பாலைமலர்: இதழ் 4, அறியாமை இருளில் மக்கா!



உச்சிப் பொழுது. தக தகக்கும் வெய்யில் நேரம். பூமி தீய்ந்து விட்டதோ என எண்ணும் அளவுக்கு பாலைவெளியில் கோடுகளாக கானல் அலைகள்!

இந்நிலையில் குறைஷியரின் ஆடுகள் மேய்க்கும் இளைஞன் ஓடோடி வந்தான்; மேல் மூச்சு.. கீழ் மூச்சு வாங்க. கண்களில் வியப்பு கொப்பளிக்க.

"நான் ... நான் இன்று ஒரு அதிசயக் காட்சியைக் கண்டேன்!"

தொடர்ந்து பேசமுடியவில்லை. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சொன்னான்: "காட்டில் நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். அப்துல் முத்தலிபின் மகன் அப்துல்லாஹ் எங்களை கடந்து சென்றார். சரியான வெய்யில் கொளுத்தோ கொளுத்து என்று கொளுத்திக் கொண்டிருந்தது. வானத்தில் சுத்தமாக ஒரு மேகமும் இல்லை. அப்போதுதான் அது நடந்தது!"

சற்று மூச்சு வாங்கியவன் தொடர்ந்தான்: "ஆம் என் கண்களாலேயே நம்ப முடியவில்லை. அப்துல்லாஹ்வின் தலைக்கு மேல், மேகத்தின் நிழல் படர்ந்தவாறே இருந்தது. அதுவும் அவர் நடக்க நடக்க குடையைப் போல மேகமும் போய்க் கொண்டிருந்தது. இதை சொல்லவே நான் ஓடிவந்தேன்!"

ஆட்டு இடையன் ஓடிவந்த வேகம் கண்டு என்னவோ ஏதோ என்று மக்கள் சூழ்ந்து கொண்டது நிஜம்தான்! ஆனால், அவன் சொன்ன செய்தி அவர்களை சிரிக்க வைத்தது. 

"ஆடு மேய்ப்பவன் ஏதோ கனவு கண்டு வந்திருக்கின்றான்!" - என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல இன்னொருவர், 

"இல்லையில்லை! வெய்யில் இன்றைக்கு சற்று அதிகம்தான்! அதனால் அவன் கண்கள் இருண்டு போய் மேகமாக ... நிழலாக தெரிந்திருக்கும்!" - என்று சொல்லி கேலியாக சிரித்தார்.



ஆட்டு இடையனுக்கு கோபம் வந்துவிட்டது.

"சிரியுங்கள்.. சிரியுங்கள்.!! நான் கண்டது கனவல்ல. உண்மைதான். என் கண்கள் இருளவில்லை. ஏமாற்றவுமில்லை! நீங்கள் நம்பாவிட்டால்... கஅபாவின் திரைச் சீலையை பிடித்தும் சத்தியம் செய்ய நான் தயார்!அல்லது  லாத், உஸ்ஸாவின் கால்களைத் தொட்டும் சத்தியம் செய்யத் தயார்!" - என்றான் உறுதியாக!

இதைக் கேட்டு கும்பலில் நின்றிருந்த ஒரு மூதாட்டி, "போடாப்போ! போக்கற்றவனே! அப்துல்லாஹ்வின் தலைக்கு மேகம் நிழலிட்டதாம்! கூடவே நகர்ந்ததாம்! நமது தெய்வங்கள் லாத், உஸ்ஸாக்களே வெப்பத்தினால்.. தீய்ந்து கொண்டிருக்க அப்துல்லாஹ்வுக்கு மேகம் குடை பிடித்ததாம். 

சக்தி வாய்ந்த தெய்வங்கள் நம் பிரார்த்தனைகளை கேட்கின்றன.! அவை நம் பிரார்த்தினைகளை கேட்பதோடு நில்லாமல் அவற்றை இறைவனிடம் முறையிட்டு சிபாரிசும் செய்கின்றன. அதனால், நம் பயிர் பச்சையெல்லாம் வளமாக கொழிக்கின்றன. தாயிப் தோட்டங்களும் காய்த்து குலுங்குகின்றன. எதிரிகளுடனான போர்களின் போதும், நம் தெய்வங்களே நமக்குத் துணை நிற்கின்றன. அப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த நம் தெய்வங்களைவிடவா அப்துல்லாஹ் உயர்ந்து விட்டார்!  நேற்று பிறந்த பொடியன் நீ! உன் பேச்சை அறிவாளிகளான எங்களை கேட்கச் சொல்கிறாயா? - என்று கோபமாகச் சொன்னவள், 

போங்கள் இங்கிருந்து.. இவனுக்கு வேறுவேலை இல்லை!" -  என்று சொன்னதும் சிரித்துக் கொண்டே கூட்டம் கலைந்து சென்றது.




- இறைவன் நாடினால்.. பூக்கும்

Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 600464112204045335

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress