பாலை மலர் - இதழ் - 3, 'தீர்ந்தது ஒரு சர்ச்சை!'



அப்துல்லாஹ்வின் விவகாரம் பெரும் புயலாய் அங்கே உருவெடுத்தது!

இரத்தக் களறியாக வேண்டிய அந்த நேரத்தில்..

"குறைஷிகளின் தலைவரே!" என்று கூட்டத்தில் ஒரு குரல் கேட்டது.

அங்கிருந்தோரின் பார்வை முழுக்க குரலை நோக்கி திரும்பியது.

அங்கே ஒரு பழுத்த முதியவர் நின்றிருந்தார்.

".... குறைஷிகளின் தலைவர் அவர்கள் கேட்பதாக இருந்தால்... ஒரு ஆலோசனையை சொல்ல முடியும்!" - என்றார் அவர் தயங்கியவாறு..

" ம்... சொல்லலாம். ஆனால், என்னிடம் மட்டும் எந்த வாக்குறுதியைக் கேட்க வேண்டாம்! சொல்ல விரும்புவதைச் சொல்லலாம்!" - என்றார் அப்துல் முத்தலிப்.

" பனு ஆமிர் தெருவில்  குறிச் சொல்லும் பெண்ணொருத்தி இருக்கிறாள். அவள் உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்!"-என்று நிறுத்தினார் அந்த முதியவர்.



"எனக்கு மட்டுமா? மக்கா நகரம் முழுவதும் அவள் பிரசித்திப் பெற்றவளாயிற்றே! அவளது 'அருள்வாக்கு' கொஞ்சமும் தப்பாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே? மக்கா மட்டுமா..? யேமன், நஜ்து மக்கள் கூட அவளைத் தேடி கூட்டங் கூட்டமாக வருவார்களே! சரி.. அவளுக்கு என்ன இப்போ?" அப்துல் முத்தலிப் அரிவாளை கூர் தீட்டியவாறே கேட்டார்.

"நாம் அவளிடம் செல்வோம். இந்த விவகாரத்தைச் சொல்வோம். அவள் சொல்படியே நடப்போம். அவள் யாருக்கும் பயப்படாதவள். யார் பக்கமும் சேராதவள். அதனால் அவள் நடுநிலையாகத்தான் தீர்ப்பளிப்பாள். என்ன சொல்கிறீர்கள்?" - என்று முதியவர் கேட்டார்.

முதியவர் சொல்லைக் கேட்டதும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார் அப்துல் முத்தலிப். அணிந்திருந்த நீண்ட அங்கியைக் கழற்றி வீட்டில் மாட்டினார். முதியவரது யோசனை அவருக்கும் சம்பந்தம் என்பது அந்த செய்கைப் புலப்படுத்தியது.

"சரி வாருங்கள்.. அந்த சாமியாரிணி வீட்டுக்குப் போவோம்!" - என்று புறப்பட்டார். 

"அந்த அரிவாளை வைத்துவிட்டு வரக்கூடாதா?"-என்றனர் உறவினர்.

"அதெல்லாம் முடியாது! அந்த சாமியாரிணி தீர்ப்பு அளிக்கும்வரை அப்துல் முத்தலிப்பின் கையிலிருந்து வெட்டரிவாளை யாராலும் பிரிக்க முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்!" - எல்லோருக்கும் முன்பாக நடந்தவாறு சொன்னார் அப்துல் முத்தலிப்.

 சற்று நேரத்தில் பனுஹாஷிம் குலத்தாருடன் குறிச்சொல்பவளின் வீட்டை அடைந்தார் அப்துல் முத்தலிப்.

குறிச் சொல்லும் அந்த பெண்ணுக்கு நடுத்தர வயதிருக்கும். சிக்குப் பிடித்து சடை சடையாய் தொங்கிக் கொண்டிருந்தது அவளது தலை முடி! அழுக்கடைந்த முகம்! அரை நிர்வாண உடல். கழுத்தில் மாலையாய் தொங்கிக் கொண்டிருந்தன ஒட்டகத்தின் எலும்புகள்! கைகளிலும், கால்களிலும் பெரும் இரும்பு வளையங்கள்! பார்த்ததும் கிலியூட்டும் முகம்! அதில் சிவந்த கோலி குண்டுகள் போன்ற கண்கள். புருவங்களில் கம்பளிப் புழுப் போல அப்பியிருந்த மை! அவளது தோற்றமே அனைவரையும் பீதிக்குள்ளாக்கியது.


லாத், உஸ்ஸாக்களின் சந்ததியினரான மக்காவாசிகள் அழகிய முகம் கொண்டவர்கள் மறைவான விஷயங்களை அறிந்து கொள்ள முடியாது! என்றொரு மடத்தனமான நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள்.

ஜைத்தூன் (ஆலிவ்) எண்ணெய்யால் எரிந்துக் கொண்டிருந்த தீவட்டிகளுக்கு எதிரே அமர்ந்திருந்த குறிச்சொல்பவள் அனைவரையும் அமரும்படி சைகைச் செய்தாள்.

 அப்துல் முத்தலிப் அரிவாளை தரையில் நட்டு அதன் எதிரே அமர்ந்து கொண்டார். மற்றவர்களில் சிலர் பவ்வியமாக முழங்காலிட்டு குனிந்தவாறு அமர, இன்னும் சிலரோ பயபக்தியுடன் கைக் கட்டி வாய்பொத்தி அமர்ந்தனர். வந்த விஷயத்தை மென்மையான குரலில் சொன்னார்கள்.

எல்லாவற்றையும் கண்களை மூடியவாறு கேட்டுக் கொண்டேயிருந்தாள் குறிச்சொல்பவள். அவர்கள் சொல்ல சொல்ல.. இவள் அதை ஏதோ மேலுலகத்துக்கு அனுப்பி விடைப் பெறுவதுப் போல தலையாட்டிக் கொண்டிருந்தாள்.

"எப்படியாவது.. அப்துல்லாஹ்வைக் காப்பாற்றுங்கள் தாயே!"- என்று கூட்டத்திலிருந்தவர் சொல்லி முடிக்கும் முன் குறிக்கிட்ட அப்துல் முத்தலிப், "தாயே! இவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டாம். உங்கள் ஞான திருஷ்டியின் மூலமாக பார்த்து உங்களது முடிவை மட்டும் சொல்லுங்களம்மா!" - என்றார் கராறாக!

குறிச் சொல்லும் பெண், "ஆஹா..ஹா..ஹா..!"- என்று சிரித்தாள். அந்த சத்தத்தால் வெளிப்பட்ட காற்று தீவட்டிகளில் பட்டு அவளது முகம் கருப்பு வெள்ளையாக மாறி மாறி தெரிந்தது. மஞ்சள் நிறத்திலிருந்த பற்கள் அச்சமூட்டின. தனக்கே உரிய பிரத்யேமான குரலில் அவள் கட்டளையாகவே சொன்னாள்:

"மக்காவாசிகளே கேட்டுக் கொள்ளுங்கள்.. பனுஹாஷிம் குலத்தாரே காது திறந்து கேளுங்கள்! உங்கள் நேர்ச்சைகளை மற்றொரு வித்திலும் நீங்கள் நிறைவேற்றலாம்! அப்துல்லாஹ் பெயருக்கு பதிலாக ஒட்டகங்களின் எண்ணிக்கையை சேர்த்துக் கொள்ளுங்கள். அப்துல்லாஹ் பெயர் வரும்வரை அம்பெறியுங்கள். அதன் பிறகு ஒட்டகங்களை பலியிடுங்கள்! உங்கள் நேர்ச்சை தீர்ந்துவிடும். காணிக்கைச் செலுத்திவிட்டு கிளம்புங்கள்!"

கட்டுக்கடங்காத சந்தோஷத்துடன் எல்லோரும் வீட்டுக்குத் திரும்பினார்கள்.

குறிச் சொல்பவள் சொன்னது போலவே, அம்புகளை எய்தார்கள். பத்து பத்தாய் ஒட்டகங்களின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள். ஒவ்வொரு முறையும் அப்துல்லாஹ்வின் பெயரே வந்தது. எல்லோரது முகங்களிலும் வியர்வை அரும்பியது. கடைசியல் நூறு ஒட்டகங்கள் வந்தன. அறியாமைக் காலத்து அப்துல்லாஹ்வின் நேர்ச்சையும் ஒருவழியாக முடிந்தது.

அப்துல் முத்தலிப் அப்துல்லாஹ்வுக்குப் பதிலாக 100 ஒட்டகங்களை அறுத்து பலியிட்டார்.

- பூக்கும்  







Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 6211265769014859550

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress