அழைப்பது நம் கடமை - 4, அன்றும் அப்படிதான் நடந்தது!



திரு நபிகளாரின் பள்ளிவாசல் அது!

அன்பு நபிகளாரும், அருமைத் தோழர்களும் அங்கு குழுமியிருந்தார்கள். 

அப்போது, ஒரு கிராமப்புற அரபி பள்ளிவாசலுக்கு வந்தார். தொழுது முடித்ததும் வெளிப்பள்ளியில் சிறுநீர் கழித்தார்.

இதை நபித்தோழர்கள் கண்டார்கள்.

அவரைத் தடுக்க ஒருசாரரும், அவரை அடிக்க மற்றொரு சாரரும் ஓடினார்கள்.

"வேண்டாம்! அவரை விட்டுவிடுங்கள்!" - என்று நபிகளார் அவர்களைத் தடுத்தார்கள்.

அந்த கிராமவாசி சிறுநீர் கழித்து முடித்தார். 

அதன்பிறகு, அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளி தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தும்படி நபிகளார் அறிவுறுத்தினார்கள்.

கடைசியாக அந்த கிராமவாசியை தனிமையில் அழைத்து, "சகோதரரே, இது இறைவனின் இல்லம். தொழுகைக்காகவும், இறைவேதம் ஓதுவதற்காகவும், இறைநாமம் துதிப்பதற்கான இடம். இங்கு அசுத்தம் செய்யக்கூடாது!" - என்று அறிவுறுத்தினார்கள். (புகாரி)

தவறு செய்தவர் ஒரு கிராமவாசி.

நீண்ட பயணத்திலிருந்து வந்திருப்பவர். 

இயற்கைத் தேவைக்கான அவசரம்.

அதனால், 'தான் என்ன செய்கிறோம்?' - என்று தெரியாமல் தவறு செய்கிறார்.

அவரது அவசரத் தேவையில் குறுக்கிடுவது உடல் நலத்தைப் பாதித்துவிடும். எனவே, தேவை முடியும்வரை நபிகளார் காத்திருக்கிறார்கள். 

அதன்பிறகு அசுத்தத்தை நீக்குவதற்கான 'மாற்றுவழி ஒன்றையும்' - ஒரு வாளி தண்ணீர் ஊற்றுவதன் மூலமாக - கற்றுத் தருகிறார்கள்.

அதேபோல, தவறு செய்த மனிதரை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தாமல் தனிமையில் அறிவுறுத்துகிறார்கள். தவறு செய்பவர் எதிர்மறை சிந்தனை கொள்ளாதவாறு செய்யும் பக்குவமான அறிவுரை அது. "ச்சே என்ன முட்டாள் தனம் செய்துவிட்டேன்!" - என்று தன்னைத் தானே நொந்து கொண்டு அடுத்தமுறை தவறு செய்வதற்கு முற்படாத நிரந்தரமான மனமாற்றத்தக்கு வழிகோலும் அறிவுரை!

இஸ்லாமிய அழைப்புக்கு அடித்தளமிடும் இறைமறையின் திருவசனம் இது:

"நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவ வேண்டும். தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்" (திருக்குர்ஆன் -3:104)

- இறைவன் நாடினால்.. அழைப்பியல் தொடரும்.

Related

அழைப்பியல் 3615935094590732442

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress