பாலை மலர் - 15: 'பார் போற்றும் வள்ளலுக்கு.. மடி தருவோர் யாரோ?'
https://udayathaaragai.blogspot.com/2013/04/blog-post_6.html
அரபு மக்களிடையே தொன்மையான ஒரு மரபு நிலவி வந்தது. குழந்தை பிறந்ததும், அதைப் பாலூட்டி வளர்க்க அவர்கள் செவிலித் தாய்மார்களை நியமிப்பார்கள். அதற்கு தகுதியானவர்களாய் பாலைவாழ் மக்களை தேர்ந்தெடுத்திருந்தார்கள்.
நம் கிராமங்களில் தூய்மையான சுற்றுச் சூழல்களும், நல்ல பழக்கவழக்கங்களும், வீரம் செரிந்த மறவர்களை உருவாக்குவதைப்போல, பாலையும் அதன் சூழல்களும் குழந்தைகளின் உடல் நலத்திற்கு நன்மைப் பயக்கும் என்று அரபுகள் கருதினர். அத்துடன் அரபு மக்களின் குருதியுடன் கலந்திருந்த வீர உணர்வுகளின் பயிற்சி களமாக பாலையும் அதன் கடினமான வாழ்வின் முறைகளும் விளங்கின. நாள்தோறும் இயற்கையுடன் போராடி வாழ்ந்தேயாக வேண்டிய நிர்பந்தங்களின் அமைப்பு அது. தமது சந்ததிகள் உடல் நலத்துடன் திகழ, திடகாத்திர வீரர்களாய் வளர பாலை வாழ்வும், பாலை வாழ் பெண்டிரின் ‘அமுதும்’ அவசியம் என்று அரபு மக்கள் உணர்ந்திருந்தனர். அதேபோல, இலக்கிய நயம் வாய்ந்த அரபி மொழி பாலைவாழ் மக்களிடையேதான் பேசப்பட்டு வந்தது.
ஆண்டுக்கு ஒருமுறை பாலைவாழ் மக்கள் நகருக்கு வருவார்கள். குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு செல்வார்கள். கூடவே, ஏராளமான வெகுமானங்களும், அன்பளிப்புகளும் பெறுவார்கள்.
வழக்கம் போலவே, அந்த ஆண்டும் செவிலிகள் மக்காவிற்கு வந்திருந்தார்கள். செல்வமும், செழிப்பும் மிக்க வீட்டாரின் குழந்தைகளை வளர்க்க வீடு தேடிச் சென்றார்கள். ஆனால், யாரும் அப்துல் முத்தலிபின் வீட்டுப் பக்கம் வருவதாக இல்லை. அப்துல்லாஹ்வின் குழந்தை மீது யாருடைய பார்வையும் விழவில்லை. அனாதை குழந்தையால் யாருக்கு என்ன லாபம்? அதை வளர்ப்பதால்.. என்ன ஆதாயம் கிடைக்கும்? செல்வச் சீமான்களின் குழந்தைகளுக்காக கொட்டிக் கொடுக்க ஆள் இருக்கும்போது, அனாதை குழந்தையை வளர்த்து ஆகப் போவதுதான் என்ன?
பாலைவனப் பெண்டிர் ஒவ்வொருவராய்.. செல்வந்தர்களிடமிருந்து குழந்தைகளை பெற்ற வண்ணம் இருந்தனர். நேரம் விரைந்து கொண்டிருந்தது. ஆமினாவோ கைகளில் பச்சிளம் பாலகனை சுமந்தவாறு ‘தனது கண்ணின் மணியை வளர்க்க ஒரு செவிலித்தாய் கிடைக்கமாட்டாளா?’ – என்று ஏங்கி திரிய நேரம் கழிந்தது.
அப்துல் முத்தலிப் பெரும் கனவான். கஅபாவின் மேற்பார்வையாளர். எல்லாம் சரி. அதற்கேற்ப எல்லோரும் அவரை மதிக்கத்தான் செய்தனர். ஆனால், குலப்பெருமையை போல, பெயர், புகழைப் போல, அவர் செல்வத்தையும் ஏழை, எளியோர் நலத்துக்காகவும், உறவினர் உரிமைகளுக்காகவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஹாஜிகளின் உபசரணைகளுக்காகவும் அதிகம் செலவழிப்பவராக இருந்தார்.
