ஆன்மிகச் சிந்தனை: 'அச்சமே அன்புக்கு அடிப்படை'
https://udayathaaragai.blogspot.com/2014/03/blog-post_5.html
முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதன் மரணத்தருவாயில் தன் மகனிடம் கேட்டான்: "மகனே! என்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? தந்தை என்ற முறையில் நான் என் பொறுப்பகளைச் சரியாக நிறைவேற்றினேனா?"
"தாங்கள் ஒரு நல்ல தந்தையாகத்தான் நடந்து கொண்டீர்கள்" - என்றான் மகன்.
அம்மனிதன் தொடர்ந்தான்: "... மகனே! நான் ஒருபோதும் நற்செயல் புரியவில்லை. அதனால், இறைவனின் சந்நிதியில் நிறுத்தப்படும் வேளையில் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும். எனவே, நான் இறந்ததும் என்னுடைய உடலை எரித்துவிடு. எலும்புகளை நன்றாக அரைத்துப் பொடியாக்கிவிடு! அச்சாம்பலை வேகமாக வீசும் காற்றில் தூவி விடு!"
மகனும் தந்தை சொன்னபடியே செய்து முடித்தான்.
இறைவனோ மரணடைந்த அம்மனிதனின் சாம்பலை ஒன்று திரட்டி மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பினான்.
"நீ ஏன் இவ்வாறு நடந்து கொண்டாய்?" - என்று இறைவன் அவனிடம் கேட்டான். அதற்கு அம்மனிதன், "என் எஜமானனே! உன்னுடைய அச்சத்தால்தான் அப்படி நடந்து கொண்டேன்!" - என்று பதிலளித்தான்.
இதைக்கேட்ட இறைவன் தன் அளவற்ற கருணையினால், அம்மனிதனை மன்னித்துவிட்டான்.
இறையச்சம் இறை அன்பைப் பெற்றுத்தர வல்லது!" - என்பதை நபிகளார் தம் தோழர்களுக்கு விளக்கிய சம்பவமிது.
உண்மையில், நாவை, கை - கால்களை, எண்ணங்களை தீமையிலிருந்து தடுத்துக் கொள்வது அல்லது அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது இறையச்சம் எனப்படும். இதுவே இறைநம்பிக்கயைின் உயிரூட்டமாகும்; நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான மிக முக்கியச் சாதனமாகும்.
-தினமணி - ஆன்மிகச் சிந்தனைப் பகுதியில், 24.03.1995-ல் பிரசுரமானது.
