ஒரு சொல்: 'வெற்றி தோல்வி என்பது இதுதான்!'
https://udayathaaragai.blogspot.com/2014/01/blog-post_28.html
இம்மை என்பது ஒரு விளை நிலம். அந்த நிலத்திற்கு மனிதன் அனுப்பப்பட்டிருக்கிறான்; அவன் தனது உழைப்பாலும், முயற்சியாலும் தனக்கான அறுவடையைத் தயார் செய்ய வேண்டும் என்பதற்காக! இவ்வேலைக்காக அவனுக்குப் பிறப்பு முதல் இறப்புவரை அவகாசம் தரப்பட்டிருக்கிறது. இந்த கால அவகாசத்தில் அவன் செய்த வேளாண்மையைப் பொறுத்தே அவனுடைய அடுத்த வாழ்வான மறுமையில் அறுவடை செய்வான். தான் செய்யும் அறுவடையை வைத்து அவன் மறுமையில் வாழ்வான்.
ஒருவன் வாழ்நாள் முழுவதும் இம்மை எனப்படும் உலக நிலத்தில் நல்ல வித்துக்களை விதைத்திருக்கின்றான். அவற்றிற்கு நன்றாக நீர்ப்பாய்ச்சுகின்றான். அவற்றை சிறப்பாகப் பாதுகாத்திருக்கின்றான் என்றால், மறுமையில் அவன் காலடி எடுத்து வைத்ததும், தனது உழைப்பின் பலனை பச்சைப் பசேலென்று செழித்து வளர்ந்த ஒரு சோலையாய்ப் பார்ப்பான். அந்த இரண்டாம் வாழ்வில் வேறு எந்தச் சிரமத்தையும் அனுபவிக்க வேண்டிய தேவை அவனுக்கு ஏற்படாது. உலகில் வாழ்நாள் முழுவதும் சிரமப்பட்டு உருவாக்கிய தோட்டத்தின் கனிகளை மறுமையில் சுவைத்து அவன் இன்பமாக வாழ்வான். இதற்குப் பெயர்தான் சுவர்க்கம்.
மறுமையின் வெற்றி என்பதன் விளக்கம் இதுதான்.
இதற்கு மாறாக, ஒருவன் வாழ்நாள் முழுவதும் முட்களையும், கசப்பும், நச்சுத்தன்மையும் கொண்ட வித்துக்களையும் உலகில் விதைத்துக் கொண்டிருக்கின்றான் என்றால், அவனுக்கு மறுமையில் இப்படிப்பட்ட அறுவடையே தயாராய் இருக்கும். அத்துடன் தனது முட்டாள்தனத்தை சீர்ப்படுத்திக் கொள்ளவும், மோசமான அந்த அறுவடையை எரித்துவிட்டு, நல்ல அறுவடையை உற்பத்தி செய்து கொள்வதற்கு போதிய அவகாசமும் அங்கு அவனுக்கு கிடைக்காது! இதனால், அந்த மோசமான அறுவடையை வைத்தே அவன் மறுமையின் முழு வாழ்க்கையையும் கழிக்க வேண்டியிருக்கும். அந்த அறுவடையைத்தானே அவன் உலகில் தயார் செய்தான்? முட்களை விதைத்ததன் பலனாக அவன் முள் விரிப்பிலேயே படுக்க வேண்டியிருக்கும். அவன் விதைத்த நச்சுக் கனிகளே அவன் உண்ண வேண்டியிருக்கும்! இதுதான் நரகம்.
மறுமையில் தோல்வியும், ஏமாற்றமும் அடைவது என்பதன் கருத்தும் இதுவே!
- மெளாலான மௌதூதி (ரஹ்)

