முஸ்லிம்களின் இழிநிலைக்கு காரணம் என்ன?
https://udayathaaragai.blogspot.com/2013/09/blog-post_19.html
உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். முஸ்லிமுக்கு இறையருள் கிடைக்கிறது என்பது உங்கள் நம்பிக்கை. ஆனால், கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்! இறையருள் உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றதா? மறுமையில் கிடைக்கக் கூடியது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இம்மையில் இன்று உங்கள் நிலையைப் பற்றி என்றாவது யோசித்ததுண்டா?
இந்த நாட்டில் இப்போதும் நீங்கள் கோடிக்கணக்கில் இருக்கிறீர்கள். இத்தனை பெரிய எண்ணிக்கை கொண்ட மக்கள் திரளில் இஸ்லாத்தின் உயிரும், இறைநம்பிக்கையின் உறுதியும் இருந்திருந்தால், இங்கு நீங்கள் போக்கற்றவர்களாகவும், மதிப்பற்றவர்களாகவும் இருந்திருக்க மாட்டீர்கள். இறைவனைத் தவிர வேறு யாருக்கும் குனியாத உங்கள் தலை வெறும் மனிதர்களுக்கு முன்னால் குனிந்திருக்காது. எவரும் சூறையாடத் துணியாத உங்கள் கண்ணியம், இன்று மண்ணோடு... மண்ணாய் ஆகியிருக்காது. அறியாமையும், வறுமையும், கடனும் உங்கள் வாழ்வின் நிழல்களாய் துரத்தி கொண்டிருக்காது!
சற்று சிந்தனை செய்யுங்கள். இதுதானா இறைவனின் அருள்? இது இறையருள் அல்ல வெளிப்படையாகத் வெளிப்படும் இறைவனின் கோபம்!
ஒருவன் முஸ்லிமாய் இருக்கின்றான். அதேசமயத்தில் இறைவனின் கோபத்திற்கும் ஆளாகிறான் என்று சொல்லும்போது, வியப்பாக இருக்கிறது அல்லவா? முஸ்லிமாக இருந்தாலும் இறைவனால் வெறுக்கப்படுகின்றான். முஸ்லிமாய் இருப்பதோடு கேவலமான நிலையிலும் இருக்கின்றான். முஸ்லிமாய் இருப்பதோடு அடிமையாகவும் இருக்கின்றான். இது எவ்வளவு அசாத்தியமான செய்தி?
ஒரு பொருள் வெண்மையாக இருப்பதோட கருமையாகவும் இருக்க முடியுமா? முஸ்லிம் இறைவனின் அன்புக்கு உரியவன் என்றால்.. இறையன்புக்குரிய அவன் உலகில் கேவலப்பட்டவனாகவும், கண்ணியம் இழந்தவனாகவும் எப்படி இருக்க முடியும்? நம்மைப் படைத்த இறைவன் என்ன அந்நியாகக்காரனா? (இறைவன் நம்மை மன்னிப்பானாக!)
இறைவனின் கட்டளைகளை உணர்ந்து அவற்றுக்கு அடிபணிந்து வாழக்கூடிய உங்களுக்கு மேலாக, இறைவழிபாடு இல்லாத மக்களை அவன் உயர்த்துவானா? உங்கள் வழிபாடுகளுக்கு பரிசாக உங்களை அவன் தண்டிப்பானா?
'இறைவன் அநீதியாளன் அல்ல! இறைவழிபாடுகளுக்கு பகரமாக கேவலமும், இழிவும் கிடைக்க வாய்ப்பில்லை!'- என்பதை நீங்கள் நம்பினால்.. 'உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வதில் ஏதோ கோளாறு உள்ளது'- என்பதையும் நீங்கள் நம்பி அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அரசின் பதிவேடுகளில் உங்கள் பெயர் முஸ்லிம் என்றுதான் உள்ளது. ஆனால், இறைவனின் திருமுன் அரசு பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு கிடைக்காது.
இறைவன் தன்னுடைய பதிவுகளைத் தனிப்பட்ட முறையில் அமைத்து வைத்திருக்கின்றான். உங்கள் பெயர்... இறைவனுக்கு வழிபட்டு நடப்பவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? அல்லது வழிபட மறுப்பவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்று அங்கே தேடிப்பாருங்கள்!
- மௌலானா மௌதூதி (ரஹ்)