செவிலித்தாய்மார்கள் குழந்தைகளை வாங்கிக் கொண்டு பாலைக்குத் திரும்ப ஆரம்பித்தனர்.
“அப்துல் அஸா, இருபது பொற்காசுகளையும், இருநூறு வெள்ளிக் காசுகளையும் எனக்குக் கொடுத்தாராக்கும்!”
"எனக்கு மட்டும் என்ன குறைவாகவா கிடைத்தது? இந்தக் குழந்தையின் மாமா தனியாக ஓர் அன்பளிப்பு கொடுத்தார். சிற்றப்பாவோ இன்னொரு பரிசு தந்தார். தந்தையோ, நான் மலைத்து நிற்கும் அளவுக்கு தினார்களையும் (பொற்காசுகளையும்), திர்ஹம்களையும் (வெள்ளிக்காசுகளையும்) அள்ளிக் கொடுத்தார். இதோ..! என் மூட்டை நிரம்பி வழிவதைக் கண்டு நான் சொல்வதை நம்புங்கள்!”
“இதோ பார்த்தீர்களா? யேமனின் விலையுயர்ந்த போர்வைகளை? இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்த வெள்ளியிலான அணிகலன்களையும் பாருங்கள். அபுரபாத் தன் செல்லக் குழந்தையின் தலையை நீவிவிட்டவாறு, “நீ என் செல்லத்தை நல்ல முறையில் வளர்த்து வந்து திருப்பி சேர்க்கும்போது, என்னுடைய தயாள குணத்தை உண்மையிலேயே தெரிந்து கொள்வாய். இது வெறும் அச்சாரம்தான்!” – என்று சொன்னதையும் கேட்டுக் கொள்ளுங்கள்!”
“பாவம்..! அந்த ஹலீமா!”
“ஆமாம்! அந்த பஞ்ச பராரியான ஹலீமாவை நினைத்தால்.. எனக்கும் பரிதாபமாகத்தான் இருக்கிறது! எலும்பும், தோலுமான அவளுடைய தோற்றத்தைக் கண்டு யார்தான் குழந்தையைத் தருவார்கள்? அவளைப் போல யாராவது ஏழைகள் தமது குழந்தையைக் கொடுத்தால் உண்டு”
“ம்..! பாவம் ஹலீமா!”
“ஹலீமா பெரியவர் அப்துல் முத்தலிப்பின் இல்லத்திற்குச் சென்றதை நான் கண்டேன். அப்துல்லாஹ்வின் அநாதை மகனைக் கேட்க. அங்கு அவளுக்கு என்ன கிடைக்கும்? மிஞ்சிப் போனால் ஐந்தாறு “சாஊ” (இரு கையளவு) பேரீச்சம் பழம், ஓரிரு பை பார்லி தானியத்தைத் தவிர வேறு எதுவும் கிடைக்கப் போவதில்லை. பாவம்..!”
“பெரியவர் அப்துல் முத்தலிப் வாழ்வின் இறுதித் கட்டத்தில் இருக்கிறார். அவருக்குப் பின் அவருடைய பிள்ளைகள்தான் வாரிசுகள்; பேரக்குழந்தையல்ல..!”
“அதுவும் சரிதான்! அப்துல்லாஹ் தனது மக்களுக்காக விட்டுச் சென்றது என்ன தெரியுமா? ஐந்தே ஐந்து ஒட்டகைகள். ஒரு சிறிய ஆட்டு மந்தை. ஓர் அடிமைப் பெண். இவ்வளவுதான்!”
“என்ன இவ்வளவுதானா?”
“ஆமாம்!”
“அப்படியானால்… அப்துல்லாஹ்வின் மகனை வளர்க்க நிச்சயம் யாரும் கிடைக்கப் போவதில்லை!” -பாலையின் செவிலிப் பெண்கள் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொண்டனர்.
குழந்தைகளைப் பாலூட்டி வளர்க்கும் பாலைக்கோத்திரங்களில் புகழ் பெற்ற கோத்திரம் ஒன்று உண்டு. அது ‘ பனீ ஸஅத் பின் பக்கர்’. ஹவாஸ் கோத்திரத்தின் கிளைக் கோத்திரம். அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்தான் அபுதுஐபின் மகளான ஹலீமா.
