ஒரு சொல்: 'பட்டவர்த்தனமாக... அச்சுத பட்டவர்த்தனன்!'
https://udayathaaragai.blogspot.com/2013/04/blog-post_9.html
புகழ்
பெற்ற விடுதலைப் போராட்ட வீரரும், தம் இறுதிமூச்சுவரை மக்கள் சேவையில் ஈடுபட்ட மாபெரும்
தியாகியுமான திரு. அச்சுத பட்டவர்த்தன் 1984-இல், ‘Freedom First’ என்னும் இதழுக்கு
ஒரு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் சில பகுதிகளை ‘பிளிட்ஸ்’ ஏடு வெளியிட்டிருந்தது.
அதில் ஒரு கேள்வி இது:
“தாங்கள்
மார்க்சிய கொள்கையில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டீர்கள். பிறகு காந்தியத் தத்துவங்களுக்கு
எப்படி திரும்பினீர்கள்?”
அதற்கு அச்சுதபட்டவர்த்தன் இப்படி கூறினார்:
“நான்
மார்க்சிய கொள்கைகளையும் நம்பவில்லை. காந்தியத் தத்துவங்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
எல்லாத் தீமைகளுக்கும் அந்நியர் ஆட்சிதான் ஆணிவேர் என்று தொடக்கத்தில் நம்பினேன். விடுதலை
மட்டும் கிடைத்துவிட்டால்.. நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று எதிர்பார்த்தேன்.
என் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பிரச்சாரம் செய்து மக்களையும் அவற்றை நம்ப
வைத்தேன். ஆனால், அந்த நம்பிக்கை தவறு என்று ஒரு கட்டத்தில் தெளிவாகப் புரிந்தது. மக்களை
நம்ப வைத்து ஏமாற்றி விட்டேனே!-என்று உணர்வுதான் என்னுள் ஏற்பட்டது.
விடுதலை
மட்டுமே மக்களின் பிரச்னைக்குத் தீர்வாகிவிடாது; சோசலிஸக் கொள்கையையும் கடைப்பிடித்தால்தான்
வறுமை ஒழியும் என்று நம்பினேன். அதைப் பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தேன். ஆனால்,
அதுவும் சரியல்ல என்று பிறகு உணர்ந்தேன். மக்களை மீண்டும் ஏமாற்றி விட்டேனே என்று மனம்
வருந்தினேன்.
சோசலிஸ
கொள்கையில் எல்லா அதிகாரங்களும் அரசிடம் போய் குவிந்தன. அரசு என்றால் ஆளுங்கட்சியின்
நலன் என்றாகிவிட்ட பிறகு, அதிலும்கூட ஒரு குறிப்பிட்ட கோஷ்டியினரின் நலன்கள் என்றாகிவிட்ட
பிறகு, இது எந்த வகையில் சமூக நீதியைப் பெற்றுத் தரும்? இக்கொள்கையைப் பிரச்சாரம் செய்து
மக்களை நம்பவைத்தது தவறு என்னும் வேதனைதான் இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.
இதனால்,
முதலாளித்துவம் சிறப்பானது என்று வாதிட நான் வரவில்லை. இனியும் ஓர் அரைகுறை கொள்கையை
கற்பனைக் கடவுளாய் உருவாக்கி நானும் ஏமாந்து மக்களையும் ஏமாற்ற நான் தயாராக இல்லை!”
திரு.
அச்சுத பட்டவர்த்தன் அவர்களின் பேட்டி பின்வரும் திருக்குர்ஆனின் வசனத்தை நினைவுறுத்துகிறது:
“இறையச்சத்தையும்,
இறை திருப்தியையும் அடிப்படையாகக் கொண்டு தம் கட்டடத்தை நிர்மாணித்தவர் சிறந்தவரா?
அல்லது வெள்ளத்தால் அரிக்கப்பட்ட உறுதியற்ற ஓடையின் கரையின் மீது தனது கட்டிடத்தை நிர்மாணித்தவர்....
... சிறந்தவரா?” (9:109)
மனித
வாழ்வின் மேன்மைக்காக நவீன காலத்தில் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் எல்லாமே அடிப்படையற்றவை,
அரைகுறையானவை என்று மனம் நொந்து கூறியிருந்தார் அச்சுதபட்டவர்த்தன்.
ஆம்!
உண்மைதான்! இறையச்சமின்மை, இறை உவப்பைக் குறித்து அலட்சியமாய் இருத்தல் ஆகிய அடிப்படையில்
எவர்கள் தம் வாழ்வை அமைக்கிறார்களோ அந்த வாழ்க்கை முழுவதும் தண்ணீரால் அரிக்கப்படவிருக்கும்
நிலத்தின் மீது கட்டப்பட்ட மாளிகை போன்றதுதான்!
இதை
இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்த்தால்..
இந்த
உலக வாழ்வில் இறைநம்பிக்கையாளர்கள், இறைநிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள், சத்திய மறுப்பாளர்கள்,
சான்றோர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் என்று அனைவருமே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இவர்கள் நதிக்கரையோரத்து நீரால் அரிக்கப்படவிருக்கும் நிலத்தில் மாளிகைகள் கட்டுகிறார்கள்.
உண்மையில் அந்த நிலத்திற்கு தாங்கு சக்தி ஏதுமில்லை. இதை அறியாத அவர்கள் மேலோட்டமாக
பார்த்து வீடு கட்டுகிறார்கள். பிறகு சிறிது நாளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும், தாங்கு
சத்தியின்றியும் வீடுகள் சரிந்து விழுகின்றன. அந்த மாளிகைகள் கட்ட அவர்கள் செலவழித்த
நேரம், உழைப்பு, ஆற்றல், செல்வம் அனைத்தும் வீணாகிவிடுகின்றன.
முற்றிலும்
இதுபோலவே, இந்த உலக வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்து வாழ்க்கை மாளிகையை நிர்மாணிப்போர்
இறையச்சம், இறை உவப்பு என்னும் வலுவான அடித்தளங்கள் மீது அந்த மாளிகை அமைக்கின்றதா?
என்று பார்க்கத் தவறிவிடுகின்றனர். அடித்தளங்கள் உறுதியானால் மட்டுமே மாளிகைகள் உறுதியாக
நிற்கும்.
ஆனால்,
உண்மையை விளங்கிக் கொள்ளாத மக்கள் உலகத்தின் மேலோட்டமான பகட்டைப் பார்த்து அதில் மயங்கிவிடுகிறார்கள்.
இறையச்சம், இறை உவப்பு ஆகியவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அரைகுறை உண்மைகள், ‘இஸம்’கள்
இவற்றின் அடிப்படையில் வாழ்வை நிர்மாணிக்கிறார்கள்.
வாழ்வின்
அந்திமக்காலம் வரும்போது, இவர்களின் செயல்கள் யாவும் வீணாகி, இவர்கள் நிர்மாணித்த வாழ்க்கை
மாளிகையும் இடிந்து விழுந்து விடுகின்றது.
அச்சுத பட்டவர்த்தன்
போன்ற தியாகசீலர்கள், மக்கள் தலைவர்கள், மக்கள் நல ஆர்வலர்கள், தங்கள் வாழ்வின் கடைசி
கட்டத்திலாவது இந்த உண்மையை உணர்ந்து அதை வெளிப்படையாக சொல்லியும் விடுகிறார்கள். அத்தகையவர்களை
இந்த நாடு உண்மையிலேயே மதிக்கிறது என்றால்.. அனுபவ முத்திரையுடன் அவர் கூறிய கருத்துக்களை
உரசிப் பார்க்க முன் வர வேண்டும். புதிய பாரதம் படைக்க புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
தோற்றுப்
போன தத்துவங்களான கம்யூனிஸம், சோசலிஸம், முதலாளித்துவம் போன்ற எல்லாவற்றையும் தூக்கி
எறிந்துவிட்டு, இறையச்சத்தின், இறை உவப்பின் அடிப்படையில் அமைந்த உன்னத கொள்கைகளைப்
பின்பற்ற அரசும் மக்களும் முன்வர வேண்டும்.



