசவும் முடியாதவை.. எந்தவிதமான லாப-நஷ்டங்களைத் தராதவை சிலைகள்! அவற்றை ஏன் வணங்குகின்றீர்கள்?"

".... என் தந்தையே! உங்களுக்குக் கிடைக்காத ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேர்வழிக் காண்பிப்பேன்!"

" .... என் தந்தையே! நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள். திண்ணமாக ஷைத்தான் கருணைமிக்க இறைவனின் கட்டளைக்கு மாறு செய்பவன் ஆவான்!"

" ... என் தந்தையே! கருணை மிக்க இறைவனின் தண்டனைக்கு நீங்கள் ஆளாகிவிடுவீர்களோ என்றும் ஷைத்தானின் தோழனாகிவிடுவீர்களோ என்றும் நான் அஞ்சுகின்றேன்!"

பொங்கிவழியும் பாசத்தோடு தந்தையை சத்தியத்தின் பக்கம் அழைக்கிறார் இப்ராஹீம் நபி.

"இப்ராஹீம்! நீ நமது தெய்வங்களையா நிராகரிக்கிறாய்? உனது எண்ணத்தை நீ மாற்றிக் கொள்ளாவிட்டால்.. நான் உன்னை கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்! மரியாதையாக இங்கிருந்து வெளியேறிவிடு. இனி என் முகத்தில் விழிக்காமல் சென்றுவிடு!"

அறியாமையின் வெளிப்பாடு கடுமையாக வந்து பாய்ந்தது. அப்போதும் இப்ராஹீம் நபி பொறுமை இழக்காமல் தந்தையாரின் நலன் நாடுகின்றார்.

"உங்கள் மீது சாந்தியுண்டாகட்டும்! உங்களை மன்னித்தருளுமாறு என் இறைவனிடம் நான் இறைஞ்சுவேன். நிச்சயமாக, என் இறைவன் என் மீது மிகவும் கிருபையுள்ளவனாக இருக்கின்றான். மேலும், உங்களை விட்டும் ஒரே இறைவனான அல்லாஹ்வைத் தவிர, நீங்கள் வணங்கிவரும் தெய்வங்களைவிட்டும் நான் ஒதுங்கிக் கொள்கிறேன்!" (திருக்குர்ஆன்-19:41- 49)

வீட்டாருக்கு அழைப்புத் தந்த பிறகு தமது சமூகத்தார் பக்கம் அழைப்புப் பணியை இப்ராஹீம் நபி திசைத் திருப்புகிறார். பெரும் கவலையும்.. அக்கறையும் .. தைரியமும் .. விவேகமும் நிறைந்தது அந்த வரலாறு!

-- இறைவன் நாடினால்.. தொடரும்.

Related

அழைப்பியல் 8164296198887718747

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress