பாலை மலர் 17 - 'பூரிக்க வைத்த அந்த பொன் சிரிப்பு!'


ஆமினாவிடம் குழந்தையைப் பெற்றுக் கொண்ட ஹலீமா மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

“முஹம்மத்..
என் கண்ணே..! கண்மணியே!
என் செல்வமே!
அப்துல்லாஹ்வின் அனாதை மைந்தனே!
ஆமினாவின் இதயமே!
அப்துல் முத்தலிபின் கனவு சிகரமே!
உம் சிங்காரச் சிரிப்பினில்..
நான் கனிந்துருகிவிடுவேனய்யா…!
உம் பொன்னான புன்சிரிப்பினில்..
நான் பூரித்துப் போவேனய்யா..!
உலகை மறந்து நான்
உம்மையே நினைக்கிறேன்..!
ஓ! அப்துல்லாஹ்வின்
அருமை மைந்தனே முஹம்மத்!”

கழுதையின் மீது சவாரி செய்து கொண்டிருந்த ஹலீமா மெய்மறந்து குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தார். 

அப்போது அந்த விந்தை நடந்தது.

“ஆங்..! என்ன இது? என்னவானது என் நோஞ்சான் கழுதைக்கு..?”

ஹலீமா கழுதையைப் பார்த்தார். அது ஏதோ புத்துயிர் பெற்றதுபோல வேகமெடுத்து ஓடியது. 



அது இரவு நேரம். பாலைவன நிர்மல வானத்தில் நட்சித்திரங்கள் எட்டிப் பார்த்து கண்சிமிட்டின. காற்றில் குளுமை இணைந்திருந்தது.

ஹலீமாவின் கணவர் ஹாரித் எலும்பும்-தோலுமாய் இருந்த ஒட்டகைகயிடம் பால் கறக்கச் சென்றவர், அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார். 

“ஹலீமா..! ஓ..ஹலீமா..!! சீக்கிரமாக இங்கே வாயேன்! இது என்ன அற்புதமோ விளங்கவில்லையே! இதுவரை இப்படிப்பட்ட காட்சியை நான் காணவில்லையே! ஹலீமா சீக்கிரமாக இங்கே வாயேன்!”

என்ன ஏது என்று புரியாமல் ஓடிவந்த ஹலீமா ஒட்டகையைப் பார்த்து திடுக்கிட்டார். வற்றிப் போயிருந்த அதன் ‘மடி’ பால் சுரப்பெடுத்து புடைத்திருந்தது. 

வியப்பு.. மகிழ்ச்சி.. இவைகளின் கலவையாகிப் போன ஹாரித் பாலைக் கறந்து தானும் குடித்து மனைவிக்கும் கொடுத்தார். அந்த இருவரின் வயிறு நிரம்பிய பிறகும் பால் மிச்சமிருந்தது.

“ஹலீமா..! இந்தக் குழந்தை நம்மிடம் வந்ததிலிருந்து ஏதேதோ அற்புதங்கள் நடக்கின்றனவே!”

“ஆமாம்..! நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான்! குழந்தையை வாங்கி மார்பில் அணைத்துக் கொண்டதுதான் தாமதம்.. பாலின் சுரப்பால் நான் தவித்துவிட்டேன்.

அருமை மகன் முஹம்மது (ஸல்) அருந்திய பிறகு, நமது குழந்தை வயிறு முட்ட பால் குடித்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அதேபோல, மக்காவிற்கு நாம் போகும் போது நடக்கக்கூட சிரமப்பட்ட நமது கழுதையும், ஒட்டகையும் மக்காவிலிருந்து திரும்பி வரும்போது எவ்வளவு வேகமாக வந்தன என்று கவனித்தீர்களா? நம்மை பின்னால் விட்டுச் சென்ற நமது கூட்டத்தாரை நாம் முந்தியல்லவா வந்துவிட்டோம்!”

ஆமாம்.. ஹலீமா..! நிச்சமாக இந்தக் குழந்தை இறையருள் பெற்றக் குழந்தையாகத்தான் தெரிகிறது. அப்துல் முத்தலிப் நம்மை எச்சரித்தபோதுகூட நான் நம்பவில்லை. இந்தக் குழந்தையை வளர்ப்பு மகனாய் பெற்றது நமது பெரும்பேறுதான்! கண்ணும், கருத்துமாய் குழந்தையை வளர்க்க வேண்டும் ஹலீமா மறந்துவிடாதே!”

ஹாரித் வியப்புத்தாளாமல் பேசிக் கொண்டேயிருந்தார். 

ஹலீமாவோ, “என் கண்ணே முஹம்மது! என் கண்ணின் மணியே முஹம்மது!” – என்று நெஞ்சோடு அணைத்து முத்தமாரி பொழிந்து கொண்டிருந்தார். 

ஹாரித் குழந்தை முஹம்மதை (ஸல்) வாங்கி முத்தமிட்டார். பாசம் பொங்க மனைவியிடம் சொன்னார்: “ஓ..! முஹம்மதின் வளர்ப்புத் தாயே ஹலீமா! உனக்கு பசியில்லாமல் இனி நான் பார்த்துக் கொள்ள வேண்டும். இதோ பொறு ஒரு நிமிடம். நான் சென்று ஆட்டுப் பாலைக் கறந்து கொண்டு வந்துவிடுகின்றேன்!” – என்று ஹாரித் ஆட்டுப் பாலைக் கறக்கச் சென்றார்.

“ஓ..! இது என்ன..? காய்ந்து போன ஆட்டின் மடியிலிருந்து பால் பீறிட்டு அடிக்கிறதே!”

வியப்புத் தாளாமல் கத்தவும் செய்தார். முழு பாத்திரம் நிரம்பும்வரை பால் சுரந்தது.

“காண்பது கனவா? நனவா? எல்லாம் மாய மந்திர வேலைகள் போல நடக்கின்றனவே!” – என்றார் ஹாரித்.

எல்லாம் இந்தக் குழந்தையின் வருகையால் நிகழும் அற்புதங்கள்தான்! இன்னும் என்னென்ன நிகழவிருக்கின்றனவோ..!” – ஹலீமா தொடர்ந்து ஹாரிதிடம் சொன்னார்:

“எல்லாவற்றையும்விட மிகப் பெரிய அற்புதம் இக்குழந்தையின் குறுநகைதான்! குழந்தையின் இந்த புன்சிரிப்பு இதயத்தில் ஊடுருவி பேரமைதியை தந்துவிடுகிறதே!”

ஹலீமா கண்ணின் மணியாய் குழந்தை முஹம்மது (ஸல்) அவர்களை வளர்க்கலானார். அந்த ஏழைத்தாயின் மடியில் தவழ உலகங்களின் அருட்கொடையை அல்லவா இறைவன் அருளியிருந்தான்! பேறு பெற்ற பணியல்லவா அது!

-    பூக்கும்.

Related

பாலை மலர் - வரலாற்றுத் தொடர் 2148278584213745077

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress