ஒரு சொல்:'அணு முதல் அண்டம் வரை ஓரணிதான்!'
https://udayathaaragai.blogspot.com/2013/12/blog-post_18.html
நல்ல கலிமா அதாவது கலிமா தய்யிபா என்றால் என்ன?
"உலகம் முழுமைக்கும் இறைவன் ஒருவன்தான்!" - என்பதே அதன் பொருள்.
எவ்வளவு உண்மையான, யாதார்த்மான செய்தி இது! உலகில் இதைவிட உண்மையான செய்தி வேறொன்றும் இருக்க முடியவே முடியாது. இந்தச் செய்திக்கு விண்ணிலும், மண்ணிலும் இருக்கின்ற எல்லா படைப்புகளும் சான்று கூறிக் கொண்டே இருக்கின்றன.
இந்த மனிதன், இந்த விலங்குகள், இந்த கல், இந்த மணல் துகள்கள், சல சலத்து ஓடிக் கொண்டிருக்கும் நதி, தக தகவென்றிருக்கும் இந்த சூரியன், கண் சிமிட்டும் நட்சத்திரங்கள், பால் நிலா என்று எல்லா படைப்புகளையும் உற்று நோக்குங்கள். இவற்றில் எந்த படைப்பாவது இறைவனை அன்றி வேறொருவரால் படைக்கப்பட்டதை காணுகின்றீர்களா? இவற்றில் எந்தப் படைப்பாவது மற்றவரால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதா?
இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனால்தான் படைக்கப்பட்டது. அவனது பெரும் கருணையினால்தான் அது நிலைத்தும் நிற்கிறது. அவன்தான் அதன் உரிமையாளனாகவும், அதிகாரியாகவும் இருக்கின்றான்.
இந்நிலையில், 'உலகத்தில் ஓர் இறைவனான அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் இறைசக்தி கிடையாது!' - என்று எப்போது நீங்கள் பிரகடப்படுத்துகிறீர்களோ, அப்போதே, விண்ணிலும், மண்ணிலும் இருக்கின்ற சகல படைப்புகளும் ஓங்கி உரத்தக் குரலில் அதை இப்படி எதிரொலிக்கின்றன: "நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மையான செய்தி. நாங்கள் எல்லோரும் உங்கள் பிரகடனத்தின் உண்மையான சான்றுகளாக இருக்கின்றோம்!"
இறைவனின் திருமுன் எப்போது நீங்கள் தலை சாய்க்கிறீர்களோ, அப்போதே படைப்பினம் முழுவதும் சேர்ந்து உங்களுடன் தலை பணிந்து வணங்குவதை காணலாம். ஏனென்றால் அவை அனைத்தும் ஏற்கனவே அந்த படைப்பாளனையே வணங்கிக் கொண்டிருக்கின்றன.
இறைவனின் கட்டளைகளுக்கு எப்போது நீங்கள் பணிந்து நடக்கின்றீர்களோ, அப்போதே, வானம், பூமியிலுள்ள எல்லா படைப்புகளும் உங்களுக்கு பக்கபலமாய் துணை நிற்பதை உணரலாம். ஏனென்றால், அவை அனைத்தும் ஏற்கனவே அந்த இறைவனுக்குதான் அடி பணிந்து நடந்து கொண்டிருக்கின்றன.
இறைவனின் பாதையில் நீங்கள் தனியாக நடக்கிறீர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஏனென்றால், உங்கள் பாதங்கள் இறைபாதையில் பயணிக்கும்போது, பிரபஞ்சத்திலுள்ள சக படைப்புகளும் உங்களுடன் அணி சேர்ந்துதான் நடக்கின்றன. ஏனென்றால், உங்கள் முன் இருக்கும் அணு முதல் அண்டம் வரையிலான எல்லாமும் இறைவனின் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றன!
- மெளலானா மௌதூதி (ரஹ்)

