ஒரு சொல்: 'வயலுக்கும், அறுவடைக்கும் உள்ள தொடர்பு'
https://udayathaaragai.blogspot.com/2014/01/blog-post_27.html
"கலிமாவை ஏன் சொல்ல வேண்டும்?" - என்ற கேள்விக்கு நீங்கள், "முஸ்லிமுக்கும், நிராகரிப்பாளனுக்கும் இடையில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே கலிமா சொல்லப்படுகிறது!" - என்று பதில் கொடுப்பதைத் தவிர வேறு எந்த பதிலையும் உங்களால் தர முடியாது.
"மாற்றம் ஏற்படுவதன் கருத்தென்ன?" - என்று இப்போது நான் கேட்கிறேன்.
நிராகரிப்பாளனுக்கு இரண்டு கண்கள் இருக்க, முஸ்லிமுக்கு நான்கு கண்கள் வந்துவிட வேண்டும் என்பது கருத்தா? அல்லது, நிராகரிப்பாளனுக்கு ஒரு தலை இருக்க, முஸ்லிமுக்கு இரண்டு தலைகள் இருக்க வேண்டும் என்பது இதன் கருத்தா?
"அதெல்லாம் இல்லை! நிராகரிப்பாளனுடைய முடிவுக்கும், முஸ்லிமுடைய முடிவுக்கும் இடையில் வேற்றுமை ஏற்பட வேண்டும் என்பதே இதன் கருத்து.
நிராகரிப்பாளனின் முடிவு என்பது இதுதான்:
"நிராகரிப்பாளன் மறுமையில், இறைவனின் பேரன்பிலிருந்து ஒதுக்கித் தள்ளப்படுவான். இதனால், தோல்வியும், ஏமாற்றத்தையும் அவன் அடைவான்"
முஸ்லிமுடைய முடிவு என்பது இதுதான்:
"முஸ்லிம் மறுமையில் இறைவனின் பேரன்பைப் பெறுவான். இதனால், அவன் வெற்றியும் மனநிறைவும் பெறுவான்!"
நீங்கள் சொன்ன இந்த விடை சரியானதுதான்.
நீங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டும் என்று நான் விரும்பிகின்றேன்.
- மறுமை என்றால் என்ன?
- அங்கு தோல்வியும், ஏமாற்றமும் அடைவது என்றால் என்ன?
- அங்கு வெற்றியும், பெருவாழ்வும் அடைவது என்றால் என்ன?
இதற்கான பதில் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது அதாவது இம்மையும், மறுமையும் தனித்தனியான இரண்டு அமைப்புகள் அல்ல; ஒன்றோடொன்று தொடர்புடையவைதான்! இதன் ஆரம்பம் இம்மை. முடிவு மறுமை.
வயலுக்கும், அறுவடைக்கும் என்ன தொடர்பு இருக்கிறதோ அதே தொடர்புதான் இம்மைக்கும், மறுமைக்கும் உள்ளது.
நீங்கள் நிலத்தை உழுகிறீர்கள். பிறகு விதைக்கிறீர்கள். பின்னர் நீர் பாய்ச்சுகிறீர்கள். இதற்குப் பிறகு நிலத்தைப் பாதுகாக்கிறீர்கள். அறுவடை வருகிறது. அறுவடைக்குப் பின், நீங்கள் ஆண்டு முழுவதும் சுவையோடு சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் பலனும் கிடைக்கிறது.
நிலத்தில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதுதான் அறுவடையில் கிடைக்கும். கோதுமையை விதைத்தால் கோதுமை உற்பத்தியாகும். முள்ளை விதைத்தால் முட்களே உற்பத்தியாகும். எதையும் விதைக்காத போது தரிசு நிலமாகவே நிற்கும்.
உழுதல், விதைத்தல், நீர்ப் பாய்ச்சுதல், நிலப் பராமரிப்பு போன்ற வேளாண் பணிகளில் காட்டப்படும் கவனக் குறைவுகள், குளறுபடிகள், குறை - நிறைகள் எல்லாமே அறுவடையில் வெளிப்படும். இந்த பணிகளை நீங்கள் மிகவும் கவனமாக, சிறக்க செய்திருந்தால் அவற்றின் பயனையும் அறுவடையின் போது நீங்கள் பார்ப்பீர்கள். கவனமற்று, அலட்சியமாக செய்திருந்தால் அவற்றின் பயனையும் அறுவடையின் போது துல்லியமாக நீங்கள் பார்ப்பீர்கள்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

