அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 33: 'உண்மை நன்மை தரும்!'


மனித வாழ்க்கையை ஒப்பற்றதாக்கும் போதனைகளை தருவதில் நிகரற்றவர்கள் நபிகளார். ஒருமுறை இப்படி அருளினார்கள்.

"இந்த நான்கு குணங்கள் இருந்தால் உலகில் எதுவொன்றும் உங்களுக்குக் கிடைக்காவிட்டாலும் அது உங்களுக்கு இழப்பே அல்ல!

அவை:
  • அடைக்கலப் பொருள்களைப் பாதுகாத்தல்.
  • உண்மையே பேசுதல்.
  • நற்குணத்தோடு விளங்குதல்.
  • தூய உணவு பெறுவதற்கான உழைப்பு."
(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், மிஷ்காத்)



இந்த நான்கும் ஒன்றையொன்று மிஞ்சும் நற்குணங்களாகும்.

அடுத்தவரால் ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைப் பத்திரமாகப் பாதுகாத்து... அதை உரியவரிடம் திரும்ப ஒப்படைப்பது என்பது சமூக மேன்மையின் ஒரு முக்கியப் பண்பாகும். அதேபோல, இன்ப – துன்பங்களில் உயிரே போகும் தருணங்களிலும் உண்மையே பேச வேண்டும். நற்பண்புகளே அணிகலன்களாக வாழ்வில் கொள்ள வேண்டும். உழைத்து உண்பது, அனுமதிக்கப்பட்ட வழிகளிலேயே பணம் ஈட்டுவது, அக்கிரம – அநியாய ஊழல்தனங்களில் சம்பாதிப்பதைவிட்டு விலகியிருப்பது.

-    ஆகிய இந்த நான்கும் நபிகளார் போதித்த முக்கிய விஷயங்களாகும். 




இஸ்லாமிய குடியரசின் இரண்டாவது கலிஃபா – மக்கள் தலைவர், ஜனாதிபதி உமர் (பொங்கட்டும் இறையருள்!) ஆட்சிக்காலத்தில் ஒருநாள்...

மாமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இரண்டு பேர் சேர்ந்து ஓர் இளைஞரைப் பிடித்திழுத்து வந்து கூறினர்: “ஜனாதிபதி அவர்களே, நாங்கள் இருவரும் சகோதரர்கள். இதோ இந்த நபர் எங்கள் தந்தையை அநியாயமாகக் கொலை செய்துவிட்டார். இவரை விசாரித்து தக்க தண்டனையை அளித்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும்!”

ஜனாதிபதி உமர் (பொங்கட்டும் இறையருள்!) அவர்கள் குற்றவாளியைப் பார்த்து, “இவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?” – என்று கேட்டார்கள். 

அந்த இளைஞர் சலனமில்லாமல் கூறினார்: “ஜனாதிபதி அவர்களே, நான் தவறுதலாக ஒரு குற்றமிழைத்துவிட்டேன். இவர்களின் தகப்பனார் சொன்ன ஒரு சொல் ஆத்திரமூட்டி கொலைக்கு வழிவகுத்துவிட்டது. 

நான் குற்றவாளிதான்! பொய் சொல்லி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இப்போது நான் தப்பினாலும் மறுமையில் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. 

அதனால் இம்மையிலேயெ நான் எனது குற்றத்துக்கான தண்டனையை அனுபவித்திட விரும்புகின்றேன். தயவு செய்து எனது குற்றத்துக்கான தண்டனையை அளிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.”



இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறைவேற்றுவதற்கு முன் அவருடைய கடைசி விருப்பம் கேட்கப்பட்டது.

இளைஞர் சொன்னார்:

“எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும். எனது தம்பிக்குச் சேர வேண்டிய அடைக்கலப் பொருள்கள் என்னிடம் உள்ளன. குக்கிராமத்தில் வசிக்கும் அவனிடம் நான் அவற்ற ஒப்படைத்தாக வேண்டும். அதனால், தயவுசெய்து ஒரு மூன்று நாள்கள் அவகாசம் தந்தால் என் வேலையை முடித்துவிட்டு உடனே திரும்பிவிடுவேன்!” – என்றார் பணிவோடு.

“குற்றவாளியாக இருப்பதால்.. உமது இடத்தில் வேறு யாராவது ஜாமீனாக இருந்து பொறுப்பேற்றால்.. இந்த ஆசை கண்டிப்பாக நிறைவேற்றப்படும்!” – என்றார் ஜனாதிபதி.

இளைஞர் வருத்தத்துடன் அவையை நோட்டமிட்டார். அவருடைய பார்வை நபித்தோழர் அபுதர் கிஃபாரி (இறையருள் பொழிவதாக!) மீது விழுந்தது.

“அபுதர் கிஃபாரி போன்ற நற்குணசாலியை யாருடனும் ஒப்பிட முடியாது!” – என்று நபிகளார் வாயாலேயே புகழப்பட்ட ஒப்பற்ற நபித்தோழர் அவர்.

இது நினைவுக்கு வந்ததும் இளைஞரின் முகத்தில் மலர்ச்சி!

“ஜனாதிபதி அவர்களே, இந்த உத்தம சீலர் எனக்கு ஜாமீனாக இருப்பார்!” - நம்பிக்கைக் கலந்த பணிவோடு அபுதரைச் சுட்டிக் காட்டினார்.

இளைஞரின் விருப்பப்படி ஜாமீன் பொறுப்பேற்றுக் கொண்டார் அபுதர் கிஃபாரி.

இளைஞரும் விடுவிக்கப்பட்டார்.

மூன்று நாள் கெடு முடிய இன்னும் சொற்ப நேரமே இருந்தது. இளைஞரை இன்னும் காணோம்.

குற்றவாளிக்குப் பதிலாக நிரபராதியை தண்டிக்க வேண்டிவருமே என்று அனைவரும் கவலைப்பட்டனர்.



இந்நிலையில் அந்த இளைஞர் ஓடோடி வந்தார். தாமாதத்துக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

தப்பிச் செல்வதற்கு வாய்ப்பிருந்தும்.. வாக்கைக் காப்பாற்றிய இளைஞரின் பண்பு அனைவரின் உள்ளத்தையும் தொட்டது.

உணர்ச்சிவசப்பட்டதனாலேயே அவர் குற்றவாளியானது புரிந்தது.

கொலையுண்டவரின் பிள்ளைகள் (வாரிசுகள்) குற்றவாளியை மன்னித்து விட்டனர். இளைஞரும் விடுதலைப் பெற்றார்.

நபிகளார் அறிவுரையின் செயலுருவம் ஓர் உயிரைக் காப்பாற்றியது. வரலாற்றிலும் இடம் பெற்றது.

       
-- இறைவன் நாடினால்.. அருட்கொடை தொடரும்.

Related

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 6401830077197740278

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress