ஒரு சொல்: 'இதற்கு பெயர்தான் நயவஞ்சம்'
https://udayathaaragai.blogspot.com/2014/02/blog-post_21.html
ஒருவன், "இவை இறைவனுடைய, பெருமானாருடைய அறிவுரைகளாகவே இருக்கட்டும். ஆனால், என் உள்ளம் இவற்றை ஏற்க மறுக்கிறது. இவற்றில் தீங்கு இருப்பதாக எனக்குத் தெரிகிறது. எனவே, இறைவனுடைய, திருத்தூதருடைய அறிவுரைகளை விட்டுவிட்டு என் கருத்துப்படி நடக்கப் போகின்றேன்!" - என்று சொன்னால் அவன் உள்ளத்தில் 'ஈமான்' என்னும் இறைநம்பிக்கை கிடையாது. அவன் ஒரு இறைநம்பிக்கையற்றவன். முனாஃபிக் - நயவஞ்சகன்.
"நான் இறைவனுக்கு அடிமை, இறைத்தூதரை நான் பின்பற்றுகிறேன் என்று அவன் வாயளவில் சொல்கிறான். ஆனால, உண்மையில் தன் மனத்திற்கு அடிமையாக இருக்கிறான்; தன் கருத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறான்.
அதேபோல, ஒருவன், "இறைவனும், இறைத்தூதரும் என்ன கட்டளை இட்டாலும் இடட்டும். ஆனால், இந்த நடைமுறை முன்னோர்களிடமிருந்து வழிவழியாய் வந்திருக்கிறது. அதனை எப்படி விட முடியும்? இந்த பழக்க, வழக்கங்கள் என் குடும்பத்தாரிடம் நிலைத்திருக்கிறது. அதனை எப்படி உடைக்க முடியும்?" - என்று சொன்னால், அவன் நயவஞ்சகர்களில் ஒருவனாகவே கணிக்கப்படுகிறான். தொழுது.. தொழுது அவனது நெற்றியில் எவ்வளவு பெரிய வடு விழுந்தாலும் சரி; வெளிப்படையில் எவ்வளவுதான் மார்க்கத்தைப் பின்பற்றுகிறவன் போல் தோற்றமளித்தாலும் சரியே! ஏனெனில், மார்க்கத்திற்கு அடிப்படையான உண்மை அவன் சிந்தையில் ஏறவே இல்லை.
மார்க்கம் என்பது வெறும் ருக்கூ, சுஜுது - குனிந்து சிரம் பணிதல்கள் மற்றும் நோன்பு, ஹஜ் போன்றவற்றின் பெயரல்ல.
மனிதனின் தோற்றத்திலோ, உடையிலோ மார்க்கம் உருவாவதில்லை. அடிப்படையில், இறைவனையும், இறைத்தூதரையும் பின்பற்றுவதற்குதான் மார்க்கம் என்று பெயர்.
ஒரு மனிதன் தனது செயல்களில் இறைவனையும், பெருமானாரையும் பின்பற்ற மறுத்தால் உண்மையில் அவன் உள்ளத்தில் மார்க்கம் கிடையாது. அவனது தொழுகையும், நோன்பும் மார்க்கத்தைப் பின்பற்றுகின்றவன் போன்ற அவனது தோற்றமும் ஏமாற்று வித்தையே அன்றி வேறில்லை!
ஒரு மனிதன் இறைமறை மற்றும் இறைத்தூதரின் அறிவுரைகளை அலட்சிப்பபடுத்திவிட்டு, "இன்ன செயல் ஆங்கிலேயர்களின் வழக்கிலிருப்பதால், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்ன இனத்தவர் இந்த செயலினால் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அந்தச் செயலை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த பெரிய மனிதர் இப்படிச் சொல்கிறார் என்பதால் இன்ன செய்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் அவனும் அவனது இறைநம்பிக்கைக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டவனே ஆவான்.
நீங்கள் இஸ்லாத்தைத் தழுவ விரும்பினால், முஸ்லிமாக இருந்தால் அல்லது முஸ்லிம்களாக இருக்க விரும்பினால்
- இறைக் கருத்துக்கும்,
- இறைத்தூதரின் கருத்துக்கும்
மாறுபட்ட எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள்.
இப்படி நீங்கள் செய்ய முடியவில்லை என்றால், உங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்வது உங்களுக்கு அழகல்ல.
"நாங்கள் இறைவனையும், இறைத்தூதரையும் ஒப்புக் கொள்கின்றோம்!" - என்று நாவால் சொல்வதோடு வாழ்க்கையில் எல்லாப் பிரச்னைகளிலும், எல்லா நேரங்களிலும் மற்றவரின் கருத்தை ஏற்றுக் கொண்டு இறைக் கருத்தையும், இறைத்தூதரின் கருத்தையும் மறுத்துக் கொண்டே இருப்பது இறைநம்பிக்கையுமல்ல; இஸ்லாமுமல்ல. இதற்குப் பெயர்தான் நயவஞ்சகம்.
- மௌலானா மௌதூதி (ரஹ்)

