அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 18: 'இம்மையில் கொடுத்தால்..?'

500 நீதிபதிகள் மீது ஊழல் புகார்: நீதிபதி இக்பால் வேதனை.

தமிழகத்தில் உள்ள 900 நீதிபதிகளில் 500 பேர் மீது ஊழல் புகார்கள் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தெரிவித்தார்.

இது அண்மையில் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி.

உலுத்துப் போன நீதித்துறைக் குறித்து தலைமை நீதிபதியின் வாக்குமூலம் இது.

நீதிக்கு இலக்கணமாக திகழும் நபிகளாருக்கு ஏற்பட்ட இக்கட்டான அனுபவத்தை இன்றைய 'அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில்! பார்ப்போமா?


"இறைவனின் தூதரே, இவர் எனது பேரீச்சம் பழத்தோட்டத்தை எடுத்துக் கொண்டார். அதை நீங்கள்தான் எனக்கு மீட்டுத் தர வேண்டும்.!" - கண்களில் கண்ணீர் பொங்க அழுதவாறு வந்தான் ஓர் அநாதைச் சிறுவன்.

"அழாதே மகனே.. வா..வா.. வந்து இப்படி உட்கார்.

யார் உனது தோட்டத்தைப் பறித்துக் கொண்டார்கள்?

என்ன நடந்தது என்று இப்போது விவரமாக சொல்!" - சிறுவனை அருகில் இருத்திக் கொண்ட நபிகளார், அவன் சொன்னதைப் பொறுமையுடன் கேட்டார்கள்.

அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரிடமும் விசாரித்தார்கள்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நபிகளார் அநாதைச் சிறுவனுக்கு சாதகமாக நியாயம் இல்லை என்பதை தெரிந்து கொண்டார்கள்.

கடைசியில் தீர்ப்பு அநாதைச் சிறுவனுக்கு எதிராக அமைந்தது.

முடிவைக் கேட்ட சிறுவன் "ஓ..!" வென்று அழ ஆரம்பித்தான்.

இதைக் கண்டு நபிகளார் மிகவும் வேதனைப்பட்டார்கள். அன்னாரது கண்கள் கலங்கிவிட்டன.

"சகோதரரே, உங்கள் வாதத்தில் நியாயம் இருந்தது. அதன்படி தோட்டம் உங்களுடையதுதான்!
  

ஆனால். பாவம்.. இந்தச் சிறுவனைப் பாருங்கள். அதுவும் யாருமில்லாத அநாதைச் சிறுவன். அதனால் தோட்டத்தை இவனுக்கே கொடுத்துவிடுங்கள். இதற்குப் பதிலாக உங்களுக்கு இறைவன் மறுமையில் சொர்க்கத்தில் ஒரு தோட்டத்தை அளிப்பான்!"

நபிகளாரின் வேண்டுகோளை தோட்டக்காரர் ஏற்கவில்லை.

அங்கு குழுமியிருந்தோரில் நபித்தோழர் 'அப்வாலித் ஹத்தாவும்' ஒருவர். நடந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தவர், தோட்டக்காரரை தனியே அழைத்துச் சென்றார். சொன்னார்: "சகோதரரே, தோட்டத்தை இந்த அநாதைச் சிறுவனுக்கு கொடுத்துவிடுங்கள். இதற்கு பதிலாக நான் எனது தோட்டங்களில் மிகச் சிறந்த தோட்டமொன்றை தங்களுக்குத் தந்துவிடுகின்றேன்! தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்!"

தனது தோட்டத்தைவிட அப்வாலித் ஹத்தாவின் தோட்டம் செழிப்பானது! குலை குலையாக உயர் ரக பேரீச்சம் பழங்களைத் தரக்கூடியது. இதனால், வழக்கைக் கொண்டு வந்தவர் நபித்தோழரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.

நபித்தோழர் அப்வாலித் ஹத்தாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நபிகளாரிடம் சென்றவர், "இறைவனின் தூதரே, எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?"- என்றார் பணிவோடு.

"தாராளமாகக் கேளுங்கள் ஹத்தாஹ், என்ன சந்தேகம்?"- என்றார் நபிகளார் புன்னகையுடன்.

"ஒன்றுமில்லை இறைவனின் தூதரே, அநாதைச் சிறுவனுக்கு தரும்படி தாங்கள் கேட்டீர்களே தோட்டம்.. அதை நான் இம்மையில் வாங்கித் தருகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. அதற்குப் பதிலாக மறுமையில் எனக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்குமா இறைவனின் தூதரே?"

கண்களில் மகிழ்ச்சி பொங்க நபிகளார் சொன்னார்கள்: "நிச்சயம்.. நிச்சயமாக கிடைக்கும் ஹத்தா! நிச்சயமாக உமக்கும் ஒரு தோட்டம் சுவனத்தில் கிடைக்கும்!"

"அப்படியென்றால்.. இறைவனின் தூதரே, என் தோட்டத்தைக் கொடுத்துவிட்டு, இவரது தோட்டத்தை நான் வாங்கி அதை அநாதைச் சிறுவனிடம் கொடுத்துவிடுகின்றேன். இந்தச் செயலுக்கு தாங்களே சாட்சி!" - என்றார் நபித்தோழர் அப்வாலித் ஹத்தா (இறையருள் பொழிவதாக!)

நபி பெருமானார் தமது தோழரைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.

"அநாதைகளைப் பற்றி உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறுவீராக: "அவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செயல்முறையை மேற்கொள்வதே உத்தமமாகும்!"

- என்ற திருக்குர்ஆனின் கட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் நபிகளார் அநாதைச் சிறுவனை அழைத்தார்கள். அன்போடு அவனை அணைத்துக் கொண்டார்கள்.

ஒரு அநாதைச் சிறுவனுக்கு நன்மை பயக்கக் கூடிய செயல்முறையை நிறைவேற்றிய திருப்தி நபிகளார் முகத்தில் நிலவியது.

தோட்டம் திரும்பவும் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த அநாதைச் சிறுவனும் சிரித்தான்.

- இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 2953170790970340680

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress