ஒரு சொல்:'யோசித்து முடிவெடுங்கள்!'
https://udayathaaragai.blogspot.com/2013/11/blog-post_5192.html
"லா இலாஹ இல்லல்லாஹ்" என்று சொல்வதன் மூலம் உலகம் முழுவதையும் சாட்சியாக நிறுத்தி, உங்கள் இறைவனிடத்தில் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதியாகும் இது. இதற்கு மாறுபாடு செய்தால், உங்கள் நாவும், கைகால்களும், உங்கள் ரோமங்கள் ஒவ்வொன்றும், வானம், பூமியின் ஒவ்வொரு அணுவும் இறைவனின் நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிராய் சான்று கூறும். அப்போது நீங்கள் இக்கட்டான நிலையில் நின்று கொண்டிருப்பீர்கள். நீங்கள் நிரபராதி என்று நிரூபிப்பதற்கு ஒரே ஒரு சாட்சிகூட அவ்விடம் உங்களுக்குக் கிடைக்காது. உங்களுக்காக வாதிட அந்த இடத்தில் எந்த வழக்கறிஞரும் ஆஜராக முடியாது. இன்னும் சொல்லப் போனால் அந்த வழக்கறிஞரும் உங்களைப் போலவே இக்கட்டான நிலையில்தான் அங்கு நின்று கொண்டிருப்பார்.
'சட்டம் ஒரு இருட்டறை!' என்ற சித்தாந்தத்தில், பொய்ச் சாட்சிகளையும், புனைந்துரைத்த ஆதாரங்களையும் முன் வைத்து வாதத் திறமையால் வழக்காடி தப்பித்துக் கொள்ளக் கூடிய நீதிமன்றமும் அல்ல அது. உலகின் போலீஸாரிடம் உங்கள் குற்றத்தை மறைத்துவிடலாம். ஆனால், இறைவனின் காவலர்களிடம் எதையும் மறைக்கவே முடியாது. உலகத்து சிறைகளிலிருந்து ஜாமீன் பெற்று தப்பிக்க முடியும். ஆனால், இறைவனின் சிறையிலிருந்தோ தப்பிப்பதற்கு எவ்வித வழியுமிருக்காது!
அதனால், இறைவனிடம் தவறான வாக்குறுதி அளிப்பது கடைந்தெடுத்த முட்டாள்தனமாகும். ஆகவே, வாக்குறுதி அளிப்பதாக இருந்தால் நன்கு யோசித்து முடிவெடுங்கள். அதன் பின் நீங்கள் அளித்த வாக்குறுதியை மிகவும் பேணுதலாக நிறைவேற்றுங்கள்.
ஏனோதானோவென்று வாயால் மட்டும் வாக்குறுதி அளிப்பது கட்டாயமல்ல. ஏனென்றால், மனப்பூர்வமாக அல்லாமல் வாயளவில் வாக்குறுதி அளிப்பது பயனற்றதாகும்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)


