பாலை மலர் 18 - 'கண்ணை நான் பெற்றேன்! என்னுயிரை நான் இழந்தேனே!'



பொழுது புலர்ந்தது.

பனீ சஆத் விவசாயிகள் வயல்களுக்குச் சென்றபோது, அங்கும் அவர்களுக்கு அதிசயம் காத்திருந்தது. காய்ந்துபோன புதர்கள் எல்லாம் பசுமையாய் வளர்ந்திருந்தன. மொட்டை மரங்கள் துளிர் விட்டிருந்தன. விளைநிலங்கள் பச்சைப் பசேல் என்று செழிப்புடன் காணப்பட்டன. இதைக் கண்ட விவசாயிகள் மக்களிடம் வந்து பரபரப்புடன் சொன்னார்கள்:

“அற்புதத்தை கண்ணெதிரே காண விரும்புவோர் உடனே எங்களுடன் வரலாம். காய்ந்து கிடந்த நமது பயிர்கள் செழிப்புடன் வளர்ந்திருக்கும் அந்த கண்கொள்ளாக் காட்சியை காணலாம்!”

“இரவோடு இரவாக அப்படி என்னதான் நடந்தது?”

மக்கள் கூட்டங்கூட்டமாக நின்று பேசிக் கொண்டார்கள். முதியவர்கள், வாழ்க்கையில் பல அனுபவங்களைக் கண்டவர்கள் எல்லாம் தத்தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

ஆனால், “அந்த இரவின் மாயம்” மட்டும்.. யாருக்குமே விளங்கவில்லை.

“இறைவனின் அருட்பார்வை நம்மீது விழுந்துள்ளது போலும்!” – என்றார் ஒரு பழுத்த முதியவர்.

இன்னொருவரோ, “உண்மையை நான் சொல்கிறேன். ஹாரிதின் மனைவி ஹலீமா பாலூட்டி வளர்க்க மக்காவிலிருந்து ஒரு குழந்தையைக் கொண்டு வந்திருக்கிறாள். அந்தக் குழந்தையின் பெயர் முஹம்மது. இறைவனின் அருளைப் பெற்ற அந்தக் குழந்தை இங்கு வந்ததிலிருந்தே இத்தகைய பல அற்புதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகமிருந்தால்.. ஹாரிதையும், ஹலீமாவையும் வேண்டுமானால் கேட்டுக் கொள்ளலாம்!”- என்றார் முத்தாய்ப்பாக!

ஹலீமா தனது வளர்ப்பு மகனை கவனத்துடன் பார்த்துக் கொண்டார். குழந்தையை கண்ணும் – கருத்துமாய் பாலூட்டி சீராட்டி வளர்த்தார்.

“காக்கா.. கண்ணுக்கு மை கொண்டு வா!
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா!
கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா!”

- குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்.

“சாய்ந்தாடம்மா.. சாய்ந்தாடு!
சாயக்கிளியே சாய்ந்தாடு!
சோலைக்கிளியே சாய்ந்தாடு!
சுந்திர மயிலே சாய்ந்தாடு!
மணி விளக்கே சாய்ந்தாடு!
மாடப்புறாவே சாய்ந்தாடு!
கண்ணே மணியே சாய்ந்தாடு!”

- என்று மார்பில் இருத்தி உவகையடைந்தார்.

இரண்டு ஆண்டுகள் கழிந்தன.

ஆமினாவின் அனாதை மழலை பால்குடியை மறந்தது.

குழந்தையை எடுத்துக் கொண்டு ஹலீமா மக்கா சென்றார். மகனைக் கண்டதும் ஆமினா மகிழ்ச்சியால் பூரித்துவிட்டார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.



அப்துல் முத்தலிப்போ பேரக் குழந்தையை அள்ளி எடுத்து உச்சி மோந்தார். முத்தமாரி பொழிந்தார். “ம் … அப்துல்லாஹ்வுக்கு கொடுத்து வைக்கவில்லை!” – என்று பெருமூச்சுவிட்டார்.

தொற்று நோய்களால் மக்கத்து மக்கள் அதிகமாக துன்புற்றுக் கொண்டிருந்த நேரமிது. ஒவ்வொரு குடும்பத்தாரும் இளம் பிள்ளைகளை நோய்க்கு பலி கொடுத்த வண்ணமிருந்தனர். திகிலும், பீதியுமாய் மக்களது அன்றாட வாழ்க்கை கழிந்தது. நகரின் வெளியிலிருந்த இடுகாட்டில் அனுதினமும் புதிய மண்ணறைகள் (சமாதிகள்) தோன்றியவாறு இருந்தன.

“உயிர் எடுக்கும் வானவருக்கு (மலக்குல் மௌத்) மக்கா பிடித்துவிட்டது போலும்! அதனால்தான் நமது பிள்ளைகளை நம்மிடமிருந்து தினமும் பறித்துக் கொண்டிருக்கிறார்!”

அறியாமைக் காலத்து மக்காவாசிகள் மூடத்தனமாக பேசலாயினர். சிலர் தத்தமது குலத்தெய்வங்களான சிலைகள் முன்விழுந்து மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். சிரத்தையுடன் பூஜை – புனஸ்காரங்கள் புரிந்தனர்.

இன்னும் சிலரோ பல்வேறு வேண்டுதல்களை சமர்பித்தனர்.

நேர்ச்சைகள் என்ற பெயரில் கால்நடைகளை பலியிட்டனர்.

மந்திரிக்கப்பட்ட கயிறுகளை பிள்ளைகளுக்குக் கட்டினர்.

ஆனாலும், மரணமடைவோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் ஏறுமுகத்திலேயே இருந்தது. 


 - பூக்கும்.


Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 4652205196880558168

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress