'நூற்றாண்டுகளை கடந்த அந்த தாக்கம்!'



இஸ்லாமிய சிந்தனையாளர், மூதறிஞர் மௌலான ஜமீல் அஹ்மது சாஹிப் அவர்களின் அழைப்பியல் உண்மைச் சம்பவங்களிலிருந்து..

மௌலானா எம்.ஏ.ஜமீல் அஹ்மது

 நீங்கள் அனைவரும் பிக்தாலின் பெயரை அறிந்தே இருப்பீர்கள். இவர் திருக்குர்ஆனை முதன் முதலில் ஆங்கில மொழியில் மொழிபெயர்த்த முஸ்லிம் அறிஞர் ஆவார். இவருக்கு முன்பு 'சேல்' (SALE), ராட்வெல்  (RODWELL) ஆகியோரின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் வந்துவிட்டன. ஆனாலும், ஒரு முஸ்லிம் செய்த மொழி பெயர்ப்பின் தகுதியின் அடிப்படையில் ஆங்கில உலகில் பிக்தாலின் மொழிபெயர்ப்பு முதல் இடத்தை வகிக்கிறது. இது கீழை நாடுகளிலும், மேலை நாடுகளிலும் மிகப் பிரபலமாக விளங்குகிறது. இதனை மக்கள் விரும்பி படிக்கிறார்கள். அதிலிருந்து பயனும் பெறுகிறார்கள். அதனால், ஈர்க்கவும் படுகிறார்கள்.



பிக்தாலின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை படித்து இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டோரின் பட்டியல் மிகவும் நீண்டது. இறைவன் நாடினால்.. மறுமைநாள்வரை அதன் ஈர்ப்பும் தொடரும்.

இப்படிப்பட்ட பிக்தால் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டது எப்படி என்பது தெரியுமா?

அப்போது பிக்தால் வெள்ளையர் அரசாங்கத்தில் வெளிவிவகாரத்துறையில் பணிபுரிந்து வந்தார். மத்திய கிழக்கத்திய நாடொன்றின் அதிகாரியாக பணியில் இருந்தார்.

ஒருநாள். பிக்தால் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார் அப்போது அவர் ஒரு விசித்திரமான காட்சியை காண நேர்ந்தது.


தெருவில் முதியவர் ஒருவர் ஆட்டு இடையரான இளைஞர் ஒருவரை கடுமையாக திட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கோபம் தாளாமல் அந்த இளைஞரை முதியவர் அடிக்கவும் செய்கிறார். ஏச்சு-பேச்சுகளோடு அடிகளையும் வாங்கிக் கொண்டு அந்த இளைஞன் அமைதியாக நின்றிருந்தான். நல்ல உடல்வாகுவும், வலிமையும் கொண்ட இளைஞன் முதியவர் ஒருவரிடம் அடிவாங்கிக் கொண்டிருந்தது பிக்தாலுக்கு வியப்பளித்தது.

மாடியிலிருந்து இறங்கிய பிக்தால் அந்த இருவரையும் அருகில் அழைத்தார். அவர்களின் பிரச்சனை குறித்து விசாரித்தார்.



அந்த படிப்பறிவற்ற ஆட்டு இடையனான பாமர இளைஞன் சொன்ன பதில் நம் அனைவருக்கும் படிப்பினை தரவல்லது. அது இதோ!

அந்த இளைஞன் பிக்தாலின் கேள்விக்கு அழகிய முறையில் இப்படி பதில் அளித்தான்.

"அய்யா, நான் இந்தப் பெரியவரிடம் சிறிது பணத்தை கடனாகப் பெற்றேன். இவருக்கு அளித்த வாக்குறுதியின்படி என்னால் பணத்தை செலுத்த முடியவில்லை. அதனால்தான் இவர் என்னை திட்டினார். அடித்தார்" என்றான்.

"இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே! வாங்கிய கடனை திருப்பித் தர கூடாது என்ற எண்ணமும் உனக்கில்லை. தந்துவிடுகின்றேன் என்று பெரியவரிடம் சொல்லி இதிலிருந்து தப்பித்திருக்கலாமே! நீ அடிவாங்கு வதிலிருந்து தப்பி இருக்கலாமே! பலமிருந்தும் கோழையைப் போல அடிவாங்குவதன் அவசியம் என்ன?" - என்றார் பிக்தால் வியப்புத்தாளாமல்.

அதற்கு அந்த இளைஞன் பதில் சொன்னான்: "இல்லை அய்யா, நபி பெருமானார் கட்டளையிட்டுள்ளார்கள், 'யாராவது கடனை வாங்கினால்... உரிய நேரத்தில் அதனை திருப்பிச் செலுத்துவது அவர்கள் மீது கடமையாகும். தவணை முடிந்துவிட்டால்.. கடன் அளித்தவருக்கு அதனைக் கேட்ட முழு உரிமை உள்ளது.

அதன்படி இப்போது நான் உரிய நேரத்தில் கடனைத் திருப்பி செலுத்தாத குற்றத்திற்கு ஆளாகி நிற்கின்றேன்.

ஏற்கனவே கடனை திருப்பிச் செலுத்தாத குற்றவாளியான நான் திரும்பவும் பாவம் இந்த பெரியவரை தாக்கி மேலும் இன்னொரு குற்றத்தை செய்த பழிக்கு ஆளாக வேண்டுமா?" - என்றான் எதேச்சையாக.


இந்த பதில் பிக்தாலின் உள்ளத்தில் பசுமையாக பதிந்து போனது.

பிக்தால் சிந்தித்தார்:

"பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி .. இன்றும்கூட மக்கள் உள்ளத்தில் ஆட்சி செய்கிறாரே! கல்வியறிவற்ற ஒரு பாமர இடையன் என்றைக்கோ அவர் இட்ட கட்டளைக்கு இன்றும் அடிபணிந்து நிற்கின்றானே! அந்த நபியின் போதனைகள்தான் என்ன? அவரது கொள்கை-கோட்பாடுகள் என்ன?"

இந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடிய தேடலில் இஸ்லாம் அவருக்கு பரிச்சயமானது. இறுதியில் இஸ்லாத்தைத் தழுவினார். திருக்குர்ஆனின் முதல் முஸ்லிம் மொழிபெயர்ப்பாளர் என்ற அந்தஸ்தையும், புகழையும் அவர் பெற்றார். அதுமட்டுமல்ல.. அந்த மொழிபெயர்ப்பின் பலனாய் பல்லாயிரக் கணக்கானோர் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கவும் காரணமானார்.

பிக்தாலின் இந்த முயற்சி.. அதனால் ஏற்பட்ட தாக்கம்.. மேலும் மறுமைநாள் வரை நீண்டு கொண்டே போகும். இந்த ஈர்ப்புகளுக்கெல்லாம் பிக்தால் ஒருவருக்கு மட்டும் இறைவன் நற்கூலி வழங்குவானா? அல்லது அந்த கல்வி அறிவற்ற ஆட்டு இடையனான பாமர இளைஞனுக்கும் சேர்த்து நற்கூலி வழங்குவானா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இறைத்தூதரின் ஒரு கட்டளையை பல நூற்றாண்டுகள் கடந்தும் நினைவில் வைத்து வாய்மையாக தன் வாழ்வில் பேணினானே.. அதனை செயல் வடிவில் வெளிப்படுத்தினானே அந்த இளைஞன் அவனுக்கும் அந்த நன்மைகளில் பங்குண்டா இல்லையா?

 நன்றி: சமரசம்

Related

அழைப்பியல் 3712207169096238330

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress