ஒரு சொல்:'பின்விளைவுகளுக்கான காரணங்கள்'


உண்மையிலேயே முஸ்லிம்கள் திருக்குர்ஆனை நம்பத்தான் செய்கிறார்கள். உயிரைவிட மேலானது என்று நினைக்கவும் செய்கிறார்கள். ஆனால், வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால்.. அவர்கள் மற்ற அனைத்தையும்விட இந்த புனித நூலுக்குத்தான் அதிகமாக அநீதி இழைக்கிறார்கள். இறைவனின் திருச்செய்திக்கு அநீதி இழைப்பதால் ஏற்படும் விளைவுகள் ஊரறிந்ததுதான்!

நன்றாக அறிந்து கொள்ளுங்கள், துன்பத்திலும், துயரத்திலும், அவமானத்திலும், அறியாமையிலும் நீங்கள் உழல வேண்டும் என்பதற்காக இறைவனுடைய வேதம் உங்களுக்கு வழங்கப்படவில்லை.

"தா ; ஹா. நீர் துன்பத்திற்குள்ளாக வேண்டும் என்பதற்காக இந்தக் குர்ஆனை உம் மீது நாம் இறக்கியருளவில்லை!" (20:1,2) என்கிறான் இறைவன்.

நன்மைக்கும், நற்பேறுகளுக்கும் ஊற்றானது திருக்குர்ஆன். தீமைகளையும், துரதிஷ்டத்தையும் கொண்டு வரக்கூடிய நூலுமல்ல அது. 

ஒரு சமூகம் இறைக்கட்டளைகளைப் பின்பற்றி நடக்கும்போது, உலகில் கேவலத்தையும், அவமானத்தையும் அடையும் வாய்ப்பேயில்லை. அவர்கள் மற்றவர் கால்களில் நசுக்கபடவும் முடியாது. அவர்களின் கழுத்தில் அடிமை விலங்குகளை பூட்டவும் இயலாது. அத்தகையவர்களின் பிடரிகளை மற்றவர்கள் பிடித்திழுத்து செல்லவும் முடியாது. ஆடு - மாடுகளைப் போல நடத்தவும் இயலாது. 

இத்தகைய விளைவுகள் எல்லாம் திருமறைக்கு அநீதி இழைக்கப்படும்போதுதான் ஏற்படுகின்றன. இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் அடைந்த இழிநிலை நமக்கு முன்னால் விரிந்து கிடக்கின்றது. 'தவ்ராத்' (மூஸா நபிக்கு அருளப்பட்ட பத்துக் கட்டளைகள் அதாவது அன்றைய பழைய ஏற்பாடு) மற்றும் 'இன்ஜீல்' (தீர்க்கத்தரிசி யேசுவுக்கு அருளப்பட்ட அன்றைய பைபிள்) நமக்கு முன் சென்று போன சமுதாயத்தாருக்கு அருளப்பட்டிருந்தன. அவர்களுக்கு இவ்வாறு கட்டளையும் இடப்பட்டிருந்தது: 

"... தவ்ராத்தையும், இன்ஜீலையம் மற்றும் தம் இறைவனிடமிருந்து தமக்கு இறக்கியருளப்பட்ட இதர வேதங்களையும் அவர்கள் முழுமையாக நிலைநாட்டியிருந்தால்.. அவர்களுக்கான ஆகாரம் மேலிருந்தும் பொழிந்திருக்கும். கீழிருந்தும் பொங்கிப் பெருகியிருக்கும். (5:66)

" இழிவும், தாழ்வும் (வீழ்ச்சியும்) அவர்கள் மீது விதிக்கப்பட்டன. மேலும், அவர்கள் இறைவனின் சினத்திற்கும் ஆளாகிவிட்டார்கள். இந்த விளைவு ஏன் ஏற்பட்டதென்றால்.. இறைவனுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டும், நபிமார்களை நியாயமின்றி கொலை செய்துக் கொண்டும் இருந்தார்கள். இந்த விளைவு ஏற்பட்டதற்குக் காரணம், அவர்கள் இறைவனுக்கு மாறு செய்து கொண்டும், (ஷரீஅத்தின்)  வரம்பை வரம்பை மீறிக் கொண்டும் இருந்ததுதான்!" (2:61)

ஆக, இறைவனுடைய திருவேதத்தைத் தம்மிடம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தவர் கேவலமான நிலையிலும், அடிமைத்தனத்திலும், தலைத்தூக்கவே முடியாத சூழலிலும் இருக்கிறார்கள் என்றால் ... அவர்கள் நிச்சயமாக இறைவனின் திருவேதத்துக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள். நம்மைச் சுற்றிச் சூழப்பட்டுள்ள அநீதிகள் எல்லாம் இதன் பின்விளைவுகள்தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

- மௌலான மௌதூதி (ரஹ்)


Related

ஒரு சொல் 310536468795033176

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress