அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 9: ஒரு ராஜாதி ராஜா .. பஞ்ச-பராரியாய்..!


>>>>>>>> வயிறார உண்ண உணவில்லை. ஆனாலும் ராஜா அவர்!
>>>>>>>> ஏழையாகவே மரணிக்க வித்யாசமான பிராத்தனை செய்தவர்!
>>>>>>>> வெறும் தலையணை, மண்பாத்திரங்கள் மகளுக்குச் சீதனமாகக் கொடுத்தவர்!

யார் அவர்?  இதோ!

நபிகள் நாயகம் தமது வாழ்வை மனித இனத்துக்கு ஒரு முன்மாதிரியாக விட்டுச் சென்றவர்கள். பசிப்பிணி, துன்பத்துயரங்கள் இவற்றை எல்லாம் சுயமாக அனுபவித்தவர்கள்.

துன்பத்துயரங்களை அனுபவித்தவர்களால்தான் மற்றவரின் பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

மக்காவின் செல்வச் சீமாட்டி அன்பு துணைவியர் கதீஜா நாச்சியார். வணிகம் நிமித்தமாக மக்காவிலிருந்து அயலகம் செல்லும் ஒட்டகங்கள் ஒரு நூறு என்றால் இந்த அம்மையாரின் ஒட்டகங்கள் ஏறக்குறைய எழுபது! இன்றைய சொல் வழக்கில் சொல்ல வேண்டும் என்றால்.. ஒரு மில்லினர் அல்ல பெரும் பில்லினர்!

அத்தகைய செல்வச் சீமாட்டியின் துணைவரான நபி பெருமானார் தொடர்ந்து மூன்று நாட்கள்கூட வயிறார உண்டதில்லை.

ஏழை-எளியோரின் வறுமையைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது நோன்பு நோற்பார்கள். ஷாபான் மாதத்திலிருந்து ரமலான் மாதம் வரை நோன்பைக் கடைப்பிடிப்பார்கள்.

பசிப்பிணியின் கொடுமையை உணர்ந்தவராய் ஏழைகளின் துன்பந்துயர் நீக்க இறைவனிடம் நெஞ்சுருக பிரார்த்திப்பார்கள்.

அரபு நாட்டின் முடிசூடாத மன்னராக இருந்த நபிகளாரின் பிராத்தனை என்னத் தெரியுமா?

"இறைவா, என்னை ஏழையாக இருக்கச் செய்வாயாக! ஏழையாகவே மரணிக்கச் செய்வாயாக! ஏழைகளுடனேயே உயிர்க்கொடுத்து எழுப்புவாயா!"

இந்த மனிதப் புனிதர்,

~~~~ குடும்பயியலில் இருந்தவாறே உலக வாழ்வில் பற்றற்றவராய்..
~~~~~ அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருந்தவாறே சாமான்யராய்..
~~~~~ செல்வச் சீமாட்டியின் கணவராக இருந்தும் ஏழையாய்.. மிக மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். வாழ்வதற்கு அவசியமான குறைந்தளவு உணவே உண்டார்கள்.

நபிகளாருக்குப் பிடித்தமான உணவு என்னத் தெரியுமா?

பார்லியால் செய்யப்பட்ட ரொட்டி!

நபிகளார் வீட்டில் பல நாட்கள் அடுப்பே எரியாது. அத்தகைய நாட்களில் வெறும் பேரீச்சம் பழங்கள்தான் அவர்களது உணவாக இருந்தது. வயிற்றுப் பசியின் கொடுமையைத் தாளாமல் வயிற்றில் கற்களைக் கட்டிக் கொள்வார்கள். தமது பசியின் வேதனையை அடுத்தவர் அறியா வண்ணம் புன்னகைத்தவாறு இருப்பார்கள்.

ஒருமுறை.

தோழர், இம்ரான் பின் ஹஸீனை (இறையருள் பொழிவதாக!) அழைத்துக் கொண்டு தமது அருமை மகள் ஃபாத்திமாவின் இல்லத்துக்குச் சென்றார்கள்.

கதவைத் தட்டியதும், உள்ளே இருந்து ஃபாத்திமா அம்மையார் "இறைவனின் மீது ஆணையாக! என்னிடம் மாற்று உடைகூட இல்லாமல் இருக்கின்றேன்!" -என்றதும் நபிகளார் தமது தோளிலிருந்த துண்டை எடுத்து மகளிடம் தந்தார்கள். அதைத் தரித்துவரும்படி பணித்தார்கள்.

வீட்டில் உண்ண உணவு ஏதுமில்லை. அருமை மகள் பசியால் வாடுவதை அறிந்ததும் நபிகளாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. அந்த வறுமை நிலையைப் போக்க நபிகளார் இறைவனிடம் பிரார்த்தித்திருக்க முடியும். ஆனால், இம்மை வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவராய்.. நிலையான மறுமை வாழ்வைக் குறித்தே அதிக அக்கறைக் கொண்டிருந்தார்கள். தம்மைச் சுற்றி இருந்தோரிடமும் அதைத்தான் போதித்தார்கள்.

அந்த இறுக்கமான சூழலிலும் அன்பு மகளை அணைத்தவாறு, "மகளே, உன்னை சுவனத்துப் பெண்களின் அரசியாக்கி இறைவன் அருள்புரிவானாக!" என்று பிரார்த்தித்தவாறு நன்மாரயம் சொன்னார்கள்.

ஒரு நாட்டின் பேரரசராக திகழ்ந்தவரின் நிலைமையைப் பார்த்தீர்களா?

நபிகளார் தம்மிடம் இருந்த செல்வத்தை எல்லாம ஏழை-எளியோர் துயர் துடைக்க வாரி வாரி வழங்கினார்கள். அதேநேரத்தில் அவர்களது அன்பு மகள் ஃபாத்திமா (இறையருள் பொழிவதாக!) ஏழ்மையில் வாடினார்கள். தமது உணவுக்கான மாவை தாமே அரைத்துக் கொள்வார்கள். வீட்டுக்கான குடிநீரை தாமே சுமந்து வருவார்கள். ஒரு சராசரி மனிதர்கூட பணியாளரை வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இவை எல்லாம் நடந்தன. எத்தனை வித்யாசமான வரலாற்று நிகழ்வுகள் இவை!

வரலாற்றில் அரசர்களின் ... அதிபர்களின் ... பிரமுகர்களின் மனைவி-மக்கள், குடும்பத்தார் அனுபவித்த உல்லாச வாழ்க்கைக்கு நேர்மாறான வரலாறு இது!

அரபு நாட்டின் மாமன்னராக விளங்கியவர் நபிகள் நாயகம். அவரின் அன்பு மகளார், இதயத்துண்டு திருமணத்தின்போது, பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்துச் சென்ற சீர்-செனத்திகள் என்ன தெரியுமா?

>>>>> ஒரு பாய்!

>>>>> ஒரு தோலாலான தலையணை!

>>>>> இரண்டு மண் பாத்திரங்கள்,ஒரு ஜாடி மற்றும் மாவரைக்கும் ஒரு கல் எந்திரம் ஆகியவை மட்டுமே!

இத்தகைய ஆளுமைப் பண்புக்குரியவரிடம் யார்தான் மயங்கமாட்டார்கள்?


---- >>>> இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 569961838893017813

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress