பாலை மலர் - 8, 'உறவு' என்றொரு சொல்லிருந்தால்.. 'பிரிவு' என்றொரு பொருளிருக்கும்!'


 அப்துல் முத்தலிப் அப்துல்லாஹ்வின் நெற்றியில் முத்தமிட்டார். தன் தலைப்பாகையை எடுத்து மகனின் தலையில் அணிவித்தார். அவர் நல்ல முறையில் திரும்பிவர பிரார்த்தித்தார். இருப்பினும், பாசம் அதுவும் பெற்ற பாசம் அவரைச் சற்றுத் தடுமாறச் செய்தது. விழிகள் ஈரமாயின. குரல் கம்மியது. உதடுகள் துடித்தன. உடல் படபடத்தது. அப்துல்லாஹ் தம் தந்தையை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார். ஹம்ஸா அப்துல்லாஹ்வை மெல்ல தட்டிக் கொடுத்தார்.

நிலைப்படியில் ஆமினா நின்றிருந்தார். கருமேகம் சூழ்ந்த நிலவாய் பொலிவிழுந்த முகம். விம்மத் துடிக்கும் நெஞ்சம். துக்கத்தால்.. வேகமும், வெப்பமுமாய் வெளிப்பட்டது மூச்சு. தன்னைவிட்டு பிரிவது கணவன் மட்டுமா? தனது மொத்த உலகமல்லவா? "ஓ! அவரில்லாமல் இனி எப்படி இருப்பேன்?" தனது சோகத்தை எப்படி வெளிப்படுத்துவது? வழி தெரியாத திண்டாட்டம். பெண்மைக்கே இடையூறாய் நிற்கும் வெட்கம்.

 அங்கு ஐந்திணை ஐம்பதின் பாலைத்திணை தோழி இருந்திருந்தால்..

"அழற்பட்டு விலங்கல் விளங்கிழாய்; செல்வரோ வல்ல அசைந்த பிடியை - எழில் களிறு கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையால் கொண்டு உச்சி ஒழக்கம் சுரம்!"

  'ஆண் யானையானது தீயில் அகப்பட்டு வருந்திய பெண் யானை மீது சுனையில் உள்ள சேற்றோடு கூடிய நீரைக் கையால் .. துதிக்கையால் ... பூசும். அத்தகைய காட்சியைக் காணத்தக்க காட்டைக் கடந்து உன் தலைவர் உன்னைப் பிரிந்து செல்வரோ? செல்லமாட்டார்! எனவே அவர் பொருள் தேடிச் செல்வதை தடுக்காதே அதாவது அவர் செல்லும் காட்டிடைக் காணும் நிகழ்ச்சியே அவரைத் தடுத்து நிறுத்தும்!" - என்று ஆமினாவுக்கு (பாலைத்திணை தோழி) ஆறுதல் கூறியிருப்பாள்.

அந்நேரத்தில், அந்நிலையில், ஆமினாவுக்கு உலகமே வெறுத்தது. வாழ்க்கையே கசந்தது. 



ஆமினா அப்துல்லாஹ்வைப் பார்த்த பார்வை இதயத்தைத் துளைப்பதாக இருந்தது. 

அப்துல்லாஹ்வின் நிலையோ...

"நெஞ்சமே! நான் தலவியைச் சிற்சில வேளைகளில் மிகச் சிறிய கால அளவில் பிரிந்திருப்பேன். அப்போதே அவளால் அப்பிரிவைத் தாங்க முடியாதே! தாங்காது துடித்துப் போவாளே!

இப்போதோ நெஞ்சமே பொருள் தேடும் பொருட்டாக அவளை நீண்ட நாட்கள் பிரிய எண்ணுகிறாய். அப்பிரிவை அவள் தாங்குவாளா? அதை நெஞ்சமே! நீ சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லையே! " - என்று பாலைத் திணை தலைவனின் நிலையை ஒத்திருந்தது.

"அன்பே! வருவேன் மீண்டும்! கலங்காதே கண்ணே" 

- கண்கள் பேசுமோ? பேசின! 

"சே! ஆண்கள் கல் நெஞ்சர்கள்! எவ்வளவு எளிதாக பிரிவைத் தாங்கிக் கொள்கிறார்கள்! தனக்கு மட்டும் வெட்கம் குறுக்கிடாமலிருந்தால்.. ஒட்கத்தின் அம்பாரியிலிருந்து அவரை இந்நேரம் இறக்கியிருப்பேனே! "

- ஆமினா தமக்குள் குமைந்தார். துயர்களை... துன்பங்களை மனதில் போட்டு மூடிக்கொண்டார். 

 "ஏ! மனமே! பைத்தியமே! என்ன இது? கணவரின் பயணம் வணிக நிமித்தம் அல்லவா? போர்க்களம் காண அல்லவே! விரைவில் திரும்பிவிடுவார் மனமே பொறு!"

வணிகத்துக்காக யெமன், ஷாம், நஸ்ர், மிஸ்ர் முதலிய தேசங்கள் செல்வது குறைஷிகளின் வழக்கமாயிற்றே!

குறைஷிகளின் வாழ்வாதாரமே குதிரைகளின் முதுகுகளிலும், ஒட்டக கூடாரங்களிலுமாய் ஆனபின் அழுதழுது புலம்பி என்ன லாபம்? ஓடிவிடும் விரைவில் ஐந்து.. ஆறு மாதம்! திரும்பிவிடுவார் உன் பிரிய கணவர். கலங்காதே மனமே..! கலங்காதே!!"

- ஆமினா தனக்குத் தானே சமாதானம் செய்து கொள்ள முயன்றார். 


ஒட்டகக் கூட்டம் புறப்பட்டுவிட்டது. ஊரின் எல்லையை கடந்து செல்ல ஆரம்பித்தது. 




ஆமினா வீட்டுக்கூரையின் மேல் வசதியாய் ஏறி நின்றார். ஒட்டகங்கள் பேரீச்ச மரங்களின் ஊடே சென்று மறையும் வரை இமைக்காமல் பார்த்தவாறே இருந்தார். அவர் கூரையிலிருந்து  இறங்கிய போது உளளம் கனத்திருந்தது. உதடுகள் துடித்தன. இமைகள் நனைந்து கனத்தன. காணும் இடந்தோறும் அப்துல்லாஹ்வின் உருவமே தென்பட்டது!



-- இறைவன் நாடினால்.. பாலை மலர் பூக்கும்..




Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 2274729449366635500

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress