பாலை மலர் – 16. ‘இறையருட் பெருமழையில் ஓர் அருட்குழந்தை!’
https://udayathaaragai.blogspot.com/2013/04/16.html
குழந்தை சிரித்தது.
ஹலீமாவுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை.
இதுவரையில் பேரிரைச்சலாய் அலைமோதிக் கொண்டிருந்த துன்பத் துயரங்கள் புயல் கரைக் கடந்த
கடலைப் போல நிர்மூலமாய் அமைதியாய் மாறிவிட்டது. சகலமும் பெற்றதுப் போல மனம் பேரானந்தம்
அடைந்தது.
குழந்தை கை – கால்களை உதைத்தவாறு சிரித்தது.
“ம்.. ம்..” – என்று மழலையில் பேசியது.
குழந்தைகள் சிரிப்பது இயல்பானதுதான்! ஆனால்,
அப்துல்லாஹ்வின் அனாதை மகனின் சிரிப்பு நெஞ்சை சுண்டி இழுப்பதாய் அல்லவா இருக்கிறது!
“எனக்கு என்ன நேர்ந்தது?”
ஹலீமா தனக்குள் பேசிக் கொண்டார்.
பிறகு ஆமினாவிடம் சொன்னார்:
“அம்மணி ஓர் உண்மையைச் சொல்லட்டுமா? இந்தக்
குழந்தையை நான் வாங்கிக் கொள்ளும் வரை இருந்த மனநிலை வேறுதான். பெரும் செல்வந்தர் வீட்டுப்பிள்ளை
கிடைக்கவில்லையே என்று நினைத்து ஏங்கியதும் உண்மைதான்! என் விதியை நொந்துக் கொண்டதும்
நிஜம்தான்!
ஆனால், உங்கள் அருமைக் கண்மணியைக் கண்டதும்
என் துயரங்கள் எங்கேயோ தொலைந்து போனது போலாகிவிட்டது. இக்குழந்தையின் பார்வை என் மனதில்
இதுவரையும் நான் அனுபவித்தறியாத அமைதியை தந்துவிட்டது.
ஓ! முஹம்மதின் தாயே! என்னால் இதை சொல்லாமலிருக்க
முடியவில்லை. ஆம்! இன்று என்னுள் எழுந்துள்ள அமைதியும், ஆனந்தமும் இதுவரை நான் வாழ்வில்
உணர்ந்தறியாதவை!”
குழந்தையுடன் ஹலீமா புறப்பட்டார்.
பெரியவர் அப்துல் முத்தலிப் ஹலீமாவின் ஒட்டகத்துடன்
மக்காவின் மலைப் பகுதிகள்வரை கூட வந்து வழியனுப்பினார். அவர்கள் சிறிது தூரம் சென்றதும்
உரக்கக் கூப்பிட்டடுச் சொன்னார்:
“ஓ ஹலீமா! அனாதைக் குழந்தை என்று எனது பேரனின்
வளர்ப்பில் எந்தக் குறையும் வைக்கக்கூடாது. இறைவன் மீது ஆணையாக! குறைஷி குலத்தில் ஒளிமயமான
எதிர்காலம் கொண்ட இப்படிப்பட்ட குழந்தை இதுவரை பிறக்கவில்லை. நமது ஜோதிடர்கள், பூஜாரிகள்,
பாதிரிமார்கள் சொன்னது இது. இந்தக் குழந்தை ஒருநாள் உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி
காட்ட பிறந்துள்ள குழந்தையாம்! இதை எப்போதும் மறந்துவிடாதே! குழந்தையை வளர்ப்பதில்
அசட்டையாக இருந்துவிடாதே! ஜாக்கிரத்தை!”
அப்துல் முத்தலிப்பின் குரல் மலைக் குன்றுகளில்
பட்டு எதிரொலித்தது.
“தால்” என்னும் நாக்கை குழந்தையின் தாய்
ஆட்டிப்பாடுவதால் தாலாட்டு எனப்பட்டது.
“ஆரும் அடிக்கவில்ல..
ஐ விரலும் தீண்டவில்லை!
அவனா அழுகின்றான்
ஆத்தாள் மடிதேடி!”
நாட்டுப்புறத்தாயின் பொருள் செறிந்த தாலாட்டுப்
பாடல் இது.
“அங்கெடுத்த கண்ணீர்
ஆறாய்க்குளம் பெருகி
தாயார் மடி நிறைந்து
தகப்பனார் தோள் நிறைந்து
மாமி மடி நிறைந்து
மாமனார் தோள் நிறைந்து
சித்திரை மாதம் சிறந்த
வெள்ளம் வந்ததுபோல
ஆறு பெறுகி
ஆனை குளிப்பாட்டிக்
குட்டைப் பெருகி
குதிரை குளிப்பாட்டிக்
குளமாய் தேங்கி
வாய்க்காலாய் ஓடி
இஞ்சிக்குப் பாய்ந்து
மருதாணி வேரோடி
தாழைக்கும் பாய்கையிலே
தளும்பினதாம் கண்ணீரு..
வாழைக்கும் பாய்கையிலே
வற்றினதாம் கண்ணீரு..!”
- என்கிறாள் இன்னொரு தாய் அழும் குழந்தையை
சமாதானப்படுத்த.
ஆனால், ஹலீமாவின் மடியிலிருந்த குழந்தை முஹம்மதுவோ (ஸல்) அழவில்லை…
அந்த செவிலித்தாய் தாலாட்டுப் பாடி அமைதிப்படுத்த! சிரித்தது! குறுநகை புரிந்தது.
ஆமினாவிடம் குழந்தையைப் பெற்றுக் கொண்ட ஹலீமா
மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
- பூக்கும்.



