ஒரு சொல்: 'பயனின்றி அமையாது வாழ்க்கை!'
https://udayathaaragai.blogspot.com/2014/01/blog-post_26.html
மனிதன் ஏதேனும் ஒரு நோக்கத்தை, பயனை மனதில் கொண்டுதான் எந்த வேலையையும் செய்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். நோக்கமும், பயனும் இன்றி எந்த வேலையையும் அவன் செய்வதில்லை.
நீங்கள் ஏன் நீர் அருந்துகிறீர்கள்? தாகத்தைத் தணித்துக் கொள்வதற் காகத்தான்! நீர் அருந்துவதற்கு முன்னாலிருந்த அதே தாக நிலை, நீரருந்திய பின்னும் இருந்தால்.. நீங்கள் நிச்சயமாக நீர் அருந்த மாட்டீர்கள். காரணம், இது பயனில்லாத ஒரு செயல்.
நீங்கள் ஏன் உணவு உண்ணுகிறீர்கள்? பசியைப் போக்குவதற்கும், அதன் மூலம் உயிரோட்டமுள்ள ஆற்றலை உருவாக்கிக் கொள்வதற்கும்தான்! சாப்பிடுவதும், சாப்பிடாமலிருப்பதும் ஒரே விளைவைக் கொடுத்தால்.. "இது முற்றிலும் வீண் வேலை!" - என்றுதான் நீங்கள் சொல்வீர்கள்.
நோயுற்றிருக்கும்போது ஏன் நீங்கள் மருந்தைப் பயன்படுத்துகிறீர்கள்? நோய் நீங்கி நலம் பெற வேண்டும் என்பதற்காக! மருந்துகள் பயன்படுத்திய பிறகும் நோய் நீங்கவில்லை என்றால், "இந்த மருந்தைப் பயன்படுத்தவது வீண் வேலை!" - என்றுதான் நீங்கள் சொல்வீர்கள்.
நிலத்தில் ஏன் நீங்கள் பாடுபடுகிறீர்கள்? கனிகளும், தானியங்களும், கிழங்குகளும் விளைவதற்கு! விதைத்த பிறகும், மண்ணிலிருந்து எதுவும் முளைக்கவில்லை என்றால் உழுவது, விதைப்பது, நீர் பாய்ச்சுவது ஆகிய செயல்களில் நீங்கள் இப்படிச் சிரமம் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள்!
மொத்தத்தில் உலகில் நீங்கள் செய்கிற பணிகள் ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு நோக்கம் நிச்சயம் இருக்கும். நோக்கம் நிறைவேறாதபோது, "வேலை முறைப்படி செய்யப்படவில்லை!" என்றும் நீங்கள் சொல்கிறீர்கள்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

