பாலை மலர் - இதழ் - 2 -கோழைகள் திரையிட்டுக் கொள்ளட்டும்!

பெரும் சிந்தனைக்கு பின் கலைந்திருந்த போர்வையை சரி செய்துகொண்டே அப்துல் முத்தலிப், "எங்கே அப்துல்லாஹ்? அவரை உடனே கஅபாவுக்கு அழைத்து வாருங்கள்! இன்று அப்துல்லாஹ்வை பலியிட்டு என் நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்!"- என்றார்

அப்துல் முத்தலிபின் உறுதி வாய்ந்த வார்த்தைகள் குடும்பத்தாரை நிலைகுலையச் செய்தன. ஒருவர் மற்றொருவரின் முகத்தை அரக்கப்பரக்க பார்த்துக் கொண்டனர். முத்து முத்தாய் வியர்வை அரும்பி வழிந்தது. முகங்கள் வெளிறிவிட்டன. இரத்த ஓட்டம் நின்றுவிட்டதைப் போல ஒரு பிரமை. அருங்காட்சியகத்தின் சிலைகளாய் அவர்கள் சமைந்து நின்றார்கள். 

வீட்டு முகப்பில் அமைந்திருந்தது ஒட்டகக் கொட்டகை. அதில் ஓர் அலமாரி. மண் குடுவைகள், கயிறுகள், தீவனப் பைகள், இரும்புச் சாமான்கள் என்று நிரம்பி இருந்தன.

அப்துல் முத்தலிப் அலமாரியிலிருந்து வெட்டரிவாள் ஒன்றை உருவி எடுத்தார். பளபளத்துக் கொண்டிருந்த அதன் கூர்மையை சோதித்தார். திருப்தி இல்லை என்பதை பிதுங்கிய உதடுகள் வெளிப்படுத்தின. மலைப்பாறையில் ஒரு பிடி மணலை பரப்பி வெட்டரிவாளை தேய்க்க ஆரம்பித்தார்.

அப்துல்லாஹ் பலியிடப் போகும் செய்தி நகரமெங்கும் காட்டுத் தீயைப் போல் பரவியது. இறைவன் தமக்களித்திருந்த பத்து ஆண்பிள்ளைகளும் நோயில்லாமல் வளர்ந்தால்.. அதில் ஒருவனை பலியிடுவதாக வேண்டிக் கொண்ட அப்துல் முத்தலிபின் **நேர்ச்சையை மக்காவாசிகள் எல்லோரும் அறிந்திருந்தார்கள். ஆனால், அது செயல் வடிவம் பெறும் போது இவ்வளவு மன பாதிப்பை உருவாக்கும் என்பதை அவர்கள் அறியவில்லை. 

"சர்.. சரக்.." - வெட்டரிவாள் தீப்பொறிகளை கக்கியது.

அப்துல்லாஹ்வை அழைத்து வர ஆள் அனுப்பியாகிவிட்டது.  ஹாஷிம் குலத்தார் வாக்குறுதி மீறாதாவர்கள். எஃகை நிகர்த்த மன உறுதி கொண்டவர்கள். இத்தனைக்கும் அப்துல் முத்தலிப் குறைஷி குலத்தின் மாபெரும் தலைவராக போற்றப்படுபவர். அவர் தனது கண்ணியத்தை இழப்பதென்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.

 சற்று நேரத்தில் அபுதாலிப்,  ஹாரிஸ் சகோதரர்கள் புடைசூழ அப்துல்லாஹ் அங்கு வந்து சேர்ந்தார். கூடவே அவரது பாட்டி வீட்டாரும் வந்து விட்டனர். அப்துல்லாஹ் அமைதியாக நின்றிருந்தார். முகத்தில் எவ்வித சலனமும் இல்லை. கண்களில் கலக்கமும் இல்லை. உடல நடுங்கவுமில்லை.  ஹாஷிம் குலத்தோன்றல் 'அஞ்சா நெஞ்சன்' என்பதை அவர் நின்றிருந்த தோரணையே நிரூபித்தது. 

எல்லோருடைய  பார்வையும் அப்துல்லாஹ்வின் மீதே நிலைத்திருந்தது. அரங்கேற இருக்கும் பெரும் சோகம் அனைவரையும் தொற்றிக் கொண்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் யாராவது அப்துல் முத்தலிபின் கையிலிருக்கும் வெட்ரிவாளை பறித்திட மாட்டார்களா? ஓர் அற்புதம் ஏதும் நிகழ்ந்திடாதா? என்று கூடியிருந்தோர் மனம் துடித்துடித்தது. 

அப்துல் முத்தலிப் இதையெல்லாம் கவனிக்கத் தவறவில்லை. அங்கு இருந்தவர்களின் உணர்வுகளை அவர் துல்லியமாக எடைபோடவே செய்தார். ஒரு காலை பக்கத்திலிருந்த மரத்துண்டின் மீது ஊன்றியவாறே "உம்!"- என்று தலையாட்டிக் கொண்டார். பிறகு உறுதியாக சொன்னார்: 

"என்னை கோழையாக்க அனைவரும் தீர்மானித்து விட்டீர்கள் போலும்? ஓ..! வெட்கம்..வெட்கம்!! ஒரு கண்ணியம் மிக்க குலத்தலைவன்.. எடுத்த முடிவிலிருந்து விலக்க நினைப்பது அவமானம்..! அவமானம்..!!

நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள் என் வேண்டுதல் என்னவென்று நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நேற்றைய இரவு மிகவும் கவனத்துடன் மன ஓர்மையுடன் சீட்டுக்களைக் குலுக்கிப் பார்த்தேன். திரும்பத் திரும்ப அப்துல்லாஹ்வின் பெயரே வந்தது. அதனால், அவரை பலியிடுவது தவிர்க்க இயலாததாகிவிட்டது. அந்த வேண்டுதலை இன்று நிறைவேற்றியாக வேண்டும். 

இந்த உயிர் பலியைக் காண மன வலிமையற்ற தொடை நடுங்கிகள் யாரோ அவர் தம் முகத்துக்கு திரையிட்டுக் கொள்ளட்டும்! பலியிடும்போது, உண்டாகும் அலறலை கேட்க யாருக்கு நெஞ்சுறுதி இல்லையோ அவர் காதுகளில் பஞ்சடைத்துக் கொள்ளட்டும்!

உங்களுக்கு அப்துல்லாஹ்வின் மீது பாசமிருக்கிறது. நேசமிருக்கிறது. ஆனால், இது என் கண்ணியத்தை .. கௌரவத்தை குலைக்கும் செயல் என்பதைப் பற்றி இங்கு யாருக்கும் அக்கறையில்லை. அப்த் மனாபின் மக்களா இவ்வளவு பலவீனமடைந்து போனது? ஓ! அபுகுபைஸ் குன்றுகள் பிளந்து அதில் இந்த கோழைகள் புதையுண்டு போகட்டும்!" - கோடை இடியாய் வார்த்தைகள் தெறித்தன. 



தனது உறுதியை வெளிப்படுத்தும் விதமாக அப்துல் முத்தலிப் கையிலிருந்த வெட்டறிவாளை இறுகப் பற்றினார். 

அப்துல்லாஹ்வின் பாட்டி வீட்டாரும், பிற சகோதரர்களும், உறவினர்களும் சேர்ந்து வளையமாய் சுற்றி நின்று கொண்டார்கள். சுவர் போல தடை ஏற்படுத்தினார்கள். இனி தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் அப்துல்லாஹ்வை நிரந்தரமாக பிரிய வேண்டியிருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். 

"முடியாது..! இந்த உயிர் பலியை அனுமதிக்க முடியாது! எங்கள பிணங்களை கடந்துதான் அப்துல் முத்தலிப் நீர் அப்துல்லாஹ்வை நெருங்க முடியும்!" - ஆவேசமாக கூச்சலிட்டார்கள்.

அப்துல் முத்தலிப்பும் கத்த ஆரம்பித்தார். இரு தரப்பிலும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. உணர்ச்சிகளின் தீப்பிழம்பு அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டது. நேரமாக.. நேரமாக.. நிலைமை மோசமாகிக் கொண்டேயிருந்தது. இருதரப்பினரும் தங்கள் முடிவுகளிலிருந்த பின்வாங்குவதாகக் காணோம். 

ஒருபுறம். அப்துல்லாஹ்வை எப்படியும் பலியிடேயாக வேண்டும் என்று பளபளக்கும் வெட்டரிவாளுடன் அப்துல் முத்தலிப். மறுபுறமோ, அதை எப்படியாவது தடுத்த நிறுத்திட வேண்டமென்ற ஆவேசத்தில் உறவினர் கூட்டம்.

-- இறைவன் நாடினால்.. பூக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
**நேர்ச்சை என்பதன் உண்மையான பொருள்: மனிதன் தான் நாடிய செயல் ஏதேனும் நிறைவேற இறைவனின் உவப்புக்காக தன் மீது கடமையாக்கப்பட்டள்ள விஷயங்களைத் தவிர இன்னும் பிற நற்செயல்களை அதிகம் செய்வதாக இறைவனிடம் தரும் வாக்குறுதியாகும். அது தன் மீது கடமையல்லாத செயலாகவும், ஆகுமானதாகவும் இருக்க வேண்டும். கேட்டது நிறைவேறிவிடும்போது, தான் செய்வதாக உறுதி எடுத்துக் கொண்ட நற்செயல் அல்லாஹ்வுக்காக செய்யப்படுவதாகவும் இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட நேர்ச்சை அல்லாஹ்வின் வழிபாடுகளில் ஒன்றாகவும், அதனை நிறைவேற்றுவது நற்கூலியை பெற்றுத் தருவதாகவும் மாறிவிடுகிறது. இதுவல்லாத பிற நேர்ச்சைகள் பாவமாகவும், அவற்றை நிறைவேற்றுவது கடும் தண்டனைக்குரிய செயலாகவும் உள்ளது.

அப்துல் முத்தலிப்பின் நேர்ச்சை அறியாமைக் காலத்து அரபு மக்களின் பழக்க வழக்கங்களில ஒன்று. இஸ்லாத்துக்கு முன் அரபு மக்கள் பின் பற்றி வந்த மூடப்பழக்கவழக்கங்களில் ஒன்றாகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------

Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 7277592123648006773

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress