ஒரு சொல்: 'வாய்மையுடன் ஏற்றுக் கொள்வீர்!'
https://udayathaaragai.blogspot.com/2014/01/blog-post.html
நீங்கள் இந்தக் கேள்வியை நிச்சயம் கேட்பீர்கள்:
"நாங்கள் கலிமா தய்யிபாவை ஏற்றுக் கொண்டவர்கள்தாம். இருந்தும், நாங்கள் பூப்பதுமில்லை; காய்ப்பதுமில்லையே? (வளமாக இல்லையே) கெட்ட கலிமாவை ஏற்றுக் கொண்டிருக்கிற மற்றவர்கள் ஏன் பூத்துக் காய்த்துக் கொண்டிருக்கிறார்கள்?"
இதற்கு பதில் சொல்வது என்னுடைய பொறுப்பு. அதுவும் ஒரு நிபந்தனையின் பேரில்தான் பதில் கொடுப்பேன். உங்களில் யாரும் என்னுடைய பதிலைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. என்னுடைய பதில் உண்மையில் சரியானதுதானா? என்று உங்கள் உள்ளத்தை கேட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.
"நாங்கள் 'கலிமா தய்யிபா'வை ஒப்புக் கொண்டிருந்தும் பூக்கவுமில்லை; காய்க்கவுமில்லை (வளமாக இல்லை)" - என்று நீங்கள் சொல்வதே முதலில் தவறு.
கலிமா தய்யிபாவை ஒப்புக்கொள்வது என்றால் அதனை வாயால் சொல்வது என்று பொருளல்ல. உள்ளத்தால் ஏற்றுக் கொள்வது என்பதுதான் அதன் பொருள் அதாவது அதற்கு முரண்பட்ட எந்தக் கொள்கையும் உங்கள் உள்ளத்தில் இல்லாதபடி, அதற்கு முரண்பட்ட எந்தச் செயலும் உங்களிடமிருந்து வெளிவர முடியாதபடி அதனைக் ஏற்றுக் கொள்வது என்பதுதான் பொருள்.
சகோதரர்களே, இறைவனுக்கு அஞ்சி என்னிடம் சொல்லுங்கள், உண்மையில் உங்கள் நிலை இதுதானா?
- கலிமா தய்யிபாவுக்கு முற்றிலும் முரண்பட்ட வித்தில் இணைவைப்பும், இறைமறுப்பும் கலந்த நூற்றுக்கணக்கான எண்ணங்கள் உங்களிடையே பரவவில்லையா?
- முஸ்லிம்களின் சிரம் இறைவன் அல்லாத மற்றவர்கள் முன் பணியவில்லையா?
- முஸ்லிம்கள் அல்லாஹ்வைவிட்டு மற்றவர்களுக்குப் பயப்படவில்லையா?
- அவர்கள் மற்றவர்களின் உதவியையும் நம்பவில்லையா?
- மற்றவரைத் தமக்கு உணவளிப்பவர் என்று அவர்கள் நினைக்கவில்லையா?
- இறைவனின் சட்டத்தைவிட்டு விட்டு மற்றவரின் சட்டத்தை அவர்கள் மனப்பூர்வமாக பின்பற்றவில்லையா?
- தம்மை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று, "நாங்கள் ஷரீஅத் சட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை; சம்பிரதாயங்களையும், பழக்கவழக்கங்களையுமே ஏற்றுக் கொள்கிறோம்!" - என்று சொல்வதில்லையா?
- உலக நன்மைக்காக, இறைவனுடைய சட்டத்தை முறிக்கச் சிறிதும் தயங்காதவர்கள் உங்களிடையே இல்லையா?
- இறைவனுடைய கோபத்துக்கு அஞ்சாமல், இறைமறுப்பாளர்களின் கோபத்துக்கு அஞ்சுகிறவர்கள், இறைவனுடைய தயவைப் பெறுவதற்கு எவ்வித முயற்சியும் செய்யாமல், இறைமறுப்பாளர்களின் தயவைப் பெறுவதற்கு எதையும் செய்யத் தயாராயிருப்பவர்கள் உங்களில் இல்லையா?
- இறைமறுப்பாளர்களின் ஆட்சியையே ஆட்சியாக நினைத்துக் கொண்டு இறைவனின் ஆட்சி ஒன்று இருக்கிறதே என்று கவலையே படாதவர்கள் உங்களில் இல்லையா?
இறைவனுக்கு அஞ்சி உண்மையைச் சொல்லுங்கள், இவையெல்லாம் உண்மைதான் என்றால்.. பின்னர் எந்த முகத்தோடு, "நாங்கள் கலிமா தய்யிபாவை ஏற்றுக் கொண்டிருந்தும். செழித்தோங்கவில்லை!" - என்று நீங்கள் சொல்கிறீர்கள்?
என்னருமை சகோதரர்களே, முதலில் வாய்மையுடன் கலிமாவை ஏற்றுக் கொண்டு அதற்கு இணக்கமான வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, பூமிக்கு அடியில் ஆழமாக வேர் பாய்ச்சும், விண்ணளாவிய அந்த விருட்சம் வளராவிட்டால், உங்கள் இறைவனைப் பொய்யன் என்றும், அவன் பொய்யான செய்தியைக் கொண்டு உங்களை நிம்மதியில் ஆழ்த்தியிருக்கிறான் என்றும் (இப்படிப்பட்ட எண்ணங்களிலிருந்து இறைவன் நம்மைக் காப்பானாக!) நினைத்துக் கொள்ளுங்கள்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

