பாலை மலர்: இதழ் 5, பேரிருளில் தடுமாற்றம்!
https://udayathaaragai.blogspot.com/2012/12/4.html
அறியாமைக் காலத்து மக்கா! இறைவன் ஒருவனே என்று பிரகடனம் செய்து அதற்காக தம் முழுவாழ்வையும் அர்ப்பணித்த இப்ராஹீம் நபி மற்றும் அவருடைய திருமகனார் இஸ்மாயீல் நபி (இருவர் மீதும் இறையருள் பொழிவதாக!) அவர்களும் எழுப்பிய ஏகத்துவ கொள்கையை அடிப்படையாகக் கொண்ட மாளிகை, இறையில்லம் கஅபா இருக்கும் மக்கா மாநகரம்.
இறைவன் அருவமானவன். எங்கும் நிறைந்த பரம்பொருள். என்று நிலைநாட்டிய தத்துவத்தின் சொந்தக்காரரான இப்ராஹீம் நபியையே சிலையாக்கி வழிபட்ட இணைவைப்பு சமுதாயம் முழுவதும் நிரம்பி விட்ட மக்கா.
அறியாமைக் காலத்து அரபுகள் தாஙகள் இப்ரா ஹீம் நபி மற்றும் இஸ்மாயீல் நபி என சொல்லியும் கருதியும் வந்தனர். இந்த அடிப்படையில் தாம் பின்பற்றிவரும் மார்க்கம் இறைவனுக்கு விருப்பமான மார்க்கமே என்று எண்ணி வந்தனர். ஆனால், பிந்திய நூற்றாண்டுகளில் அவர்களுடைய மார்க்க அறிஞர்களும், குருமார்களும், குலத்தலைவர்களும், குடும்பப் பெரியார்களும் இன்னும் பல்வேறு மக்களும் விதவிதமான கொள்கைகளையும், செயல்முறைகளையும், சடங்குகளையும் அவர்களுடைய மார்க்கத்தில் கலந்தவாறு இருந்தார்கள்.
பின்னால் வந்த தலைமுறையினர் இந்தக் கலப்படங்களை அசல் மார்க்கத்தின் அம்சங்களாக கருதினர். அதனால், அவர்களுடைய மார்க்கம் முழுவதும் சந்தேகத்திற்கும், குழப்பத்திற்கும் உரியதாகிவிட்டிருந்தது.
ஒரு சிலையா? இரண்டு சிலையா? 360 க்கும் மேற்பட்ட சிலைகள் கஅபாவினுள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. கஅபாவின் உட்புறம் மக்காவாசிகளின் அறியாமை காலத்து இணைவைப்புக்கு சாட்சியாக விளங்கியது.
லாத், ஸாத், உஸ்ஸா போன்ற பெண் தெய்வ சிலைகளை வடித்து அவை இறைவனின் பெண் மக்கள் என்று அஞ்ஞான கருத்தில் அரபிகள் மூழ்கியிருந்தனர். இறைவனின் பணியாட்களான வானவர்களையும் இவர்கள் இறைவனின் பெண் குழந்தைகளாக கருதி வந்தனர். இவற்றை, இறைவனுக்கும் இறையடியார்களுக்கும் மத்தியில் சிபாரிசு செய்யும் தரகர்களாக பாவித்தனர். இவை மூலம் இறையருளைப் பெறலாம் என நம்பினர்.
அகிலங்களின் அதிபதியான இறைவனின் புனித சந்நிதி சாதாரண மனிதர்கள் சென்றடைய முடியாத அளவுக்கு வெகுதொலைவில் உள்ளது. அங்கு இறைஞ்சுதல் சென்று சேர்வதும் பிறகு அவற்றுக்கு பதில் கிடைப்பதும் சிரமம்.தங்கள் தெய்வங்களையோ அல்லது தூய ஆன்மாக்களின் துணையையோ தேடாதவரை, மேலூலகம் வரை நேர்ச்சைகளையும் வேண்டுதல்களையும் கொண்டு சேர்க்கும் வழிவகை அறிந்த மத குருக்களின் சேவைகளைப் பெறாதவரை எந்தவிதத்திலும் சாத்தியமில்லை என்று மக்கத்து இணைவைப்பாளர்கள் கற்பனைக் கருத்தை உருவாக்கியிருந்தனர்.
இறைவன் மனிதனின் பிடரி நரம்பைவிட அருகில் இருப்பவன். அவன் எல்லோருடைய இறைஞ்சுதல்களையும் செவிமடுப்பவன். அதற்கு உடனுக்குடன் பதிலளிப்பவன். இறைவனின் கருணைவாசல் எல்லா மனிதருக்கும் திறந்தேயிருக்கிறது. இதில் இடைத்தரகர்களிடம் போய் பரிந்துரை பெற வேண்டியதில்லை!
உண்மை இவ்வாறு இருக்க மக்கத்து அரபு மக்கள் பேரிருளிலேயே தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.
ஆண் தெய்வங்களைவிட பெண் தெய்வங்களை அதிகமாக வழிபட்டவர்கள் தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகள் மட்டும் உயிருடன் விடுவதில்லை. சிசுக் கொலைகள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருந்தன. பிறந் பெண் சிசுக்களை மண்ணில் புதைத்து கொன்று கொண்டிருந்த இரக்கமற்ற சமுதாயமாக திகழ்ந்திருந்தது மக்கா!
- பூக்கும்


