ஒரு சொல்: 'பெருங் கவலையோடு சிந்திக்க வேண்டிய பிரச்னை'
https://udayathaaragai.blogspot.com/2013/10/blog-post_4.html
முஸ்லிமுக்கும், நிராகரிப்பாளனுக்கும் இடையில் இருக்கும் வேற்றுமை எல்லாம் அறிவையும், செயலையும் அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். நிராகரிப்பாளன் பெற்றிருப்பது போன்றே அறிவைப் பெற்றிருக்கும் ஒருவன், தன்னைத் தானே முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால்.. அவன் பொய் சொல்வதாய்தானே பொருள்?
நிராகரிப்பாளன் திருக்குர்ஆனை ஓதுவதுமில்லை; அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உணர்வதுமில்லை. ஒரு முஸ்லிமுடைய நிலையும் இதுதான் என்றால்.. அவனை எப்படி முஸ்லிம் என்று சொல்ல முடியும்? 'நபி பெருமானார் அவர்கள் என்ன அறிவுரை கூறினார்கள்? இறைவனின் அண்மையைப் பெற திருநபிகளார் காட்டிய நேரான பாதை எது?' - என்பதை நிராகரிப்பாளன் அறிந்து கொள்ளவில்லை. ஒரு முஸ்லிமும் இதே நிலையில்தான் இருக்கிறான் என்றால் அவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?
நிராகரிப்பாளன் இறைவனுடைய உவப்புக்கு மாறாகத் தன்னுடைய உவப்பையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்கிறான். ஒரு முஸ்லிமும் இப்படித் தான்தோன்றியாக இருக்கிறான். தன்னுடைய மன இச்சைகளையும், ஆசைகளையும் பின்பற்றி நடக்கிறான். இறைவனைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய ஆசைகளுக்கு அடிமையாயும் வாழ்கிறான் என்றால் அவன் தன்னைத்தானே முஸ்லிம் என்று எப்படி சொல்லிக் கொள்ள முடியும்? இறைவனுடைய கட்டளைக்கு அடிப்பணிந்து நடப்பவன் என்று பிரகடனப் படுத்திக் கொள்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?
நிராகரிப்பாளன் 'ஹலால்' - அனுமதிக்கப்பட்டவற்றுக்கும், 'ஹராம்' - தடுக்கப்பட்டவற்றுக்கும் இடையில் வேற்றுமை பார்ப்பதில்லை. எந்தச் செயலில் தனக்கு நன்மையும், இன்பமும் இருக்கின்றனவோ அதனையே அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். அது இறைவனிடத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி அல்லது இறைவனிடத்தில் தடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரியே! இதே நடத்தை ஒரு முஸ்லிமிடமும் காணப்பட்டால்.. அவனுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?
ஆக நிராகரிப்பாளனைப் போலவே ஒரு முஸ்லிமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவு பெறாதிருந்தால்... நிராகரிப்பாளன் செய்வது போன்ற செயல்களையே அவனும் செய்தால்... நிராகரிப்பாளனைவிட அவனுக்கு எப்படிச் சிறப்புக் கிடைத்திட முடியும்? மறுமையில் நிராகரிப்பாளன் எப்படி எழுப்பப்படுவானோ அப்படியே இந்த முஸ்லிமும் எழுப்பப்படாமலிருக்க என்ன நியாயங்கள் இருக்கின்றன? நாம் அனைவரும் அமைதி நிறைந்த உள்ளத்தோடு, பெருங் கவலையோடு சிந்திக்க வேண்டிய பிரச்னை இது.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