குழந்தைகள் வாங்கி வளர்ப்பதற்காக பாலைவாழ் மக்கள் மக்காவை நோக்கி புறப்பட்டபோது, நடந்தது இது. அந்த ஆண்டு கடும் வரட்சி நிலவியது. கணவர் ஹாரிது மற்றும் கைக்குழந்தையுடன் ஹலீமாவும் பயணக்குழுவில் சேர்ந்து கொண்டார்.
சாம்பல் நில பெண் கழுதையின் மீது ஹலீமா ஏறிக் கொள்ள ஹாரிது கிழட்டு ஒட்டகையின் மீது சவாரி செய்தார். மடி ஒட்டிப்போன ஒட்டகை அது. கடுமையான பசியும், களைப்பும் கண்களை மங்கச் செய்ய பயணம் தொடர்ந்தது. பாலைக்குழுவினரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் பின் தங்கிவிட்டனர். செல்வச் செழிப்பு மிக்கவர்களின் குழந்தைகளுக்காக பாலைக் குழுவினர் மக்கா நகரில் வலம் வந்து கொண்டிருந்தபோதுதான் ஹலீமாவும், ஹாரிதும் நகருக்குள் நுழைந்தார்கள்.
ஒரு தாய் வளர்ப்புப் பிள்ளையைத் தேடி வீடு வீடாகச் செல்ல அவளின் வறுமை நிலையைக் கண்டு குழந்தையைத் தர எவரும் முன்வரவில்ல.
அது ஹலீமா!
ஒரு தாய் செவிலியைத் தேடி குழந்தையை நீட்டிய கரங்களுடன் நிற்க… அந்த அனாதையை எல்லோரும் நிராகரித்த வண்ணம் இருந்தனர்.
அது ஆமினா!
“குழந்தையையை யாராவது எடுத்துச் சென்று வளர்க்க மாட்டார்களா?”- என்று பெற்ற மனம் பதைபதைக்க...
பாலூட்டி வளர்க்க முன் வந்தவளின் உள்ளமோ பிள்ளை கிடைக்காமல் துடியாய் துடித்தது.
குழந்தையை பெற மாட்டீரோ?
குழந்தையை தர மாட்டீரோ?
உலக மக்களுக்கெல்லாம் தாயன்பைப் பொழிய இருக்கும் குழந்தையோ செவிலித்தாய் கிடைக்காமல் இருப்பதைக் கண்டு காலம் குமைந்தது... மௌனத்தில் கரைந்தது.
- ஆல்போல் தழை தழைத்து..
- அருகுபோல் வேரூன்றி ..
- மூங்கில்போல் கிளை கிளைத்து..
- முசியாமல் வாழ்ந்திருக்க..
- பார்த்தவர்கள் எல்லோரும்
- பதினாறும் பெற்றெடுக்க..
- கேட்டார்கள் எல்லோரும்
- கிளைகோத்திரமாய் வாழ்ந்திருக்க..
திருமண வாழ்த்துக்கள் பொய்யாகி கணவனை பறிகொடுத்து விதவைத் தாயின் நீட்டியக் கரங்களில் நெஞ்சை கொள்ளைக் கொள்ளும் சிரிப்புடன் ஒரு குழந்தை!
ஏழ்மையும், அதன் பாதிப்புகளும் உடலில் கோலமிட அவமானங்களை நெஞ்சில் தேக்கிக் கொண்டு விழிகளில் பூத்து வரும் கண்ணீர் துளிகளை அடக்கியவாறு குழந்தையை வேண்டி நீட்டிய கரங்களுடன் இன்னொரு தாய்!
உறவுகளை பொருத்தமாய் இணைத்து வைப்பவன் இறைவன் அல்லவா?
இனியும் பெற செவிலித் தாயில்லை என்னும் நிலையில் ஆமினா குழந்தையை நீட்ட இனியும் பெற ஒரு குழந்தையுமில்லை என்னும் நிலையில் ஹலீமா குழந்தையைப் பெற்றுக் கொண்டார்.
- பூக்கும்.



