ஆன்மிகச் சிந்தனை: 'சுகமான சுமை'
https://udayathaaragai.blogspot.com/2014/02/blog-post_17.html
பெற்றோர் பெரும் சுமையாய்க் கருதப்படும் சமூக அமைப்பை நோக்கி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிற காலமிது.
பெற்றோர் தம் பிள்ளைகளை வளமாக உருவாக்க செய்யும் அர்ப்பணங்கள் அளப்பறியவை. அதிலும், தாயின் தியாகத்தைச் சுட்டிக் காட்ட உலகில் வேறு வார்த்தையே இல்லை.
ஒருமுறை. அண்ணலாரை அணுகி ஒருவர் கேட்டார்: "ஓ! இறைவனின் தூதரே! எனக்கு வயது முதிர்ந்த தாய் இருக்கிறார். அவருக்கு தினமும் நான் உணவூட்டிவிடுகிறேன். குடிக்க நீர் எடுத்து வைக்கிறேன். இயற்கை உபாதைகள் தீர்க்க உதவுகிறேன். இவைகளின் மூலம் நான் என்னுடைய தாய்க்கு ஆற்ற வேண்டிய கடமையை நிறைவு செய்தவன் ஆவேனா?"
"இல்லை!" - என்று நபிகளார் பதிலளித்தார்கள். "தோழரே! உன் தாய் உனக்கு இதைவிட அதிகமாகப் பணிவிடை செய்திருக்கிறார்" - என்றார்கள்.
இன்னொரு சமயம். முதுமைப் பருவத்தில் தன் தாய், தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் அவர்களுக்குப் பணிவிடை செய்து சுவனம் புகாதவன் நாசமாகப் போட்டும்!" - என்று கடிந்து கூறுகிறார்கள்.
பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் சிலவற்றையும் நபிகளார் வலியுறுத்துகிறார்கள்.
அவை:
- பெற்றோரின் பிழைப் பொறுக்க இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரல்
- பெற்றோரின் மரண சாசனத்தை நிறைவேற்றல்
- பெற்றோரின் உறவு முறைகளைத் துண்டிக்காமல் வாழ்தல்
- பெற்றோரின் நண்பர்களுக்கு கண்ணியம் அளித்து உபசரித்தல்
ஒவ்வொரு மனிதனும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இவை.
(தினமணி ஆன்மிகச் சிந்தனையில் 15.03.1995 வெளியானது)
