அழைப்பது நம் கடமை - 7, படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு
https://udayathaaragai.blogspot.com/2012/12/7.html
தலைமுறை தலைமுறையாக தீயவர்கள் தங்கள் இளந்தலைமுறைக்கு நூஹ் நபியை எதிரியாகவே காட்டினார்கள். அவரை எதிர்ப்பதை தங்களின் மதக் கொள்கையாகவே மாற்றிவிட்டார்கள். தந்தையின் சொல்லே மந்திரமாக பிள்ளைகள் நடந்துகொண்டார்கள். இறைவனை நிராகரிப்பது அவர்களின் சமூகக் கோட்பாடவே மாறிவிட்டது.
"இவர்களின் சந்ததியில் யார் பிறந்தாலும் தீயவனாகவும், நிராகரிப்பாளனாகவும்தான் இருப்பான்" (திருக்குர்ஆன் - 71:27)
கடைசியில், அந்த நிராகரிப்பாளர்களின் மனவஞ்சம் எந்தளவுக்கு கடுமையாக ஆகிவிட்டதென்றால்.. இறைவனின் தண்டனை கொண்டுவரும்படி அறைகூவல் விடுமளவுக்கு அவர்கள் எல்லை கடந்து விடுகின்றார்கள்.
"இறுதியில் அவர்கள், நூஹே நீர் எங்களிடம் தர்க்கம் புரிந்து விட்டீர். அதுவும் அளவுக்கு அதிகமாக தர்க்கம் புரிந்து விட்டீர். அதுவும் அளவுக்கு அதிகமாக தர்க்கம் செய்துவிட்டீர். நீர் உண்மையாளராயின் எந்த வேதனையைப் பற்றி எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையை எங்களிடம் கொண்டு வாரும்! - என்று கூறினார்கள். அதற்கு மறு மொழியாக நூஹ் கூறினார்: அல்லா ஹ் நாடினால்.. அவனே அதனை உங்களிடம் கொண்டு வருவான். (அது வந்துவிட்டால்..) அதனைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு நீங்கள் வலிமையுடையவர்கள் அல்லர்" (திருக்குர்ஆன்-11:32,33)
மக்களிடம் உள்ள பிடிவாதம், தீயவிருப்பங்கள், சுயநலப்போக்குகள், நன்மையில் ஆர்வமின்மை போன்ற செயல்கள் அவர்களுக்குப் பாதகமாகவே அமைந்துவிடுகின்றன. இந்தச செயல்களால்.. அவர்கள் நேர்வழி அடைவதற்கான நற்பேற்றை இறைவன் அளிப்பதில்லை. வழிகேட்டில் செல்ல அந்த மக்கள் விரும்பும்போது. அதிலேயே அவர்களை இறைவன் ஆழ்த்தியும் விடுகின்றான். இந்த நிலையில் மேற்கொள்ளப்படும் அழைப்புப் பணிகள் எந்தப் பலனையும் அளிக்காது.
நூஹ் நபியின் விஷயத்தில் இப்படிதான் நடந்தது. மக்கள் எல்லைமீறிப் போன அந்த இறுதி நேரத்தில் இறைத்தூதர் நூஹ் நபியின் எச்சரிக்கை இதுவாக இருந்தது:
"உங்களை வழிகேட்டில் ஆழ்த்த வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருந்தால்.. உங்களின் நன்மைக்காக நான் எது கூறினாலும் அது உங்களுக்கு எவ்விதப் பலனையும் அளளித்திடமாட்டாது. அவன்தான் உங்கள் இறைவன். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்" (திருக்குர்ஆன்-11:34)
--- அழைப்பது தொடரும்.
