அழைப்பது நம் கடமை - 15, 'கடல் பிளந்தது! வழி திறந்தது!!
https://udayathaaragai.blogspot.com/2012/12/15_18.html
மூஸா நபி பனீ இஸ்ராயீல்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்து இறைவனின் ஆணைப்படியே எகிப்திலிருந்து வெளியேறினார்கள்.
பொழுது புலர்ந்தது.
மூஸா நபியும், அவரது கூட்டத்தினரும் தப்பியது பிர்அவ்னுக்குத் தெரிந்தது. பெரும் படையுடன் அவன் அவர்களைப் பின் தொடர்ந்தான்.
மூஸா நபியும், பனீ இஸ்ராயீல்களும் பயணித்த வழியில் செங்கடல் குறுக்கிடுகிறது.
பின்புறத்திலோ பிர்அவ்னின் கொடிய படை! முன்புறமோ பாதையை மறைப்பது போல, பரந்து விரிந்த செங்கடல்.
இக்கட்டான அந்த நேரத்தில், இஸ்ராயீல்கள் பயந்து போகிறார்கள்.
"இனி நாம் தொலைந்தோம்!"- என்று அலறுகிறார்கள்.
ஆனால், மூஸா நபி கொஞ்சமும் கலங்கவில்லை. இறைவனின் மீதும் அவனது பாதுகாப்பின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார். "இறைவன் இருக்கின்றான் நம்மோடு.. கலங்காதீர்கள்!" - என்று தமது தோழர்களை சமாதானப்படுத்தினார்.
அதன் பிறகு, ஒரு சிறு கைத்தடி...
கால்நடைகளுக்கு இலைத் தழைகளைப் பறித்துப் போட உதவும் கைத்தடி...
பாதையில் ஊன்றி நடக்க உதவும் சாதாரணமான கைத்தடி...
அந்த அற்புதத்தை நிகழ்த்துகிறது.
உலகயியல் நடப்புகளில் ஒரு அசாதரணமான சம்பவம் அது. படைத்தவன் தனது படைப்புகளுக்கு "குன்.. ஆகுக!" என்றதும் நடக்கும் படைப்பியல் மாற்றம் அது.
எப்போதும் இணைந்திருப்பது நீரின் இயல்பு! அந்த இயல்பில் நடக்கும் மாற்றம் காலந்தோறும் இறைநம்பிக்கையாளர்களின் நம்பிக்கைக்கான உதாரணமாக காலப்பெட்டகத்தில் பதிந்து போனது. இறைநம்பிக்கையாளர்களின் மனங்கள் மூஸா நபியைப் போல இறைநம்பிக்கையில் எஃகாய் இருந்தால் கடல்கள் பிளக்கும்..! வழிகள் திறக்கும் என்பதற்கான உதாரணம் அது!
ஆம்... மூஸா நபியின் கைத்தடி இறை ஆணையின்படி கடலைப் பிளக்கிறது!
அந்த விறுவிறுப்பு மிக்க வரலாற்று சம்பவத்தைத் திருக்குர்ஆன் சொல்வதைக் கேளுங்கள்:
"மேலும், நாம் மூஸாவுக்கு, 'வஹீ-திருச்செய்தி' அறிவித்தோம்! "என் அடியார்களை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாகப் புறப்படுவீராக! நீங்கள் பின்தொடரப்படுவீர்கள். இதனபடி பிர்அவ்ன் (படைகளைத் திரட்டுவதற்காக) நகரங்களுக்கு ஊழியர்களை அனுப்பினான். (மேலும், சொல்லி அனுப்பினான்) இவர்கள் மிகச் சிறிய ஒரு கூட்டத்தினர்தான்! மேலும், இவர்கள் நம்மை மிகுந்த கோபமடையச் செய்துவிட்டார்கள். நாம் எப்போதும் விழிப்பாக இருக்கக்கூடிய கூட்டத்தினர் அல்லவா?" (திருக்குர்ஆன்- 26:52-56)
பொழுது விடிந்ததும், பிர்அவ்னும் அவனது படையினரும் பனீ இஸ்ராயீல்களைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள். இரு கூட்டத்தாரும் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டபோது, மூஸாவின் தோழர்கள், "திண்ணமாக நாம் பிடிபட்டுவிட்டோம்!"-என்று கூக்குரலிட்டார்கள். அதற்கு மூஸா கூறினார், "ஒருபோதும் இல்லை! என் இறைவன் என்னோடு இருக்கின்றான்! அவன் திண்ணமாக எனக்கு வழிகாட்டுவான்!
மூஸாவுக்கு நாம் வஹீயின் மூலம் கட்டளையிட்டோம். உமது கைத்தடியால் கடலை அடியும். உடனே கடல் பிளந்துவிட்டது. மேலும், அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றதாகிவிட்டது.
அதே இடத்திற்கு இரண்டாவது கூட்டத்தாரையும், நாம் நெருங்கி வரச் செய்தோம்! மூஸாவையும் அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம். பிறகு மற்றவர்களை மூழ்கச் செய்தோம்!" - (திருக்குர்ஆன்-26:60-66)
-- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.


