அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 30: 'திண்ணைத் தோழர்கள்'

மனித உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் நபிகளார் கைத்தேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதனால்தான், பெருமானாரால்... 23 ஆண்டு காலத்துக்குள் அரபு நாடு முழுவதையும் தமது ஈர்ப்புக்குள் கொண்டு வர முடிந்தது. மனதில் எழும் சிறு சலனத்தையும் அவர்களால் படிக்க முடிந்தது. நபிகளார் கற்றுத் தந்த அந்த நேசம் , புரிந்துணர்வு, சக மனிதர்கள் மீதான பிரேமை இவை எல்லாம் முஸ்லிம் சமூகத்தின் காணாமல் போன சொத்துக்களாகும். கை நழுவிப் போனசுன்னத்துக்கள் - வழிமுறைகளாகும்.

இன்றைய அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடையில் நபிகளாரின் புரிந்துணர்வை விளக்கும் சம்பவம் ஒன்றை பார்ப்போமா?
 மஸ்ஜிதுன் நபவீ' என்பது மதீனாவிலுள்ள 'நபிகளார்' பெயரால் அழைக்கப்படும் பள்ளிவாசலாகும்.

அதன் எதிரே பெரிய திண்ணை ஒன்று இருக்கும்.

அதைக் கல்வியின் மீது அளப்பரிய நேசம் கொண்டிருந்த கல்வியாளர்கள் பயன்படுத்தி வந்தார்கள். அவர்களுக்கென்று வீடோ-வாசலோ இல்லை. குடும்பம்-குட்டியும் இல்லை. வயிற்றுப் பிழைப்புக்கான எந்த வேலையும் அவர்கள் தேடிக் கொள்ளவில்லை.

உலகின் மீது பற்றில்லாதவர்களாக.. இரவு-பகல் என்று பாராமல் அந்தத் திண்ணையிலேயே தங்கி, கிடைப்பதை உண்டு வாழ்ந்தார்கள். தத்தமது தோட்டங்களில் விளையும் பேரீச்சம் குலைகளை நபித்தோழர்கள் அந்தத் திண்ணையை ஒட்டிய தூண்களில் தொங்க விட்டுவிடுவார்கள். அதுதான் அவர்களின் பிரதான உணவு.

உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் பட்டினிலேயே பொழுதைக் கழிப்பார்கள்.

இறைவனின் திருவேதமான திருக்குர்ஆனையும், திருநபிகளாரின் பொன்மொழிகளையும் கற்பது மற்றும் கற்பிப்பது ஆகிய மிக முக்கியப் பணியை அவர்கள் வாழ்வின் லட்சியமாக கொண்டிருந்தார்கள்.

இந்த நபித்தோழர் குழாம் ' அஸ்ஹாபே ஸீப்பா' அதாவது 'திண்ணைத் தோழர்கள்' என்றழைக்கப்பட்டார்கள்.




திண்ணைத் தோழர்களில் நபித்தோழர் அபுஹீரைரா (இறையருள் பொழிவதாக!) புகழ் மிக்கவராக விளங்கினார்கள்.

ஒருமுறை நடந்த சம்பவத்தைக் கீழ்க்கண்டவாறு அவர்கள் விவரிக்கிறார்கள்:

"உயிர் போகும் பசியால்... அன்று நான் தவித்துக் கொண்டிருந்தேன். நபித்தோழர்களில் யாராவது உணவளிக்க மாட்டார்களா என்று நினைத்தவனாய் அவர்கள் நடமாடும் வழியில் சென்று அமர்ந்து கொண்டேன்.

சிறிது நேரத் கழிந்திருக்கும்.

தோழர் அபுபக்கர் வருவதைக் கண்டேன்.முந்திக் கொண்டு சலாம் சொன்னேன். குர்ஆனின் வசனம் ஒன்றுக்கு விளக்கும் கேட்கும் சாக்கில் பேச்சுக் கொடுத்தேன்.

என்னுடைய உள்ளக் கிடக்கையை அவர் விளங்கிக் கொள்ளவில்லை.

குர்ஆனின் வசனத்துக்கு விளக்கமளித்துவிட்டு அவர் சென்றுவிட்டார்.

எனக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது.

அதன் பிறகு சற்று நேரம் கழித்துத் தோழர் உமர் வந்தார்.

முன்பைப் போலவே, சலாம் சொல்லிவிட்டு குர்ஆனின் வசனத்துக்கு விளக்கம் கேட்கும் சாக்கில் பேச்சுக் கொடுத்தேன். அவரும் பசியால் தவிக்கும் என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை.

கேட்டதற்கு பதிலளித்துவிட்டு சென்றுவிட்டார்.




என்னையே நான் நொந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். அப்போது, இறைவனின் திருத்தூதர் முஹம்மது நபிகளார் வருவதைக் கண்டேன். என்னையறியாமலேயே என் முகம் மலர்ந்தது. உள்ளத்திலும் புத்துணர்ச்சி பெருகிவிட்டது.

என்னைக் கண்டதும் முந்திக் கொண்டு நபிகளார் சலாம் சொன்னார்கள். புன்முறுவல் பூத்தவாறு அருகில் நின்றார்கள்.

நபிகளாரின் விழிகள் கவலையுடன் நோக்குவதைக் கண்டு நான் தலைக் கவிழ்ந்து நின்றேன்.

என் உள்ளத்து உணர்வுகளை ஆழத் துளைத்துக் கொண்டு செல்வதைப் போல இறைத்தூதரின் பார்வை இருந்தது.

"அபுஹீரைரா! எனதருமைத் தோழரே! வாருங்கள் என்னுடன்!"

நபிகளார் அன்பொழுக அழைத்தார்கள். எனது தோளில் கையைப் போட்டு என்னை எழுப்பி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.
         

- இறைவன் நாடினால்.. 'அருட்கொடைகள்' தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 8262406242061356438

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress