ஆன்மிகச் சிந்தனை: 'இறைவன் வெட்கப்படுகிறான்'
https://udayathaaragai.blogspot.com/2014/02/blog-post_15.html
வானமெங்கும் அளந்திடத் துடிப்பவன்.. பூமி முழுவதையும் அகழ்ந்திடத் துடிப்பவன்.. நீரா..? நிலமா..? கவலையில்லை..! என ஆர்ப்பரித்து பல உண்மைகளை அறிவியல் ஒளியில் உலகுக்கு புலப்படுத்தி வரும் வல்லமை பொருந்தியவன் மனிதன். இது அவனுடைய பலம்!
உயிர் இழப்புகள், பொருளாதார நஷ்டங்கள், பூசல் - பிணக்குகள் என்று பிரச்னைகளால் அலைகழிக்கப்படும்போது, சோர்ந்து விடுபவன். தன்னை மீறிய ஏதோ ஒரு சக்தி இருப்பதை உணர்ந்து அதை சரணடைபவனும் அதே மனிதன்தான். இது அவனுடைய பலவீனம்!
தன்னுடைய பலம், பலவீனம் இவைகளை சரியான முறையில் உணர்ந்துக் கொண்டு அதனடிப்படையில் வாழும் போதுதான் இப்பூ உலகில் மனிதனால் அமைதியை நிலைநாட்டிட முடியும்.
சாதாரண பிரச்னைகள் எதிர்படும்போது அடுத்தவரின் துணையை, உதவியை நாடுவது மனித இயல்பு. மனித சக்திக்கும், சிந்தனைக்கும் அப்பாற்பட்ட எத்தனையோ பிரச்னைகள் வாழ்க்கை அரங்கில் எதிர்படவே செய்கின்றன. அந்நிலையில், இறைவனிடம் இறைஞ்சி நிற்பதால் மனித மனம் அமைதி அடைகிறது. இதையே திருக்குர்ஆன், "அறிந்து கொள்ளுங்கள்! இறைவனை நினைவு கூர்வதில்தான் உள்ளங்கள் நிம்மதி அடைகின்றன" (13:28) என்கிறது.
"அடியான் கையேந்தி இறைவனிடம் இறைஞ்சும்போது அவனை வெறுங்கையுடன் அனுப்புவதற்கு இறைவன் வெட்கப்படுகின்றான்!" - என்று கூறும் அண்ணல் நபி அவர்கள்,
"பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்வதில் சிறிது தாமதமானாலும் அடியான் அவசரப்படக்கூடாது. ஏனெனில், பிரார்த்திப்பவன் கேட்பதையே சில நேரங்களில் இறைவன் கொடுக்கின்றான். சில நேரங்களில், அதைவிட சிறந்ததையும் கொடுக்கிறான் அல்லது பிரார்த்தனையைக் கொண்டு அடியானுக்கு வர இருக்கும் ஆபத்துக்களை நீக்குகிறான்!" - என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
இறைவனும் தன் அடியார்களுக்கு இப்படி உறுதி அளிக்கின்றான்: "நிச்சயமாக நான் அவர்களுக்கு அருகிலேயே இருக்கிறேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவரின் அழைப்புக்கு மறுமொழி சொல்கிறேன்!" (2:186)
- (தினமணி ஆன்மிகச் சிந்தனைப் பகுதியில் 16.12.1992 பிரசுரமானது)
