ஆன்மிகச் சிந்தனை: 'குழந்தையைத் தீயில் எறிவாளா?'
https://udayathaaragai.blogspot.com/2014/03/blog-post_29.html
ஒருமுறை.
நபி பெருமானாரின் திருச் சமூகத்தில் சில போர்க் கைதிகள் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் கைக்குழந்தையைப் போர்முனையில் இழந்த பெண்ணும் ஒருத்தி.
தாய்ப்பாசத்தால், தவித்துக் கொண்டிருந்த அந்தப் பெண், தெருவில் செல்லும் குழந்தைகளையெல்லாம் 'தன் குழந்தை' என்று எண்ணி ஓடோடிச் சென்று அணைத்தவாறு இருந்தாள்.
இதைக் கண்ட நபிகளார் அப்பெண்ணைச் சுட்டிக் காட்டி, "இவள் தன் குழந்தையை தானே முன்வந்து சுயமாக நெருப்பில் எறிந்து விடுவாள் என்று எண்ணுகின்றீர்களா?" - என்று தம் தோழர்களிடம் கேட்டார்கள்.
"இல்லை.. இறைத்தூதரே! அவள் ஒரு காலமும் அப்படி செய்ய மாட்டாள். அத்துடன் எதேச்சையாய் குழந்தை நெருப்பில் விழவும் ஒப்பமாட்டாள்!" - என்றார்கள் தோழர்கள்.
"இந்தப் பெண்ணுக்கு தன் குழந்தையின் மீதுள்ள பாசத்தைவிட பன்மடங்கு பாசம் தன் அடியார்களிடம் இறைவனுக்கு உண்டு!" - என இறைவனின் கருணையையும், அவன் யாரையும் எளிதில் நரகில் எறிய மாட்டான் என்று இறைவனின் தயாள குணத்தையும் நபிகளார் விளக்குகிறார்கள்.
"இறைவனின் மன்னிப்பு.. வானங்கள் - பூமியின் அளவுக்கு விசாலமானது" (3:133) என்கிறது திருக்குர்ஆன்.
"பகலில் பாவம் புரிந்தோர் பாவமன்னிப்புக் கேட்டு அவர்கள் மன்னிப்பு பெரும்விதமாக இறைவன் தன் கரங்களை இரவில் விரித்திருக்கின்றான்.
இரவில் பாவம் புரிந்தோர் பாவமன்னிப்புக் கேட்டு அவர்களை மன்னிக்கும் விதமாக இறைவன் தன் கரங்களை பகலில் விரித்திருக்கின்றான்!" - என்று இறைவனின் கருணையையும், மன்னிக்கும் போக்கையையும் விளக்குகிறார்கள் அண்ணலார்.
- தினமணி, ஆன்மிகச் சிந்தனை பகுதியில் , 02.06.1995 அன்று பிரசுரமானது.