ஒரு சொல்: 'இறைநம்பிக்கை உயிரைவிட மேலானது என்றால்..'
https://udayathaaragai.blogspot.com/2013/09/blog-post_26.html
எந்த அறிவு குறித்து இதுவரை பார்த்தோமோ, அந்த அறிவின் அடிப்படையில்தான் நீங்களும், உங்கள் குழந்தைகளும்
முஸ்லிம்களாக முடியும்; முஸ்லிம்களாக இருக்கவும் முடியும். அலட்சியம் செய்யும் அளவுக்கு
இது அப்படியொன்றும் சாதாரண விவகாரமல்ல.
நீங்கள் உங்கள்
வயல்களை கண்காணிப்பதில் அலட்சியம் காட்டுவதில்லை. வயலுக்கு நீர் பாய்ச்சுவது, பயிரைப்
பாதுப்பது போன்ற பணிகளை நீங்கள் அசட்டை செய்வதில்லை.
உங்களுடைய தொழில், அலுவல்களில் அலட்சியம் செய்வதில்லை. ஏனென்றால்.. இவற்றை நீங்கள்
அலட்சியம் செய்தால், பட்டினி கிடந்து செத்துப் போய் விடுவீர்கள். உயிர் வீணாகிவிடும்.
அப்படியானால்,
நீங்கள் முஸ்லிமாவதற்கும் முஸ்லிமாய் இருப்பதற்கும் அடிப்படையான அறிவின் விஷயத்தில் ஏன்
அலட்சியம் செய்கிறீர்கள்? ஈமான் – இறைநம்பிக்கை என்னும் சிறந்த பொருள் வீணாகிவிடுவதற்கான
வாய்ப்பு இதில் இல்லையா? ஈமான் உயிரைவிட மேலான ஒன்றல்லவா? உயிரைப் பாதுகாக்கக்கூடிய
பொருளுக்காக நீங்கள் எவ்வளவு நேரத்தையும், வலிமையையும் செலவு செய்கிறீர்களோ அந்த நேரத்திலும்
வலிமையிலும் பத்தில் ஒரு பகுதியை ஈமானுடைய பாதுகாப்புக்காக உங்களால் செலவு செய்ய முடியாதா?
இதற்காக உங்களில்
ஒவ்வொருவரும் மௌலவியாகி – அறிஞராகி பெரிய.. பெரிய நூல்களைப் படிக்க வேண்டும் என்றோ,
உங்கள் வாழ்நாளில் பத்து, பன்னிரண்டு ஆண்டுகளைக் கல்விக்காக செலவிட வேண்டும் என்றோ
சொல்லவில்லை. நீங்கள் முஸ்லிமாவதற்க இவ்வளவு
தூரம் படிக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: உங்களில்
ஒவ்வொருவரும் இரவு பகல் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரத்தை மார்க்க அறிவு பெறுவதற்காக
செலவிடுங்கள்.
திருக்குர்ஆன்
எந்த நோக்கத்திற்காக, எந்த அறிவுரையைக் கொண்டு வந்திருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து
கொள்ளுங்கள். நபி பெருமானார் எதை அழித்து அதன் இடத்தில் எதை நிலைப்படுத்துவதற்காக வந்தார்கள்
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். முஸ்லிம்களுக்காக இறைவன் வகுத்துக் கொடுத்த தனிப்பட்ட வாழ்க்கை நெறி
எது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! முஸ்லிம்களான சிறுவர், இளைஞர் மற்றும் முதியோர் ஒவ்வொருவரும்
குறைந்தபட்சம் இந்த அளவாவது அறிந்து கொள்வது அவசியம்.
'ஈமான்' எனப்படும்
இறைநம்பிக்கை என்பது உயிரைவிட மேலானது என்றால்.. அதற்காக நாளொன்றுக்கு ஒரு மணி நேரம்
செலவிடுவது கடினமாதல்ல.
- மெளலானா மௌதூதி (ரஹ்)

