ஒரு சொல்: 'அநீதியாளனா இறைவன்?'
https://udayathaaragai.blogspot.com/2013/09/blog-post_28.html
முஸ்லிமை அதாவது
இறைநம்பிக்கையாளனை இறைவன் விரும்புகின்றான். 'காஃபிரை' அதாவது சத்தியத்தை ஏற்க மறுத்து மனதுக்கு
திரையிட்டுக் கொண்ட இறைமறுப்பாளரை இறைவன் வெறுக்கின்றான். முஸ்லிமுக்கு இறைவனினிடம்
மன்னிப்பு கிடைக்கும். நிராகரிப்பாளனுக்கோ மன்னிப்பு கிடைக்காது. முஸ்லிம் சுவனம் புகுவான்.
நிராகரிப்பாளனோ நரகில் நுழைவான்.
முஸ்லிம் எனப்படும்
இறைநம்பிக்கையாளனுக்கும் – காஃபிர் எனப்படும் இறைநிராகரிப்பாளனுக்கும் இடையில் இவ்வளவு
பெரிய இடைவெளி எப்படிதான் ஏற்படுகிறது?
நீங்கள் மட்டுமல்ல
மற்ற சமயங்களைப் பின்பற்றும் மனிதர்கள் அனைவரும் ஆதிபிதா ஆதம் நபி அவர்களின் சந்ததியினர்தான்.
நீங்கள் எப்படி மனிதராக வாழ்கிறீர்களோ.. அவர்களும் அப்படிதான் வாழ்கிறார்கள்.
உங்களைப் போலவே அவர்களுக்கும் கை, கால், கண், காது என்று எல்லா அவயங்களும் உள்ளன. நீங்கள் சுவாசிக்கும் காற்றைத்தான் அவர்களும் சுவாசிக்கிறார்கள். நீங்கள் குடிக்கும்
நீரைத்தான் அவர்களும் அருந்துகிறார்கள். இதே பூமியில்தான் வசிக்கிறார்கள். உங்களைப் போலவே உணவுப் பொருட்களையும் உண்கிறார்கள். ஒரே மாதிரியான
பிறப்பு. ஒரே மாதிரியான இறப்பு. உங்களைப் படைத்த இறைவன்தான் அவர்களையும் படைத்திருக்கின்றான்.
இப்படியிருக்க, அவர்களின் தகுதி கீழாகவும், உங்களின் தகுதி மேலாகவும் இருக்கும் காரணம்தான்
என்ன? உங்களுக்கு சொர்க்கம் ஏன் கிடைக்க வேண்டும்? பாவம்! அவர்கள் கொடும் நரகில் ஏன்
தள்ளப்பட வேண்டும்?
இது சிந்திக்க
வேண்டிய பிரச்னை!
நீங்கள் 'அப்துல்லாஹ்'
என்றோ, 'அப்துர்ரஹ்மான்' என்றோ அழைக்கப்படுகிறீர்கள். அவர்களில் சிலர் 'தீனத்தயாளன்' என்றோ,
'கேண்டா சிங்' என்றோ அல்லது 'ராபர்ட் சன்' என்றோ அழைக்கப்படுகிறார்கள். பெயரளவிலான இந்த
அடிப்படையில் மட்டுமே ஒரு மனிதருக்கும் மற்றொரு மனிதருக்கும் மலைக்கும் – மடுவுக்கும்
இடையில் உள்ள வேற்றுமை ஏற்பட முடியுமா?
அதேபோல, நீங்கள்
'விருத்தசேதனம்' என்னும் ‘கத்னா’ செய்து கொள்கிறீர்கள். இறைச்சி சாப்பிடுகிறீர்கள். மற்றவர்களோ
இதை செய்து கொள்ளவில்லை என்பதற்காகவும், உணவு வகைகளில் ஒன்றை சாப்பிடவில்லை என்பதற்காகவும்
இவ்வளவு பெரிய வேற்றுமை ஏற்பட சாத்தியம் உண்டா?
கருணையே வடிவான
இறைவன், எல்லா உயிரினங்களின் படைப்பாளன். எல்லா உயிர்களுக்கும் உணவளித்து பரிபாலிப்பவன்.
தனது படைப்புகளிடம் பேரன்புடைய அவன் ஒரு மிக மிக சாதாரண காரிய – காரணங்களுக்காக ஒருவரை சுவனத்திலும் மற்றொருவரை நரகிலும் அனுப்பும் அநீதியை ஒருநாளும் செய்யமாட்டான்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

