ஒரு சொல்: 'மாய மந்திரமல்ல கலிமா!'
https://udayathaaragai.blogspot.com/2013/11/blog-post_17.html
'மந்திரத்தைச் சொல்லுவதால் மலையசையும்! பூமி பிளந்து தண்ணீர் பொங்கிவரும்; அந்த மந்திரத்தின் பொருள் எவருக்குமே தெரியாவிட்டாலும் சரியே!" - என நினைக்கிறார்கள். ஏனெனில் எல்லாவிதமான சக்திகளும், தாக்கங்களும் அந்த மந்திர சொற்களில் அடங்கியிருக்கின்றன என்றும், வாயிலிருந்து அவை வெளிவந்ததும் அற்புதம் நிகழ ஆரம்பித்து விடுகின்றது என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால், இஸ்லாத்தில் இந்தக் கருத்திற்கு இடம் கிடையாது. இங்கு பொருளுக்குத்தான் முக்கியத்துவம் உண்டு. வார்த்தைகளின் சக்தி அவற்றின் பொருளினால்தான் உருவாகிறது. பொருள் இல்லை என்றால், அது உள்ளத்தில் இறங்கவில்லை என்றால், அதன் ஆற்றலால் உங்கள் எண்ணங்களும், குணங்களும், செயல்களும் மாறவில்லை என்றால் வெறும் வார்த்தைகளைச் சொல்வதால் எந்தச் சக்தியும் உண்டாக முடியாது.
உதாரணமாக, உங்களுக்குக் குளிரடிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். "கம்பளிப் போர்வை..! கம்பளிப் போர்வை!" - என்று நாவினால் முணு முணுத்தாலும், ஒரு லட்சம் தடவை ஜபித்தாலும் உண்மையில் குளிர் நிற்கப் போவதில்லை. ஆனால், கம்பளிப் போர்வையைக் கொண்டுவந்து போர்த்திக் கொண்டால் குளிர் தானாகவே குறைந்துவிடும்.
அதேபோல, தாகம் எடுக்கும்போது, "தண்ணீர் !தண்ணீர்!" - என்று காலையிலிருந்து மாலைவரை அரற்றினாலும் தாகம் தீர்ந்துவிடாது. ஆனால், ஒரு மிடறு தண்ணீர் குடித்துவிட்டால் தாகத் தீ அணைந்து போகும்.
காய்ச்சல் அடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு எந்த மருந்து சாப்பிட வேண்டுமோ அந்த மருந்தின் பெயரை ஜபிக்க ஆரம்பித்தால் ஜுரம் குறையுமா என்ன? நிச்சயம் குறைந்துவிடாது. ஆனால், காய்ச்சலுக்கு சம்பந்தப்பட்ட மருந்தை சரியான முறையில் சாப்பிட்டால் காய்ச்சல் பறந்தோடிவிடும்.
'கலிமா தய்யிபா' எனப்படும் சொற்றொடரின் நிலையும் இத்தகையதுதான்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

