அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 31: '500 ஆண்டு முந்திச் செல்பவர்கள்'

'குளிரைத் தாங்க முடியாமல் அவர்கள் நெருங்கி அமர்ந்து கொண்டார்கள். அதில் ஒருவர் மிகவும் அமைதியாக திருக்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார். மற்றவர்கள் அதைக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்! யார் இவர்கள்? இவர்கள்தான் 500 ஆண்டுகள் முந்திச் செல்பவர்கள்..! ஆம்..! 500 ஆண்டுகள் முந்தி சுவனம் செல்பவர்கள்.!!' இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில் பார்ப்போமா?' 




ஏழ்மையும் - வறுமையும் அறிஞர் பெருமக்களின் இணைப்பிரியாத் தோழர்கள் போலும்! காலங்கள் கடந்து இந்தத் தோழமை அவர்களைத் தொடர்ந்து வந்திருக்கிறது. இப்படி நபிகளாரின் திருச்சபையில் பங்கு பெற்ற தோழர்களில் பெரும் பகுதியினர் வறுமையில் வருந்திய ஏழைகளே!

உண்ணுவதற்கு உணவோ, உடுத்துவதற்கு உடையோ அவர்களிடம் இல்லை. அவர்களின் நிலையைக் காணும் புதியவர்கள் அவர்களை 'யாசகர்கள்' என்று எண்ணிக் கொள்வார்களாம்! அவர்களைக் கண்டதும் அலட்சியமான பார்வையை அவர்கள் மீது வீசி விட்டு ஒதுங்கிச் சென்றுவிடுவார்களாம்!

இந்த ஏழைக் கல்வியாளர்களிடம் இறைவனின் திருத்தூதர் முஹம்மது நபிகளார் (ஸல்) அளவற்ற அன்பும் - மதிப்பும் வைத்திருந்தார்கள். கல்வியைக் கற்பதற்காக அவர்கள் உலகைத் துறந்து துறவிகளாய் வாழ்ந்தவர்களாயிற்றே!

இவர்கள் திண்ணைத் தோழர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். 'மஸ்ஜிதுன் நபவி'- எனப்படும் நபிகளாரின் பள்ளிவாசலின் எதிரே இருந்த திண்ணையே இவர்களின் 24 மணி நேரக் கல்விக்கூடமாக இருந்தது. அதனால் இந்தப் பெயர் அவர்களின் சிறப்புப் பெயராகிவிட்டது.

ஒருநாள் நடந்த சம்பவத்தை நபித்தோழர் அபு ஸய்யீத் அன்சாரி (இறையருள் பொழிவதாக!) இப்படி விவரிக்கிறார்கள்:

"அன்று நான் திண்ணைத் தோழர்களின் சபையில் அமர்ந்திருந்தேன். சரியான குளிர்காலமது! உடலை உறையச் செய்யும் குளிர். அந்தக் கடும் குளிரில் அணிந்துக் கொள்ளவும் குறைந்த பட்சம் போர்த்திக் கொள்ளவும் போதிய ஆடைகள் இல்லாமல் அவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்தக் குளிரைத் தாங்க முடியாமல்... ஒருவருக்கொருவர் நெருக்கமாக உடலை நெருக்கி அமர்ந்திருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் மிகவும் அமைதியாக திருக்குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார். அதை எல்லோரும் கவனமாகக் கேட்டவாறு இருந்தார்கள்.

இந்த நேரத்தில் அங்கு நபிகளார் வந்தார்கள்.

நபிகளாரைக் கண்டதும் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தவர் நிறுத்திவிட்டார்.

தோழர்களுக்கு நபிகளார் சலாம் கூறினார்கள். "தோழர்களே! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" - என்று விசாரித்தார்கள்.

" இறைவனின் தூதரே, நாங்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கின்றோம்!" - என்று நபித்தோழர்கள் பதில் அளித்தார்கள்.

இதைக் கேட்டதும், நபிகளாரின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. இறைவனைப் புகழ்ந்துரைத்தார்கள். சொன்னார்கள்:

"கல்வியின் மீது அளவற்ற நாட்டம் கொண்ட உங்களைப் போன்ற தோழர்களை என் சமூகத்தவர்களாய் ஆக்கி வைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்! இத்தகைய கல்வியாளர்களுடன் இருக்கும்படியே இறைவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்!"

இப்படிச் சொன்ன நபிகளார் கூட்டத்தார் மத்தியில் அமர்ந்து கொண்டார்கள். மற்றவரையும் சுற்றி வளையமாக அமரும்படிச் சைகை செய்தார்கள்.

நபித்தோழர்களும் அப்படியே அமர்ந்தார்கள்.

 நபிகளார் தொடர்ந்து சொன்னார்கள்:

" எனதருமைத் தோழர்களே! நான் சொல்லும் நற்செய்தியைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்!

மறுமை நாளில் இறைவன் உங்களுக்கு அருள்மாரி பொழிவான்.

செல்வந்தர்களைவிட நீங்கள் அரை நாளுக்கு முன்பாகவே சுவனத்தில் நுழைந்துவிடுவீர்கள். அரைநாள் என்றால்.. எவ்வளவு என்பது தெரியுமா? 500 ஆண்டுகளுக்கு இணையான காலமது!

ஏழைகளான நீங்கள் சுவனத்தில் மகிழ்ச்சியாய் இருக்கும் போது ..

செல்வந்தர்களோ... தங்கள் கணக்கு வழக்குகளைச் சமர்பிப்பவர்களாக இறைவனின் திருச்சந்நிதியில் நின்றிருப்பார்கள்!"
        
              

- இறைவன் நாடினால்.. 'அருட்கொடைகள்' தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 1438893414766734773

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress