அழைப்பது நம் கடமை - 5, படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு
https://udayathaaragai.blogspot.com/2012/12/5.html
இந்த பூ உலகுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர் அவர். ஆதி பிதா ஆதம் நபிக்குப் பிறகு அனுப்பப்பட்டவர். 950 ஆண்டுகள் இறைவனின் பக்கம் மக்களை தொடர்ந்து அழைத்தவர்.
அவர்தான் நூஹ் நபி!
நூஹ் நபி, "இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியாதீர்கள். இறைவனுக்கு இணைதுணை கற்பிக்காதீர்கள்!"-என்றே தமது அழைப்பாக மனிதகுலத்துக்குச் சமர்பித்தார்.
"அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணிய வேண்டாம்!" - என்பதே எல்லா இறைத்தூதர்களின் அழைப்பின் சாரமாகும்.
திருக்குர்ஆன் சொல்கிறது: "நாம் ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒரு தூதரை அனுப்பினோம். மேலும், அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! தாஃகூத்துக்கு அடிபணிவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!"-என்று (அவரின் வாயிலாக அனைவரையும்) எச்சரித்தோம்!" (திருக்குர்ஆன் - 16:36)
இன்னும் இறைவன் கூறுகின்றான்: "உமக்கு முன்னர் நாம், நம்முடைய எத்தனை தூதர்களை அனுப்பியிருந்தோமோ அவர்கள் அனைவரிடத்திலும் நீர் கேட்டுப் பாரும்: 'கருணை மிக்க ஏக இறைவனைத் தவிர வழிபடுவதற்கு வேறு கடவுளரை நாம் நியமித்திருந்தோமா, என்ன?" (திருக்குர்ஆன் - 43:45)
நூஹ் நபியின் தெளிவான அழைப்பு இது: "அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியாதீர்கள்!'-என்று நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன். (இல்லையானால்) துன்புறுத்தும் நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்று நான் அஞ்சுகின்றேன்!". (திருக்குர்ஆன் - 11:26)
நூஹ் (அலை) அழைத்தார்: "என் சமூகத்தினரே, நான் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர் ஆவேன். (நான் உங்களுக்கு இதனை உணர்த்துகின்றேன்) அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனுக்கே அஞ்சுங்கள்" (திருக்குர்ஆன் - 71:2,3)
நூஹ் நபி தமது சமூகத்தினரை இறைவனின் பக்கம் பெரும் முயற்சி மேற்கொண்டு அழைத்தார். இரவு-பகல் பாராமல்... தனிமை - வெளிப்படை என்று தயங்காமல் தமது அழைப்பைத் தொடர்ந்தார். ஆனாலும் அவரது சமூகத்தார் அவரது அழைப்பை ஏற்கவில்லை. அவர்கள் வழிகேட்டிலேயே மூழ்கியிருந்தார்கள். நூஹ் நபியையும் அவரது தோழர்களையும் எதிரிகளாகவே கருதினார்கள். அவர்கள் மீது கடும் பகைமைக் கொண்டார்கள்.
சமூகத் தலைவர்கள் வெளிப்படையாகவே இப்படி சொன்னார்கள்: "அதற்கு அவருடைய சமூகத் தலைவர்கள் பதில் கூறினார்கள்: 'நீர் வெளிப்படையான வழிகேட்டில் மூழ்கியிருப்பதையே நாங்கள் காண்கின்றோம்" (திருக்குர்ஆன் - 7:60)
அதற்கு நூஹ் நபி பதில் அளித்தார்: "என்னுடைய சமூதாயத்தவரே! நான் எந்த வழிகேட்டிலும் மூழ்கியிருக்கவில்லை. நான் அகிலத்தாருடைய அதிபதியின் தூதனாக இருக்கின்றேன். நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். உங்களுடைய நலன் நாடுபவனாகவும் இருக்கின்றேன். மேலும், நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நான் அறிகின்றேன்" (திருக்குர்ஆன்-7:61,62)
மனிதராக இருப்பவர் இறைத்தூதராக இருக்க முடியாது என்ற தவறான கருத்தையம் சமூகத்தார் இவர் முன் வைக்கிறார்கள்.
"எங்களுடைய பார்வையில் நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை! மேலும், எங்களிடையே யார் மிகவும் இழிவானவர்களோ அவர்கள் மட்டுமே சிந்திக்காமல் உம்மைப் பின்பற்றுவதைப் பார்க்கின்றோம். ஆக, எங்களைவிட எவ்வித சிறப்பும் உமக்கு இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உண்மையில், உங்களைப் பொய்யர் என்றே நாங்கள் கருதுகின்றோம்!" (திருக்குர்அன் - 11:27)
இதற்கு நூஹ் நபி இப்படி அழகான பதில் சொன்னார்: "என் சமுதாயத்தினரே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நான் என்னுடைய அதிபதியிடமிருந்து தெளிவான சான்றினைப் பெற்றுள்ளேன். மேலும், அவன் தனது தனிப்பட்ட அருளையும், எனக்கு வழங்கியுள்ளான். ஆனால், அது உங்கள் பார்வைக்குப் புலப்படுவதில்லை. நீங்கள் அதனை ஏற்றுக் கொள்வதில்லை எனில் நாம் அதனை வலிந்து உங்கள் மீது திணிக்க முடியுமா? (திருக்குர்அன்-11:28)
--- அழைப்பது தொடரும்
"எங்களுடைய பார்வையில் நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை! மேலும், எங்களிடையே யார் மிகவும் இழிவானவர்களோ அவர்கள் மட்டுமே சிந்திக்காமல் உம்மைப் பின்பற்றுவதைப் பார்க்கின்றோம். ஆக, எங்களைவிட எவ்வித சிறப்பும் உமக்கு இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உண்மையில், உங்களைப் பொய்யர் என்றே நாங்கள் கருதுகின்றோம்!" (திருக்குர்அன் - 11:27)


