ஒரு சொல்: ‘கல்வி சாதியை ஒழிக்குமா?’
https://udayathaaragai.blogspot.com/2013/04/blog-post_7.html
ஒருமுறை பெருந்தலைவர் காமராஜிடத்தில், “அய்யா, கல்வி வளர்ந்தால்.. சாதி ஒழிந்திடும் என்று சொல்கிறார்களே! அது குறித்து உங்கள் கருத்து என்ன?”
பெருந்தலைவர் புன்னகைத்துக் கொண்டே ரத்தினச்சுருக்கமாக இப்படி சொன்னார்: “கேரளாவைப் பாருங்களேன்!”
கேரளாவில் கல்வி அறிவு அதிகம். அதே நேரத்தில் சாதி வெறியும் அங்குதான் அதிகம்!
ஒருமுறை, விவேகானந்தர், கேரளாவைக் குறித்து விமர்சிக்கும்போது, “அது பைத்தியக்காரர்களின் தேசம்!”- என்று கடிந்து கொண்டதும் இதனால்தான்!
பெரியார் வைக்கம் போராட்டம் நடத்தியதும் கேரளாவில்தான்!
ஆக, அதிகமாக கற்றறிந்த மக்கள் வாழும் கேரளாவில்தான் சாதி வெறி தலைவிரித்து ஆடுகிறது. இவையெல்லாம் சொல்லும் செய்தி என்னவென்றால்.. “இன்றைய கல்வி அமைப்பு சாதியைத் தகர்க்கக் கூடியதாய் இல்லை!” – என்பதுதான்.
கல்வி அமைப்பில் மனித நேயக் கருத்துகளைப் போதித்தால்.. மாற்றம் நிகழ சாத்தியம் உண்டு. இது ஒரு கோணம்.
மற்றொரு கோணம், ‘தாழ்த்த்ப்பட்ட மக்களுக்கு கல்வி அறிவு கொடுத்து அதன் மூலம் ஏற்றம் பெற்றால் அவர்கள் சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை பெறமுடியுமா?’- என்பது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி தேவை. ஏனென்றால்.. கல்வி தன்னம்பிக்கையை, சுயமரியாதையை அளிக்கிறது.
கல்வியின் மூலம் வலிமை, அதிகாரம் (EMPOWERMENT) கிடைக்கிறது. கல்வி தன் உரிமைகளை அறிந்துகொள்வதற்கான உணர்வைத் தருகிறது. கல்வி போராட்ட உணர்வுகளை மனிதனின் உள்ளத்தில் ஏற்படுத்துகிறது. இப்படிப் பல வகையான நன்மைகள் கல்வியின் மூலமாகக் கிடைக்கின்றன.
ஆகவேதான், ஆதிக்க சக்திகள் அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம்வரை, ஒடுக்கப்பட்டவர்கள் பள்ளிக்கூடம் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை இப்படியே ஒடுக்கி வைத்திருக்க வேண்டும் என்றால்.. கல்வியின் வாசனையை அவர்கள் நுகரவிடாமல் செய்ய வேண்டும் என்பது அவர்களின் திட்டமாக உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெறுவதன் மூலமாக தங்கள் வாழ்க்கை நிலைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
ஆனால், கல்வி சாதியை ஒழிக்குமா? அதுதான் இங்கே கேள்வி.
உண்மையில், இரண்டு சமுதாயங்களுக்கு இடையில் மிகப் பெரும் சிந்தனை மாற்றம்.. மனிதர்களை சமமாக மதிக்கும் அந்த சிந்தனை மாற்றம் நிகழாதவரை இந்த சாதீய பிரச்னை ஒழியவே ஒழியாது!
நன்றி:
நன்றி:

