பாலை மலர் - இதழ் - 1
https://udayathaaragai.blogspot.com/2012/11/1.html
இரவு
மங்கையை பாதுகாத்த களைப்புடன் நட்சத்திர சிப்பாய்கள் காவல் பணியிலிருந்து விலகிக் கொண்டிருந்தார்கள்.
கிழக்கு வான் வழியே செங்கதிரவன் கீற்றுகளின் மூலம் தன் பிரியாளுக்கு தூது விடுத்துக்
கொண்டிருந்தான். அதைக் கண்டு அவள் சிரித்த சிரிப்பு பளீரென்று பகலாய் விடிந்தது.
“போ..போ..!
வட்ட நிலவு தோழி! இனி உன் துணை தேவையில்லை. அதோ! என் துணைவர் காற்றிலும் வேகமெடுத்துப்
புறப்பட்டுவிட்டார்!” – இரவு நிலவை விரட்டியது.
“செக்கச்
சிவந்த சூரியனே! செம்மைப்படர்ந்த சுந்திரனே! சிறிது தணித்துக்கொள் உன் தணலை! சுட்டுப்
பொசுக்கி விடாதே என்னை..!” புல்லின் நுனியிலிருந்து முத்துப் பனித்துளி கெஞ்சியது.
வைகறை
விடியல். இதமான இளந்தென்றல். தூக்க அன்னையின் கதகதப்பான மடியிலிருந்து விழிப்பதும்
சிரமம்.
இருட்டுப்
போர்வைக்குள் போர்த்தப்பட்ட சித்திரமாய் நகரம். மெல்ல.. மெல்ல கலையும் இருட்டின் கோலங்கள்!
ஒட்டகங்களின்
கழுத்தில் கட்டப்பட்டிருந்த சிறு வெண்கல மணிகளின் கிணுகிணுப்பு.
குஞ்சுகளுக்கு
இரைத்தேட இறக்கைகள் விசிறிக்கொண்டு புதுகாலையை வரவேற்க தயாராய் காத்திருந்த புல்லினங்களின்
“கீச்.. கீச்” ஒலி!
பட்டிகளில்
அடைக்கப்பட்டிருந்த ஆட்டு மந்தை காலை காற்றின் மணமறிந்து உடலை சிலிர்த்துவிட்டு “மே..மே..”
கத்தல்.
கிழக்கு
மலைகளைத் தாண்டி அபுகுபைஸ் சிகரத்தில் ஏறிய சூரியன் உக்கிரமாக சுட ஆரம்பித்தான். தொழுகையாளிகளின்
நெற்றி தழும்பைப் போல அவர்களின் முகத்தில் மிளிரும் ஒளியைப் போல அது இருந்தது.
மக்கா
மாநகர் காலையின் வருகையால் படு சுறுசுறுப்பாகி விட்டிருந்தது. ஊரார் தத்தம் அன்றாட
கடமைகளுக்கு தயாராகி கொண்டிருந்தனர்.
ஆனால்,
பனு ஹாஷிம் உயர் குலத்தைச் சேர்ந்த அந்த கனவானுக்கு என்ன நேர்ந்தது?
நெடிதுயர்ந்த தோற்றம் கருப்பு கம்பளத்தைப் போர்த்துக் கொண்ட சுவற்றில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார்.
நெற்றிச்
சுருக்கங்கள் ஏற்ற இறக்கங்களாய் .. கடல் அலைகள் போல எழும்புவதும், மீள்வதுமாய் இருந்தன.
சதா
சர்வகாலமும் பிரகாசத்தால் சுடர்விடும் அந்தக் கண்களில் ஏனிந்த சோகம்?
ஆழ்ந்த
சிந்தனையில் மூழ்கியிருந்த அவர் நிலை கொள்ளாமல் எழுந்தார். முற்றத்தில் குறுக்கும்-நெடுக்குமாய்
நடந்தார்.
அவரிடம்
அடிக்கடி பெருமூச்சு வெளிப்பட்டது.
இறந்த
நாளின் மரணத்துக்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்த இயற்கையின் முகாரியும், புதுநாளின்
ஜனனத்தை ஆவலுடன் தாலாட்டுப் பாடி வரவேற்றுக் கொண்டிருந்த மனிதர்களின் நீலாம்பரியும்
அவர் சிந்தனையை கலைப்பதாய் இல்லை.
அவ்வளவு
ஏன்?
“என்ன?
ஏது?” என்று வியப்புடன் நோக்கிக் கொண்டிருந்த வீட்டாரையும் அவர் சட்டை செய்வதாய் இல்லை.
என்னவாயிற்று அவருக்கு?
பனு
உமையாக்களுடன் எந்த பிணக்கும் இல்லையே! சிரியாவிலிருந்து வரும் வணிகப் பொருட்கள்கூட
ஒழுங்காய் தங்குத் தடையின்றி ஒட்டகங்களில் வருகின்றனவே!
ஒருவேளை ஹஜ்ஜுக்காலம் நெருங்கிவருவதால்.. அது சம்பந்தப்பட்ட
கவலையாக இருக்குமோ? ஊஹீம் அப்படியிருக்காது! அந்தப் பொறுப்பை சிறப்புடன் நிறைவேற்றும்
பரம்பரையைச் சேர்ந்தவராயிற்றே அவர்!
பின்
என்னவாயிற்று? ஏனிந்த கவலை? இதுவரை அவரை இப்படி யாரும் கண்டதில்லையே!
வீட்டார்
குழம்பி நின்றார்கள். ஆளாளுக்கு பல விதமான கற்பனைகள் சிறகு முளைத்துப் பறந்தன. ஆனால்,
அதைப்பற்றி நேரிடையாக அவரிடம் விசாரிக்கும் துணிவு ஒருவருக்கும் இல்லை. இப்படியாக நேரம்
ஓடிக் கொண்டிருந்தது.
கடைசியில்
நீண்ட பெருமூச்சுடன் நெற்றியில் படர்ந்திருந்த வியர்வையை துடைத்தவாறு, “எங்கே அப்துல்லாஹ்?”
– என்று கேட்டார் அப்துல் முத்தலிப்.
இறைவன் நாடினால் பூக்கும்.
இறைவன் நாடினால் பூக்கும்.

