ஒரு சொல்: 'கலப்பு மணங்கள் சாதியை ஒழிக்குமா?'





கலப்புத் திருமணங்கள் மூலம் சாதியை ஓரளவு ஒழிக்கலாம்.

நபிகள் நாயகம்கூட கலப்பு திருமணம் மூலம் சாதிப் பிரச்னைக்கு தீர்வு கண்டார்கள். அவருடைய உறவுப் பெண்ணை.. தாழ்த்தப்பட்ட தோழருக்கு மண முடித்துவைத்து ஒரு முன்னுதாரணமாய் திகழ்ந்தார்கள்.

ஆக, கலப்புத் திருமணங்கள் சாதியை ஒழிக்க ஓரளவு உதவி செய்கின்றன என்பது உண்மைதான்.

ஆனால், சாதியை ஒழிப்பதற்காக யாரும் கலப்புத் திருமணம் செய்வதில்லை. இரண்டு பேரும் விரும்பி திருமணம் செய்து கொண்டார்கள். சாதி ஒழிவதற்காக யாரும் செய்து கொள்வதில்லை. இருந்தாலும் இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்!

ஆனால், இதன் பிறகு எல்லாமே பிரச்னைகள்தான்.

குழந்தை பிறந்ததும்  என்ன சாதி என்ற கேள்வி எழுகிறது.

பள்ளிக்கூடத்தில் இந்த கேள்வி ஆழமாக வேரூன்றுகிறது.

பெரும்பாலும் தந்தையின் சாதிதான் பதியப்படுகிறது. தந்தையின் சாதியோடு குழந்தை அடையாளப்படுத்தப்பட்டுகிறது. மீண்டும் சாதி தலைதூக்குகிறது.

இதில் எந்த சாதியும் சாராதவர் என்றொரு பிரிவும் உண்டு. இதன் கீழ் இவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால், இடஒதுக்கீடு பட்டியலில் இவர்களை எந்த பட்டியலில் சேர்ப்பது?

  • பிற்படுத்தப்பட்டவரா?
  • மிகவும் பிற்படுத்தப்பட்டவரா?
  • முன்னேறிய வகுப்பினரா?

யாரோடு சேர்ப்பது?

தனியாக இவர்களுக்கு என்று சாதிகள் அற்றவர்கள் என்ற பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வைக்கலாம் என்றால் இதில் ஏராளமான நிர்வாகச் சிக்கல்கள் எழும்.

இவற்றையெல்லாம் ஆதிக்க சக்திகள் மௌனமாக பார்த்துக் கொண்டு இருப்பார்களா?



மதுரையைச் சேர்ந்த அரசு சாரா தன்னார்வ அமைப்பொன்று அண்மையில் ஓர் ஆய்வை நடத்தியது. ஜனவரி 2009 லிருந்து டிசம்பர் 2012 வரையிலான கலப்புத் திருமணஙகள் சம்பந்தமான ஆய்வு அது.

தமிழகத்தின் 17 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர்களிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அதிகாரப் பூர்வமான தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், 'கலப்புத் திருமணங்களால் பாதிக்கப்படும் பெண்களில் 80 விழுக்காடு பேர் தலித் இனத்து பெண்கள்!' - என அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.

கலப்பு மணம் புரியும் பெண், மணமகனின் வீட்டாரால் துன்புறுத்தப்படுவதாகவும், இன்னும் மணம் புரிந்துகொள்வதாக பொய் வாக்குறுதிகள் மூலம் குடும்பம் நடத்திவிட்டு வஞ்சிக்கப்படும் பெண்களும் இந்த தாழ்த்தப்பட்ட பெண்கள் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வுக்காக கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாகபட்டிணம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.

  • பாதிக்கப்பட்ட 84 பெண்களில் 67 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலித் பெண்கள்.
 இந்த 67 பெண்களில்,

  • 32 பேர் பறையர் வகுப்பினர்,
  • 20 பேர் பள்ளர் மற்றும்
  • 13 பேர் அருந்தததியினர் இன்னும் இருளர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

கடைசியில், ஆய்வுகளின் முடிவில் அந்த தன்னார்வ அமைப்பு அரசுக்கு செய்த பரிந்துரை, “Changes should be made in SC/ST (Prevention of Atrocities Act) அதாவது சுருக்கமாக சொல்லப்போனால்… “தலித் மக்களுக்கான தீண்டாமை சட்டத்தில் மாற்றங்கள் வேண்டும்!” – என்பதுதான். (ஆதாரம்: தி ஹிந்து, மார்ச் 4, 2013 – மதுரை பதிப்பு)

அண்மையில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்வையிழந்த ஒருவரை பார்வையிழந்த ஒருத்தி திருமணம் செய்து கொண்டதற்காக பெண்ணை பிரித்து அழைத்துச் சென்ற பெற்றோரின் கொடுமையை அந்த பெண் தன் வாயாலேயே சொல்லி அழுது புலம்பினார்.

இதுவாவது பரவாயில்லை. சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சாதி விட்டு சாதி சென்று திருமணம் செய்து கொண்டதற்காக கொலை செய்யும் உண்மைச் சம்பவங்களும் உண்டு. இதற்கு கவுரவக் கொலை என்றுகூட பெருமைப் பட்டு அழைத்துக் கொள்கிறார்கள்.

இதை, "ஒழிக்கலாமா? வேண்டாமா?" -   என்று மத்திய அமைச்சரவை முடிவெடுக்க முடியாமல் கலைந்தும்விடுகிறது. வழக்கம் போலவே முடியாத.. சிக்கலான விஷயங்களை மாநிலங்களின் தலையில் சுமத்திவிடுகிறது. இது ஒருவிதமான அரசியல்.

மொத்தத்தில் கலப்புத் திருமணங்கள் சாதியை முழுமையாக ஒழிக்க முடியாது.




Related

ஒரு சொல் 1414090465571410443

Post a Comment

  1. //நபிகள் நாயகம்கூட கலப்பு திருமணம் மூலம் சாதிப் பிரச்னைக்கு தீர்வு கண்டார்கள். அவருடைய உறவுப் பெண்ணை.. தாழ்த்தப்பட்ட தோழருக்கு மண முடித்துவைத்து ஒரு முன்னுதாரணமாய் திகழ்ந்தார்கள்.//

    Is it true? I have not heard about these people who got married from different castes.

    ReplyDelete

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress