அழைப்பது நம் கடமை 8, படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு
https://udayathaaragai.blogspot.com/2012/12/8.html
நூஹ் நபியின் அழைப்புப் பணி இறுதிக் கட்டத்தை அடைகிறது.
அவர் தமது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றிவிட்ட நிலையில், இறையருளுக்கான நற்செய்தியும், நிராகரிப்பாளர்களின் தண்டனைக்கான எச்சரிக்கையுமாக இறைவனின் கட்டளை நூஹ் நபிக்கு வருகிறது.
"மேலும், நூஹீக்கு இவ்வாறு வஹி அனுப்பப்பட்டது: உம்முடைய சமுதாயத்தினரில் எவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்களைத் தவிர இனி வேறொருவரும் நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. எனவே, அவர்களின் தவறான செயல்களுக்காக நீர் துயரப்பட வேண்டாம்!" (திருக்குர்ஆன்-11:36)
மக்களில் இனி ஒருவரும் திருந்த வாய்ப்பில்லை என்ற நிலைமை. எந்நேரமும் இறைவனின் தண்டனை இறங்கவிருக்கும் நேரம். அழைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நல்லோர் காக்கப்பட இறைவன் நூஹ் நபிக்கு ஆலோசனை வழங்குகின்றான்.
"மேலும், நமது கண்காணிப்பில் நம் கட்டளைக்கேற்ப ஒரு கப்பலைக் கட்டத் தொடங்குவீராக! மேலும், அநீதி இழைத்தவர்களுக்காக என்னிடம் பரிந்துரை செய்யாதீர்! அவர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்பட வேண்டியவர்கள்!" (திருக்குர்ஆன்-11:37)
தமது சமூகத்தில் இனிமேல், ஒருவரும் நல்லவராக வாய்ப்பு இல்லை என்பதும், அவரது சமுதாயத்தவர் எல்லா நிலையிலும் அவரை துன்புறுத்தி வந்தனர் என்பதும் நூஹ் நபியை மனம் வருந்தச் செய்தது. தமது வாயாலேயே அவர் இறைவனிடம் இப்படி இறைஞ்சலானார்:
"என் அதிபதியே! இந்த நிராகரிப்பாளர்களில் எவரையும் பூமியில் வசிக்க விட்டு வைக்காதே! நீ இவர்களை விட்டு வைத்தால்.. இவர்கள் உன் அடியார்களை வழிகெடுத்துவிடுவார்கள். மேலும், இவர்களின் சந்ததியில் யார் பிறந்தாலும், தீயவனாகவும், நிராகரிப்பாளனாகவும்தான் இருப்பான்!" (திருக்குர்ஆன்-71:26,27)
மனிதனின் புரையோடிப்போன உடல் பகுதி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் நீக்காவிட்டால்.. உடலின் நல்ல பகுதியும் பாதித்துவிடும். அதன்பிறகு, அவன் இறப்பெய்துவதிலிருந்து தடுக்க முடியாது என்பது போலதான் இதுவும். பிறக்கப் போகும் இளந்தலைமுறையினரையும் வழிகெடுப்பதிலிருந்து காக்கவே தீயவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்பது இறைவனின் நியதி. இதுவே பொது நியதிகூட.
இறைவனின் தண்டனை இறங்குவதற்கு முன்னால் நல்லோர் தப்பிப் பிழைக்க பெரும் கப்பல் ஒன்றை செய்யும்படி நூஹ் நபிக்கு இறைவன் ஆணை பிறப்பிக்கின்றான்.
எந்தவிதமான நீர் வளமும் இல்லாத ஒரு கட்டாந்தரையில் கப்பல் கட்டுவது என்பது சாதாரணமான பணியல்ல. மன உறுதியையே சீர்குலைப்பது. ஏற்கனவே எதிரிகளாக நிற்கும் சமுதாயத்தாரின் ஏச்சுக்கும் - பேச்சுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாக்குவது. உளவியல் ரீதியான இந்தத் துன்பங்களையும், பாதிப்புகளையும் அவர் பொறுத்துக் கொண்டார்.
"நூஹ் நபி கப்பலைக் கட்டிக் கொண்டிருந்தார். அவருடைய சமுதாயத் தலைவர்களில் எவரேனும் அவரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அவரை ஏளனம் செய்தனர்" (திருக்குர்ஆன் - 11:38)
-- அழைப்பது தொடரும்.



