ஒரு சொல்:'வெறும் முட் செடிதான் அது!'
https://udayathaaragai.blogspot.com/2013/12/blog-post_2142.html
கெட்ட கலிமா என்றால் என்ன?
"இறைவன் என்பவன் இல்லை அல்லது இறைவன் இருக்கிறான்; ஆனால், மற்ற கடவுளர்க்கும் இறைத்துவம் என்னும் பொறுப்பில் பங்கு உண்டு!" - என்பதே கெட்ட கலிமாவின் பொருள்.
இதைவிட பொய்யான, அடிப்படையில்லாத செய்தி என்ன இருக்க முடியும்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். விண்ணிலும், மண்ணிலும் காணப்படும் கோடாணு கோடி சக படைப்பினங்கள் இந்த கருத்துக்கு முரண்பட்டல்லவா சான்றளிக்கின்றன!
"இறைவன் இல்லை!" - என்கிறான் நாத்திகன்.
"நீ பொய்யுரைக்கிறாய்! உன்னையும், எங்களையும் இறைவன்தான் படைத்தான். பொய்யான செய்தியைப் புலம்பிக் கொண்டிருக்கும் உனது நாவைக்கூட அதே இறைவன்தான் உனக்குக் கொடுத்திருக்கின்றான்!" - என்றல்லவா வானம், பூமியிலுள்ள படைப்பினங்கள் சொல்கின்றன.
இணை வைப்பவன் சொல்கின்றான்: "இறைத்தூதுவத்தில் மற்றவர்களுக்கும் பங்கு உண்டு. மற்ற கடவுளர்களும் உணவளிப்பவர்களாகவும், எஜமானர்களாகவும் இருக்கிறார்கள். விதியை நிர்ணயிக்கும் ஆற்றலும், அதனை மாற்றும் ஆற்றலும் மற்றவர்களுக்கும் உண்டு. நன்மை, தீமைகளை விளைவிக்கும் சக்தி அடுத்தவர்களுக்கும் உண்டு. வேண்டுதல்களை மற்றவர்களும் கேட்கிறார்கள்; அதை நிறைவேற்றியும் தருகிறார்கள். இறைவனின் ஆட்சி, அதிகாரத்தில் மற்றவர்களுக்கும் பங்குண்டு. இறைவனின் கட்டளைகளைத் தவிர மற்றவர்களின் கட்டளைகளும், சட்டங்களும் பின்பற்றத் தகுந்தவைதான்!"
"பொய் சொல்லாதே! உனது செய்தியில் சிறிதும் உண்மை இல்லை!" - என்று வானம், பூமியிலுள்ள படைப்பினங்கள் அனைத்தும் இணை வைப்பவனின் கூற்றை மறுத்துரைக்கின்றன.
இப்படிப்பட்ட ஒரு கெட்ட கலிமாவை ஒருவன் தேர்ந்தெடுத்துவிட்டு, அதற்கு ஏற்றாற் போல தனது வாழ்வை அமைத்துக் கொண்டால், இம்மையிலும், மறுமையிலும் அவனால் எப்படி பூத்துக் காய்க்க முடியும்?
இத்தகைய பொய்யுரைப்பவர்களுக்கும் இறைவன்தான் அருள்புரிந்து உடனுக்குடன் தண்டிக்காமல் அவகாசம் அளித்திருக்கின்றான். அவர்களுக்கும் உணவளிக்கின்றான்.
அதேபோல, வானம் - பூமியிலுள்ள இறைவனுக்கு அடிபணிந்த மற்ற சக்திகளும் நாத்திகனுக்கும், இணை வைப்பவனுக்கும் உதவவே செய்கின்றன; முட்செடிகளும் நம் கண்ணுக்கு முன்னால் முளைத்து நிற்பதைப் போன்றது இது!
ஆனால், சக படைப்பினங்களில் எதுவொன்றும் தகுதியின் அடிப்படையில் இதை செய்வதில்லை. முழு வீச்சுடன் உதவ வேண்டும் என்றும் நினைப்பதில்லை.
வெறும் முட்செடியாய், யாருக்கும் உதவாத முட்செடியாய், எளிதில் வீழ்ந்து மடிந்துவிடும் முட்செடியாய்தான் இவர்கள் இருப்பார்கள்.
- மெளலானா மௌதூதி (ரஹ்)

