அழைப்பது நம் கடமை - 9, 'படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு!'
https://udayathaaragai.blogspot.com/2012/12/9.html
மழைப் பொழிவதற்கோ, வெள்ளப் பெருக்கெடுப்பதற்கோ அறிகுறியே இல்லாத சூழலில் கப்பல் கட்டுவது என்பது நிராகரிப்பாளர்களுக்கு விசித்திரமான செயலாக்கப்பட்டது. ஆனால், நம்பிக்கையாளர்களுக்கோ அது இறைநம்பிக்கையின் ஆழமாக தெரிந்தது.
நூஹ் நபி தமது செயலைக் கண்டு எள்ளி நகைத்த சமுதாயத்தவரிடம் பதிலளித்தார்:
"நீங்கள் எங்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கிறீர்கள் என்றால்.. நீங்கள் சிரிப்பது போன்றே நாங்களும் உங்களைக் குறித்து சிரித்துக் கொண்டிருக்கிறோம். இழிவுபடுத்தக் கூடிய வேதனைக்கு யார் ஆளாகப் போகின்றார் என்பதையும், தடுத்து நிறுத்த முடியாத வேதனை யார் மீது இறங்கப் போகின்றது என்பதையும் வெகு விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" (திருக்குர்ஆன்-11:38,39)
நூஹ் நபிகளாரின் சமூக மக்களின் இறைநிராகரிப்பும், அதிலேயே நிலைத்திருக்கும் பிடிவாதமும், மறுமையில் அந்த மக்களை பொய்யர்களாக தோலுரித்துக் காட்டும். தங்களுக்கு இறைச் செய்தியை சமர்பிக்க எந்த நபியுமே அனுப்பப்படவில்லை என்று பொய்யுரைக்க வைக்கும்.
இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளார் (ஸல்) கூறியதாக.. நபித்தோழர் அபூ சயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்:
"நூஹ் நபியும் அவரது சமூகத்தாரும் மறுமையில் நிறுத்தப்படும்போது, நூஹ் நபியிடம் இறைவன் விசாரிப்பான்: 'என்னுடைய செய்தியை உமது சமூகத்தாரிடம் சேர்ந்துவிட்டீரா?' நூஹ் நபி பதிலளிப்பார்: 'ஆமாம் என் இறைவனே! சேர்த்துவிட்டேன்!' அதன் பிறகு இறைவன், அவரது சமூகத்தாரிடம் கேட்பான்: 'என்ன இவர் என்னைக் குறித்த செய்தியை உங்களுக்கு எத்தி வைத்துவிட்டாரா?' அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள்: 'இல்லை.. இல்லை இறைவா! எங்களிடம் எந்த இறைத்தூதரும் வரவில்லை. உன்னைக் குறித்து எச்சரிக்கவும் இல்லை'
அதன் பிறகு இறைவன் நூஹ் நபியிடம் கேட்பான்: "சரி உமக்கு சாட்சியாக யாராவது இருக்கிறார்களா?' நூஹ் நபியும் பதிலளிப்பார்: 'முஹம்மதுவும் அவரது சமுதாயத்தாரும் இதற்கு சாட்சி!'- என்று சொன்ன நபிகளார் தொடர்ந்தார்கள்: 'நூஹ் நபி எத்தி வைத்த இறைச் செய்திக்கு நாம் சான்று பகர வேண்டியிருக்கும்!' (புகாரி)
இதைதான் அல்லாஹ்வும் கூறுகின்றான்: "மேலும், இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன், சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்கு சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக!" (திருக்குர்ஆன்-2:143)
"நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். நாம் அறிவிக்கின்றபடியும், நமது கண்காணிப்பிலும் ஒரு கப்பலைத் தயார் செய்யும்! பின்னர் நம் கட்டளை வந்ததும், உலையிலிருந்து தண்ணீர் பொங்கி எழ ஆரம்பித்தால்.. எல்லா வகைப் பிராணிகளிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியையும், உமது குடும்பத்தாரையும், அதில் ஏற்றிக் கொள்ளும். அவர்களில் யாருக்கு எதிராக முன்னரே தீர்ப்பாகி விட்டதோ அவர்களைத் தவிர! மேலும் கொடுமைக்காரர்களைப் பற்றி நீர் எம்மிடம் எதுவும் பேசாதீர்!"(திருக்குர்ஆன்-23:27)
நூஹ் நபியின் அழைப்பை ஏற்க மறுத்த சொந்த மகன் உட்பட எல்லோரும் அழிக்கப்படுகிறார்கள்.
"திண்ணமாக, இந்த வரலாற்றில் பெரும் சான்றுகள் உள்ளன!" (திருக்குர்ஆன்-23:30)
-- அழைப்பது தொடரும்.

